இசங்களைக் குறித்த எளிய குறிப்புகள் (1) - நவீனத்துவம்
19ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து 20ஆம் நூற்றாண்டின் மத்தியப்பகுதி வரைக்கும் விரிவான அறிவு மற்றும் கலை சார்ந்த இயக்கமாக நவீனத்துவம் செல்வாக்கு செலுத்தியது, வேகமான தொழில்மயமாக்கல், நகரமயமாக்கல் மற்றும் உலகப் போர்களால் ஏற்பட்ட பேரழிவுகளின் பின்னணியில் நவீனத்துவம் உருவாகியது.
அறிவியல், அரசியல், தத்துவம், கட்டிடக் கலை போன்ற துறைகளிலும் சமூகத்திலும் நீண்டகாலமாக நிலவிவந்த பாரம்பரியமான அனுமானங்களுக்கு எதிர்வினையாக எழுந்த நவீனத்துவம், புறவய உண்மை, பகுத்தறிவு, முன்னேற்றம், உலகளாவிய விளக்கங்கள் மற்றும் பெருங்கதையாடல்கள் மீதான நம்பிக்கையை வலியுறுத்தியது.
ஹென்றி ஜேம்ஸ், விர்ஜினியா வூல்ஃப், எஸ்ரா பவுண்ட், டி.எஸ். எலியட் மற்றும் லெ கார்பூசியர் போன்றவர்கள் நவீனத்துவத்தின் முக்கியமான ஆளுமைகள். இவர்கள் பாரம்பரிய அமைப்புகளை விமர்சித்து புதிய கலை மற்றும் அறிவார்த்தத் தேடல்களைச் செய்தார்கள்.
1. புறவயத்தன்மை மற்றும் உலகளாவியத்தன்மை
நவீனத்துவவாதிகள், உண்மை என்பதை ஒற்றைத்தன்மை உடையதாகவும் புறவயமானமானதாகவும் பகுத்தறிவு, அறிவியல்ப்பூர்வ பகுப்பாய்வுகளின் மூலமாக அடையாளங் காணக்கூடியதாகவும் நம்பினார்கள். உண்மை என்பது எதனுடனும் சார்புடையதாக இருப்பதில்லை, கலாச்சாரம் அல்லது மனிதர்களின் தனிப்பட்ட பார்வைக்கோணங்களில் உள்ள வேறுபாடுகளால் அது குறிப்பிடத்தக்க அளவில் மாற்றமடைவதில்லை என்றும் கருதினார்கள்.
அறிவு, அடையாளம், அறநெறி மற்றும் யதார்த்தம் ஆகியவை உலகளாவிய தன்மையையும் நிலையான நீடித்த தன்மையைக் கொண்டிருப்பதாகவும் கருதப்பட்டன.
2. யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளல்
யதார்த்தம் மனிதர்களின் அறிதலுக்கு அப்பாற்பட்டுத் “தனியாக இருப்பதாகவும்” அது மொழி, கலாச்சார நடைமுறைகள், சமூகத் தொடர்புகள் ஆகியவற்றின் மூலம் “கண்டறியப்படுகிறது” என்பதும் நவீனத்துவர்களின் வாதம். பணம், பாலினம், உண்மைகள் போன்ற கருத்தாக்கங்கள் ஏற்கெனவே “இயற்கையான” உண்மைகளாக இருப்பதாகவும் அவற்றை அறிவியல் மற்றும் பகுத்தறிவு ஆகியவற்றைக் கொண்டு புரிந்துகொள்ளமுடியும் என்றும் நவீனத்துவர்கள் நம்பினார்கள்.
3. பாரம்பரியத்தின் மீதான விமர்சனம்
பாரம்பரியக் கலை வடிவங்கள், ஒழுக்கக் கோட்பாடுகள் மற்றும் சமூக விதிமுறைகள் (குறிப்பாக விக்டோரியன் ஒழுக்கம், பழமைவாதம் போன்றவை) ஆகியவை பழமையானவையாகவும், மனித முன்னேற்றத்துக்கான தடைகளாகவும் நிராகரிக்கப்படுகின்றன. பதிலாக, நவீனத்துவவாதிகள் முன்னேற்றம், புதுமை மற்றும் உலகளாவிய மனித முன்னேற்றம் ஆகியவற்றை மையப்படுத்திய “பெருங்கதையாடல்களை” ஆதரித்தார்கள். எஸ்ரா பவுண்டின் பிரபலமான முழக்கம் “மேக் இட் நியூ” (புதிதாக உருவாக்கு) என்பது.
