ஜாடிக்கு வெளியே இருக்கும் பூதங்கள்
தமிழில் தலித் எழுத்தையும் சினிமாவையும் ”நிலத்தை” மையமாக வைத்து மதிப்பிடுவது வேறொரு கோணத்தில் சரியான அணுகுமுறையாக இருக்கும். இன்னொரு விதமாகச் சொல்வதென்றால் சாதியை நகர்ப்புற மற்றும் கிராமிய தலித் சமூகத்தினர் எப்படி அணுகுகிறார்கள் என்று யோசிப்பது.
சாதிய அடுக்கில் தமக்கு மேலே வைக்கப்பட்ட சமூகங்கள் கொடுக்கும் அழுத்தங்களிலும் பாதிப்புகளிலும் பெரிய வேறுபாடு இல்லையென்றாலும் நகர்ப்புறம் சார்ந்த தலித் தரப்புக்கு சற்று உரத்த தன்மையும் கிராமியம் மற்றும் நிலவுடமையோடு புழங்கிய தலித் தரப்புக்குக்கு சற்று பொறுமையும் இருக்கின்றன என்பது என் யூகம். பொறுப்புணர்வு மிக்க ஒரு அண்ணன், துடிப்புமிக்க ஒரு தம்பி என்பதைப் போல.
நிலத்தை உடைமையாகக் கொண்டிருக்கிற, வாழ்வாதாரங்களை நிலத்திலிருந்தும் அது சார்ந்த தொழில்களிலிருந்தும் பெற்றுக் கொள்கிற தலித் சமூகங்களிடையே “நிலம் சார்ந்த ஒரு பண்பாட்டு அடையாளம்” தொந்தரவாகவோ சுமையாகவோ இருப்பதில்லை என்று யூகிக்கிறேன், அங்கே மனிதர்களின் சாதிய வல்லாதிக்கம்தான் களைய வேண்டிய தீமை. மாறாக நிலவுடைமைக்கு வெளியே இருக்கும் தலித் தரப்புக்கு நிலம் என்பது ஆதிக்க சாதிகளின் அதிகார வடிவமாகவும் குறியீடாகவும் இருக்கிறது, நிலவுடமையிலிருந்து தோன்றியிருக்கக் கூடிய எந்தவொரு பண்பாட்டு அடையாளத்துக்கும் வெளியே, தம்மை ஒரு “பண்பாட்டு அந்நியர்” என்ற நிலையில் வைத்துக்கொள்வது உரையாடலுக்கு வசதியாக இருக்கும் என்று அவர்கள் கருதக்கூடும்.
தமிழின் “மாஸ்டர் பீஸ்” நாவல்களில் ஒன்றான அழகிய பெரியவனின் “தகப்பன் கொடி” நாவலே எனக்கு இந்த யோசனைகளைக் கொடுத்தது. அந்த நாவல் மூன்று விதங்களில் மிக முக்கியமானது. முதலாவது பட்டியல் இனத்தவரின் நிலம் சார்ந்த உரிமைகள் எப்படிப் பறிக்கப்படுகின்றன என்பதை பஞ்சமி நில மீட்பு என்ற கோணத்தில் பேசியது. இரண்டாவதாக, நிலம் பிடுக்கப்பட்டவன் தன் தொப்புள்கொடி உறவுகளை அறுத்துகொண்டு இடம்பெயர வேண்டியிருப்பதின் வலியை ரத்தமும் சதையுமாக ”தந்தை வழி” யைக் குறியீடாகக் கொண்டு சித்தரித்திருந்தது . மூன்றாவது கூத்து என்ற வடிவத்தைக் கொண்டு மனிதர்களுக்கு கலை அளிக்கும் விடுதலையைப் பேசியது.
