இசங்களைக் குறித்த எளிய குறிப்புகள் (2) - பின்நவீனத்துவம்

உண்மை, அறிவு மற்றும் யதார்த்தம் குறித்த கருத்தாக்கங்களில் நிலவிய மரபான கருத்துக்களை மறுத்து உருவான பெரும் அறிவியக்கமே பின்நவீனத்துவம். 20ஆம் நூற்றாண்டின் மத்தியில் எழுந்த பின்நவீனத்துவச் சிந்தனையானது பெருங்கதையாடல்களின் மீதான ஐயப்பாடு, சமூகரீதியாகக் கட்டமைக்கப்படும் அர்த்தத்தின் தன்மைக்கு முக்கியத்துவம் கொடுத்தல், பன்மைத்தன்மையின் மீது கவனக்குவிப்பை நிகழ்த்துவது, வேறுபட்ட கண்ணோட்டங்களை முக்கியத்துவப்படுத்துவது போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது.

1. அடிப்படைகள் மற்றும் முக்கிய அணுகுமுறைகள்

பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் மத்திய காலம் வரை செல்வாக்கோடு இருந்த நவீனத்துவத்துக்கு எதிர்வினையாகவே பின்நவீனத்துவம் உருவானது.

முழுமுற்றான உண்மை (Objective Truth), பகுத்தறிவு, முன்னேற்றம், சமூக மற்றும் இயற்கை நிகழ்வுகளுக்கு ஒற்றைப் பொதுமையான உலகளாவிய விளக்கத்தைக் கொடுப்பது ஆகியவை நவீனத்துவத்தின் அடிப்படைகளாக இருக்கின்றன. இதற்கு மாறாக, மதம், அறிவியல் மற்றும் அரசியல் சித்தாந்தங்கள் போன்றவற்றில் இருக்கிற “அனைத்தையும் உள்ளடக்கிய விளக்கங்களை” முன்வைக்கும் சிந்தனைமுறைகளின் மீதும் “அவை உலகளாவிய உண்மைகளை வழங்குகின்றன” என்ற கூற்றின் மீதும் பின்நவீனத்துவம் சந்தேகம் கொள்கிறது.

பின்நவீனத்துவத்தின் பிரதான சிந்தனையாளர்களான ஜீன்-பிரான்சிஸ் லியோடார்ட், ழாக் தெரிதா, மிஷெல் பூகோ போன்ற சிந்தனையாளர்கள், உலகளாவிய அர்த்தக் கட்டமைப்புகளையும் அதிகாரம் உருவாகும் முறைகளையும் விமர்சனப்பூர்வமாக ஆராய்ந்தார்கள்.

2. சார்பியல்வாதம் மற்றும் பன்மைத்துவம்

யதார்த்தத்துக்கு, வரலாறு, கலாச்சாரம், மொழி போன்ற சூழல்களிலிருந்து முற்றிலும் விடுப்பட்ட சுதந்திரமான ஒற்றை புறவய விளக்கம் இல்லை என்று பின்நவீனச் சிந்தனையாளர்கள் வாதிடுகின்றனர். மாறாக, யதார்த்தத்தைப் பற்றிய நமது புரிதல்கள் இச்சூழல்களால் வடிவமைக்கப்படுகின்றன.

அறிவு, அடையாளம், ஒழுக்கம் மற்றும் யதார்த்தம் ஆகியவை பன்மைத்தன்மை கொண்டவையாகவும், சூழலுக்கு ஏற்ப மாறக்கூடியவையாகவும் கருதப்படுகின்றன. அவை மொழி, உரையாடல் மற்றும் சமூக அதிகார உறவுகளால் பாதிக்கப்படுகின்றன.

பெருங்கதையாடல்களைவிட, நுண்கதையாடல்கள் (Little Narratives), நுண்வரலாறுகள் மற்றும் பல்வேறு கண்ணோட்டங்களுக்கு பின்நவீனத்துவம் முக்கியத்துவம் அளிக்கிறது.