4. மொழியின் பங்கு
மொழி என்பது அர்த்தத்தை “வடிவமைக்கும்” அமைப்பாக அல்லாமல், யதார்த்தத்தைத் தெளிவுடன் “பிரதிநிதித்துவப்படுத்துகிற” வெளிப்படையான ஊடகமாகக் கருதப்பட்டது. நவீனத்துவம் அர்த்தத்தை, பொருட்கள் மற்றும் அனுபவத்தின் “நேரடிப் பிரதிநிதித்துவமாக” கையாண்டது. அர்த்தங்கள் நிலையானவை, நேரடியானவை மற்றும் உள்ளார்ந்த முரண்பாடுகள் இல்லாதவை என்றும் கருதப்பட்டன. இருப்பினும் பல நவீனத்துவ எழுத்தாளர்கள் பரிசோதனை, துண்டாக்கம், மற்றும் மறைமுகக் குறிப்புகள் ஆகியவற்றின் மூலம் மொழியின் எல்லைகளை விரிவுபடுத்தினார்கள்.
5. ஒருமை, வடிவம் மற்றும் தீவிரத்தன்மை
ஒருமை முக்கியமானதாக இருந்தது: வடிவத்தில் (கலை, இலக்கியம், கட்டிடக்கலை) மற்றும் மனித அனுபவத்தில், தர்க்கரீதியான, நேர்கோட்டு அமைப்புகள் மற்றும் இணைக்கப்பட்ட பார்வைகளை அது விரும்பியது. கலை மற்றும் கலாச்சாரப் படைப்புகள் தம்மில் பெரும்பாலும் புதுமை, சுருக்கம் மற்றும் தீவிர ஈடுபாட்டைப் பயன்படுத்தின. கலையில் “உயர்ந்தது” மற்றும் “தாழ்ந்தது” என்று கலை வேறுபாடுகள் பராமரிக்கப்பட்டன, அறிவார்ந்த கடுமை மற்றும் தர்க்க சிந்தனை ஊக்குவிக்கப்பட்டன.
6. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மீது நவீனத்துவம் பெரும் நம்பிக்கையை வைத்தது. யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளவும் மேம்படுத்தவும் தேவையான ஆற்றல்மிக்க கருவிகளாக இவையிரண்டும் கருதப்பட்டன. அதே நேரத்தில், அறிவியல் என்பது யதார்த்தத்தை மீறிய அதி யதார்த்தமாகக் கருதப்படாமல் உண்மைகளைப் புரிந்துகொள்வதற்கான ஒரு கருவியாகவே மட்டுமே கருதப்பட்டது. யதார்த்தம் மற்றும் அதன் பிரதிநிதித்துவம் ஆகிய இரண்டிற்கும் இடையிலான இந்தத் தெளிவான வேறுபாடு புறவய அறிவின் சாத்தியங்கள் மீதான ஆழ்ந்த நம்பிக்கையைப் பிரதிபலித்தது.
7. அதிகாரம், முன்னேற்றம் மற்றும் பகுப்பாய்வு
அறிவின் வழியாகவும் நிறுவனங்களின் மூலமும் அதிகாரம் இயங்குகிறது என்பதை நவீனத்துவம் நம்புகிறது, இது பெரும்பாலும் மையப்படுத்தப்பட்ட அதிகாரப்பூர்வமான குரல்களை வலியுறுத்தியது, அறிவியல் பகுப்பாய்வுகள், விதிமுறைகள் மற்றும் அனுபவ உண்மைகள் ஆகியவை சமூக முன்னேற்றத்திற்கான இன்றியமையாத கருவிகளாகக் கருதப்பட்டன. உரைகளுக்குள் இருக்கின்ற அடிப்படைத் தர்க்கத்தை வெளிப்படுத்தவும் உலகளாவிய மதிப்புகளை உறுதிப்படுத்தவும் நுட்பமான பகுப்பாய்வு முறைமை பயன்படுத்தப்பட்டது.
8.விமர்சனங்கள் மற்றும் சவால்கள்
மனித முன்னேற்றத்தை நவீனத்துவம் ஊக்குவித்திருந்தாலும், அதனுடைய விமர்சகர்கள், உலகளாவியத்தன்மை, பகுத்தறிவு மற்றும் பெருங்கதையாடல்கள் மீதான அதன் வலியுறுத்தல் போன்றவை, சமூகத் தனிமைப்படுத்தல், கலாச்சாரப் பிளவு மற்றும் அறிவியல் துஷ்பிரயோகத்திற்கு வழிவகுத்தது என வாதிடுகின்றார்கள். இந்தக் குறைபாடுகள் பலவும், நவீனத்துவத்தின் மைய அனுமானங்களை சவாலுக்கு உள்ளாக்கிய பின் நவீனத்துவத்தின் (Postmodernism) தோற்றத்திற்கு வழி வகுத்தன. சில விமர்சகர்கள் நவீனத்துவம் புறவய உண்மை மற்றும் தவிர்க்க முடியாத முன்னேற்றம் மீது அதிகப்படியான, கூடவே அப்பாவித்தனமான நம்பிக்கை வைத்ததாவும் குறிப்பிடுகிறார்கள்.
கருத்துகள்