தகப்பன் கொடியோடு இணைத்து வாசிக்கத்தக்க இன்னொரு நாவல் சோ.தர்மன் எழுதிய சூல் நாவல். அதில் நாம் காணும் தலித் சமூகத்தினர் நிலத்தை உடைமையாகக் கொண்டவர்கள். ஆனால் நாவலின் இறுதிப்பகுதியில் குறியீட்டு அம்சமாக வெளிப்படும் திராவிட ஒவ்வாமையும் வலதுசாரிப் பார்வையோ என்று சந்தேகிக்க வைக்கும் சில அம்சங்களும் “சூல்” நாவல் குறித்த இன்னும் விரிவான உரையாடலைக் கோருகின்றன.
இருவருடைய அரசியலையும் மதிக்கின்ற அதே வேளையில், பா. ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜின் திரைப்படங்களில் இந்த வேறுபாடு தெரிகிறது. ரஞ்சித்தின் படங்களில் “அடங்க மறு” என்ற நோக்கும் மாரியின் படங்களில் “வா, உட்கார்ந்து பேசலாம்” என்று எதிர்தரப்பை அழைக்கும் நோக்கும் இருக்கின்றன. அதே போல் தொடர்ந்து நிலம் சார்ந்த பண்பாட்டுக் கூறுகளை நாய், குதிரை, பன்றி, எருது என்று விலங்குகளை மாரி செல்வராஜ் குறியீடாகப் பயன்படுத்துவதையும் பார்க்கிறோம். மாறாக ரஞ்சித்தின் படங்களில் பிரதேச அடையாளங்களைவிட குறியீடுகள் புனைவுத்தன்மை மிக்கவையாகத் தெரிகின்றன.
கலைக்கு வெளியிலும் நாம் ஒடுக்கப்பட்டோர் அரசியலை, நிலவுடமையை முதன்மையாக வைத்துப் புரிந்துகொள்வது முக்கியமானது. நிலவுடமை சமூகச் சூழலைப் பொறுத்தவரை தாராளமயமாக்கலும் பிந்தைய தொழில் வளர்ச்சியும் ஏற்படுத்தியிருப்பது சாதியிறுக்கத்தில் ஒரு சிறு தளர்வே அன்றி விடுதலை அல்ல. இதைத் தளர்வு என்று சொல்வதுகூட சரியாக இருக்குமா என்று தெரியவில்லை, ஒருவித “மெளனம்” என்று சொல்லலாம், அவ்வளவே. தொழில் வளர்ச்சி, தலித் சமூக மக்களுக்கு நிலம் சார்ந்த வேலைகளிலிருந்து விடுதலையை அளித்ததால், தினசரி சந்தித்துக்கொள்ள வேண்டிய தேவை இல்லாத, வாழ்வாதாரத்துக்கு பரஸ்பரம் நம்பிருக்காத நிலை ஏற்பட்டிருப்பதால் இன்றைய தேதியில் “ஊரும் காலனியும்” தங்கள் மெளனங்களோடு தனித்தனியாக இருந்துகொண்டிருக்கின்றன.
ஆனால் பிறகு, தொழிலதிபர்களாகவும் விவசாயத்துக்குப் பதிலாக ரியல் எஸ்டேட் தொழிலை கையில் வைத்துக்கொண்டிருப்பது யார், அவற்றில் தலித்துகளின் விகிதாச்சாரம் என்னவென்று யோசித்தால், சாதியச் சிக்கல் தன்னியல்பாகவே வர்க்கச் சிக்கலாகவும் மாறிவிடுகிறது, வர்க்கத்தின் சட்டையைப் போட்டுக்கொண்டு சாதி அப்படியேதான் இருக்கிறது. ஆனால் அது பிரச்சனையின் ஒரு பரிணாமம்தான். தனக்கு இருக்கும் உரிமையும் சுதந்திரமும் உலகில் மற்றெல்லோருக்கும் உண்டு என்பதையும் அவற்றை சாதி உள்ளிட்ட எவ்விதமான துவேஷங்களின் பெயரினாலும் மறுப்பது மானுடத்தன்மைக்குப் புறம்பானது என்ற புரிதலை மனிதர்கள் அடைவதற்குமான இடைத்தூரத்தில் லட்சோப லட்சம் பூதங்கள் நின்றிருக்கின்றன
கருத்துகள்