3. யதார்த்தத்தின் சமூக கட்டமைப்பு

சமூக யதார்த்தம் என்பது மொழி, கலாச்சார நடைமுறைகள், நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடாட்டங்களின் மூலம் கட்டமைக்கப்படுகின்றது என்று பின் நவீனத்துவம் வாதிடுகிறது. அது ஏற்கெனவே “இருந்து” கண்டறியப்பட்ட ஒன்றல்ல.

செல்வம், பாலினம், உண்மைகள் போன்ற கருத்தாக்கங்களானவை வரலாறு, கலாச்சாரம் மற்றும் மொழியியல் தளங்களில் நிகழும் செயல்முறைகளின் “விளைவுகளே”. மனித நினைவின் தோற்றத்துக்கு முன்பே இருந்த “இயற்கையான” உண்மைகள் அல்ல அவை.

4.பெருங்கதையாடல்களின் மீதான விமர்சனம்

அனைத்து மனித அனுபவங்களையும் விளக்கி ஒழுங்குபடுத்துவதாகக் சொல்லும் பெருங்கதையாடல்கள் (மார்க்சியம், அறிவொளிக்கால பகுத்தறிவு, சில மதக் கோட்பாடுகள் போன்றவை) மிகவும் எளிமைப்படுத்தப்பட்டவை என்றும் பல சந்தர்ப்பங்களில் அதிகாரத்தைக் கைப்பற்றி நிலைநிறுத்துவதற்கான வழிமுறைகளாகவும் விமர்சிக்கப்பட்டு நிராகரிக்கப்படுகின்றன.

“பெருங்கதையாடல்களின் மீதான அவநம்பிக்கை” என்பதே பின் நவீனத்துவம் குறித்த லியோடார்ட்டின் புகழ்பெற்ற வரையறையாகும். இவற்றுக்கு மாறாக நுண் மற்றும் உள்ளூர், வட்டாரக் கதையாடல்களை பின்நவீனத்துவவாதிகள் முன்னிறுத்துகிறார்கள்.

5. மொழியின் பங்கு

மொழி என்பது யதார்த்தத்தை பிரதிபலிக்கும்/ பிரதிநிதித்துவப்படுத்தும் வெளிப்படையான ஊடகமல்ல, மாறாக நாம் யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளும் விதத்தை வடிவமைக்கின்ற அமைப்பாகும்.

தெரிதாவின் கட்டுடைத்தல் (Deconstruction) கருத்தின்படி, அர்த்தம் ஒருபோதும் முழுமையாக நிலைபெறுவதில்லை. ஒரு சொல்லின் அர்த்தம், அது பிற சொற்களிலிருந்து வேறுபடுவதன் மூலமும், அவற்றுடனான உறவுகளின் மூலமும் உருவாகிறது.

எனவே, "இறுதியான அர்த்தம்" என்ற ஒன்று எப்போதும் ஒத்திவைக்கப்பட்டுக்கொண்டே இருக்கும்.

6. துண்டாக்கம் (Fragmentation) மற்றும் விளையாட்டுத்தன்மை (Playfulness)

கலை, இலக்கியம், கட்டிடக்கலை போன்ற வடிவங்களிலும் அவற்றின் அனுபவங்களிலும் துண்டாக்கம் என்பது முக்கியமான திறப்பு. பின்நவீனத்துவம் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத, நேர்கோட்டில் இல்லாத, சமயங்களில் முரண்பாடான கண்ணோட்டங்களையும் ஏற்றுக்கொள்கிறது.

கலை மற்றும் பண்பாட்டு படைப்புகள் பெரும்பாலும் “நகல்கதம்பம்” (pastiche), முரண் (Irony), அங்கதம் (Parody) மற்றும் பல்லர்த்தங்கள் தொனிக்கக்கூடிய விளையாட்டுத்தன்மை அகியவற்றை அடிக்கடி பயன்படுத்துகின்றன.

கலையில் உயர்ந்தது தாழ்ந்தது என்ற தகுதி அடிப்படையிலான வேறுபாடுகளை பின்நவீனத்துவம் கேள்விக்குற்படுத்துகிறது.

