அழகு உருவம் - அழகு அருவம்

நாம் பெரிதும் நாயக மனோபாவம் கொண்டவர்கள். அது நம் மரபிலேயே இருக்கிறது. சங்ககால அகப்பாடல்களில் கூட ஆணின் வீரமும் தீரமும் கொடையும் போற்றப்பட்டிருக்கின்றன. ஒரு நாயகன்/நாயகி என்போர் நம்மால் அடையமுடியாத ஆசைகளை, நமக்குச் சாத்தியமாகாத சாகசங்களை நிகழ்த்திக் காட்டுகிறவர்கள். அழுக்கும் வியர்வையும் படிந்த நம் உடல்களுக்கு மெய்நிகராக அமையும் தூய்மையான, ஒளிரும் மாதிரிகள். அதற்கும் அடியிலிருந்து நம் நாயக மனோபாவத்தை இயக்குவது நம்முடைய பாலிச்சை. நாயகத்தன்மை என்பது அழகின் இன்னொரு வடிவம்.

முதலாளித்துவ நவதாராளவாதம் இந்த வாழ்க்கையின் அடையத்தக்க வெற்றிகளில் மிகப் பிரதானமானதாக பாலியல் துய்ப்பை நிலைப்படுத்தியிருக்கிறது. அதனால்தான் ஆரோக்கியமான உடல்களை விட, துல்லியமான கணிதமும் கட்டுக்கோப்பும் கொண்ட உடல்கள் முன்னிறுத்தப்படுகின்றன.

மனித உடல்தோற்றம் குறித்த நம்முடைய அழகியல் பார்வையில் அறிவையும் தர்க்கத்தையும் கடந்து உயிரியல் சார்ந்த விழைவுகளும் இருக்கின்றன. அது நிறம் மற்றும் வடிவம் மீதான ஈர்ப்பு என்பதைவிடவும் “இளமை” என்பதோடு தொடர்புடையது. எந்தவொரு உயிராக இருந்தாலும் இளமையின் உச்சத்தில் அதன் உடல் அதற்குச் சாத்தியமான பூரணத்துக்கு நெருக்கமாக இருக்கிறது. இளமை கடந்துவிட்ட பிறகு நாம் அதற்காக ஏங்குகிறோம். கழிந்துவிட்ட இளமையின் நகல்வடிவமாய் நம் உடலைப் பராமரிக்க விழைகிறோம்.

நமது விளம்பரங்கள் பெரும்பாலும் இந்தப் பொருளைப் பயன்படுத்தினால் உங்களுடைய காதல் வாழ்க்கை மெருகேறும் என்று சொல்லாமல் சொல்கின்றன. சீர்மை குறைவுபட்ட உடல்தோற்றங்களை நாம் பகடி செய்கிறோம். கல்லூரிக் காலத்தில் எனக்கொரு நண்பர் இருந்தார், எவரை முதன் முதலில் பார்த்தாலும் அவர்களுடைய உடற்தோற்றத்தை வைத்து கிண்டல் செய்வார். அதுவொரு நோயாகவே அவருக்கு இருந்தது( ஆனால் மனித மனங்களில் உங்களை மறக்காமல் பதித்து வைக்க அதுவொரு எளிய வழி, உங்கள் உடற்தோற்றத்தைப் பகடி செய்தவர்களை நீங்கள் சாகும் வரை மறக்க மாட்டீர்கள்.)

ஆயிரமாயிரம் வருஷங்களாக உடலைக் குறித்த உரையாடலை கீழைத்தேயத்தின் மெய்யியல், தத்துவம் மற்றும் மருத்துவப் பிரதிகள் நிகழ்த்திவந்தாலும் இன்றைக்கு நாம் மேற்கு முன்வைக்கும் அழகின் ”தற்காலிகத்தில்” மெய் மறந்துவிட்டோம்.

இருபது வருஷங்களுக்கு முந்தைய ஒரு ஆனந்த விகடன் பேட்டியில் “ நீங்கள் ரொம்ப காலமாகப் பாதுகாத்து வரும் பொருள் எது?” என்ற கேள்விக்கு “கொஞ்சம் பெரிஷபிள் ஐட்டம்தான், உடம்பு” என்று கமல்ஹாசன் சொல்லியிருந்தார். தமிழ்த் திரையின் ஒரு காலகட்டத்தின் காதல் மன்னனாகப் போற்றப்பட்டவருக்கு அந்தப் புரிதல் இருந்தது அபூர்வம்தான்.

அழகை வியப்பதும் கொண்டாடுவதும் முக்கியம்தான். அது வாழ்க்கையின் வண்ணங்களைக் கூட்டுகிறது. ஆனால் அழுகிப் போகும் விஷயங்களின் அழகுக்கு காலாவதித் தேதி இருக்கிறது. அழகு திரியும்போது அந்தச் சிதைவை நம் மனம் சீந்துமா? கசப்பின்றி, அசூயையின்றி நிர்க்குணத்தோடு உற்றுப் பார்க்க முடியுமா?

வாழ்க்கையின் மெய்யான அழகு, உருவத்துக்குப் பின்னால், உருவற்றதாக நின்றுகொண்டிருக்கிறது. உருவம் என்பது தற்காலிக ஒளி, அதைக் கடந்துதான் நிரந்தரமான ஒளியைக் கண்டுபிடிக்க முடியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நம்பிக்கையுணர்வின் மீதான சூதாட்டம் - கிறிஸ்டியன் பெட்ஸோல்டு (Christian Petzold) திரைப்படங்கள்

சிறுகதை எழுதுவது எப்படி

பருவத்தின் பேரொளி - The Museum of Innocence