ஆமையின் சன்னதக் காலம்

 


ஒரு புதிய வார்த்தை
வந்திறங்காத நாவில்
காலாதீத மூப்பின் அசைவின்மை
யாருமற்ற பிரதேசத்தில்
என்னோடு மட்டுமே முணுமுணுக்கிறேன்
கடைசியாக முத்தமிட்டவள் (அது ஆயிற்று கன காலம்)
சொல்லிப்போனாள்
ஏழுலகங்களின் தூரத்துக்கு
ஆழம்கொண்ட பள்ளத்தாக்கினுள்
விழுந்துவிட்ட
ஒரு நில ஆமை
நீயென்று

அர்த்தங்களை இழந்துவிட்ட சொற்களைவிட
மெளனத்துக்கு கூடுதல் அர்த்தமுண்டு
என்பதை நம்புகிற நீயேதான்
தன்மயக்கத்தில் மூளும்
சன்னதத்தின் சொற்கள்
வேறு லோகங்களிலிருந்து வருகின்றன
என்பதையும் நம்புகிறாய்
காத்திருக்கையில்
ஒன்று வராமலேயே போய்விடாது
அது வந்துகொண்டே இருக்கிறது…

ஒருமுறை இறங்கியது
திரும்பவும் பூமிக்கு
இறங்கும் என்பது
மூடநம்பிக்கையல்ல,
அப்படி அது இறங்கும்போது
ஏழுலகங்களின் தூரத்துக்கு
ஆழம்கொண்ட பள்ளத்தாக்கை
கண்ணிமைக்கும் நேரத்தில்
ஏறிக் கடந்துவிட்டிருக்கும்
ஆமை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிறுகதை எழுதுவது எப்படி

பருவத்தின் பேரொளி - The Museum of Innocence

நம்பிக்கையுணர்வின் மீதான சூதாட்டம் - கிறிஸ்டியன் பெட்ஸோல்டு (Christian Petzold) திரைப்படங்கள்