7. மிகை யதார்த்தமும் ஊடகமும்

வெகுஜன பிரபல்யக் கலாச்சாரம், விளம்பரங்கள், சமூக ஊடகங்களில் இருப்பதுபோல ஊடகக் காட்சிகளும் உருவகப்படுத்தல்களும் “யதார்த்தத்தைவிட அதிக யதார்த்தமாக மாறிவிடும் நிலையை” விவரிக்கிறது போத்ரியாரின் “மிகை யதார்த்தம்” என்ற கருத்தாக்கம்.

நேரடியான உண்மை என்ற சாத்தியத்தின் மீதான பின்நவீனத்துவத்தின் ஐயப்பாடானது யதார்த்தத்துக்கும் அதன் பிரதிநிதித்துவத்துக்கும் இடையில் நேர்ந்துவிட்ட மங்கலாக்கத்தால் பிரதிபலிக்கப்படுகிறது.

8. அதிகாரம், அடையாளம் மற்றும் கட்டுடைத்தல்

மொழி, நிறுவனங்கள். கலாச்சாரப் பிரதிகள் மற்றும் சமூக நடைமுறைகள் வழியாக அதிகாரம் எவ்வாறு இயங்குகிறது என்பதை பின்நவீனத்துவம் நெருக்கமாகக் கவனிக்கிறது, புறக்கணிக்கப்பட்டிருந்த விளிம்புநிலைக் குரல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நிறுவப்பட்டிருக்கும் அதிகார அமைப்புகளை அது கேள்விக்குட்படுத்துகிறது.

அதிகாரம் மற்றும் அறிவு குறித்த பூக்கோவின் ஆய்வுகள், சமூக நடைமுறைகளின் வழியாக விதிமுறைகளும் உண்மைகளும் எவ்வாறு உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.

பூக்கோவின் அதிகாரம்–அறிவு (Power–Knowledge) பற்றிய ஆய்வுகள், சமூக நிறுவனங்கள் மற்றும் நடைமுறைகள் வழியாக “உண்மைகள்” மற்றும் “விதிமுறைகள்” எவ்வாறு உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன என்பதை விளக்குகின்றன.

ஒரு பிரதிக்குள் இருக்கும் முரண்பாடுகளை வெளிக்கொணர்ந்து, நிலையான அர்த்தம், ஒரே அடையாளம் மற்றும் உலகளாவிய மதிப்புகள் பற்றிய கருதுகோள்களை கேள்விக்குட்படுத்தும் வாசிப்பு முறையாக தெரிதாவின் கட்டுடைத்தல் இருக்கிறது.

9. பின்நவீனத்துவம் விமர்சனங்களும் சவால்களும்

பின்நவீனத்துவம் புறக்கணிக்கப்பட்ட கண்ணோட்டங்களுக்கு இடமளித்து கலாச்சாரப் பன்மைத்தன்மையை ஆதரித்தாலும், விமர்சகர்கள் இது மிகையான சார்பியல்வாதத்துக்கு வழிவகுக்கக்கூடும் என்றும் உண்மை, ஒழுக்கம் மற்றும் அறிவியலுக்கான பொதுவான அடிப்படைகளை உருவாக்குவதை கடினமாக்கும் என்று வாதிடுகிறார்கள்.

மேலும், புறவய உண்மை மற்றும் முன்னேற்றம் பற்றிய அதன் ஐயப்பாடு, சில நேரங்களில் சூன்யவாதம் அல்லது அளவுக்கு மீறிய அவநம்பிக்கையை ஊக்குவிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

அதேவேளை, பின்நவீனத்துவத்தை ஆதரிப்பவர்கள், அது உண்மை அல்லது அறிவியலை முற்றிலும் மறுப்பதில்லை; மாறாக, உலகளாவிய உறுதியான உண்மைகள் என்ற கூற்றையும், அறிவு உருவாகும் வரலாற்று மற்றும் சமூகச் சூழல்களை விமர்சன ரீதியாக ஆராய்கிறது என்று குறிப்பிடுகிறார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நம்பிக்கையுணர்வின் மீதான சூதாட்டம் - கிறிஸ்டியன் பெட்ஸோல்டு (Christian Petzold) திரைப்படங்கள்

சிறுகதை எழுதுவது எப்படி

பருவத்தின் பேரொளி - The Museum of Innocence