இரு கோள் இடைத்தூரம்
அடுப்பில் கறி வேகும் வாசனை உறக்கத்தைக் கலைத்து எழுப்பியது. அம்மாவின் கைப்பக்குவமான செலவு மணம். சின்ன வெங்காயத்தை மொட்டாகத் தொலித்து கொத்துமல்லி தனியா, வற மிளகாய், தேங்காய்த் துருவல் சேர்த்து வணக்கி அம்மியில் அரைத்த செலவு. கறிக்குழம்பு என்றில்லை, அம்மா அரைத்து வைக்கும் எல்லா குழம்புமே நல்ல ருசிதான்.
போர்வையை விலக்கிவிட்டு செல்போனை பார்த்தான்.
பத்தரை ஆகியிருந்தது. இரண்டு மிஸ்டுகால்கள் இருந்தன. ஏழரைக்கும்
எட்டேமுக்காலுக்கும் வாசுகி அத்தை கூப்பிட்டிருக்கிறாள். குருவாயூருக்கு சவாரி
போய்விட்டு பின்னிரவு இரண்டு மணிக்குத்தான் திரும்பியிருந்தான். சோம்பலோடு எழுந்தவன்
கழுத்தையும் இடுப்பையும் நெட்டி முறித்து சடவை வெளியேற்றினான்.
கரண்டியோடு அம்மா எட்டிப்பார்த்தாள்.
கடுகடுப்பானவள்தான், ஆனால் தன் வாழ்க்கையின் ஒரே வெற்றியாக அவள் நினைக்கும்
மகனின் அண்மையில் மனமும் முகமும் மலர்ந்துவிடும்.
“கொழம்பும் வறுவலும் ஆகறதுக்கு இன்னும்
நேரமாகும், சட்னி இருக்குது. தோசை சுட்டுத் தருட்டா?”
“இல்லீம்மா, மதியமாவே
சாப்பிட்டுக்கறேன். இப்ப டீ மட்டும் கொடு”
வாசற்பந்தலில் கிடந்த நாற்காலியில் அமர்ந்து
தோட்டத்தைப் பார்த்தான். அம்மாவினால் வரையப்பட்ட ஒவியக் காட்சி. தென்னைகளின் பச்சை
ஏறுவெயிலுக்குத் தகதகத்தது. கிழக்குப் பார்த்த வீட்டிற்கு முன்னிருந்த வயலில்
பாதிக்கு காய்கறிச் செடிகளும் மீதிக்கு மசால் புல்லும் போட்டிருந்தாள். கோழி
புகுந்து கிளறாமல் இருக்க நாலடி உயரத்துக்கு பச்சை வலை வேலி போட்டிருந்தாள்.
பாத்திகளில் ஈரம் சொதும்பித் தெரிந்தது.
“நீ போன எடுக்கலீன்னு வாசுகி அத்தை எனக்குக்
கூப்டுட்ருந்தது, ராத்திரி நேரமாயி வந்து தூங்கிட்டு இருக்கறன்னு
சொல்லிருக்கறன், நாளைக்கி லதாவ ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போகணும்னு
சொல்லுச்சி” டீயைக் கொடுத்தவாறு சொன்னாள்.
“நாம் பேசிக்கறணம்மா”
“நேத்து புரோக்கர் ரெண்டு ஜாதகம் கொண்டாந்தாரு,
பொருத்தம்
பாக்கறதுக்கு சேகர் அண்ணங்கிட்டப் போகணும், அதயும் இதயுஞ்
சொல்லிக்கிட்டே இருக்காத, குருபலன் முடியறதுக்குள்ள எதாவது அமையணும்”
“புதன்கிழமை போலாம்மா”
அம்மா விடமாட்டாள், சில வருஷங்களாக அவனுடைய
திருமணம் மட்டுமே அவளுக்கு ஒரே குறிக்கோளாக இருக்கிறது. ஜாதகங்களைச் சலித்துக்
கொண்டிருக்கிறாள்.
“ரொம்ப நேரம் உக்காந்துக்காதே, சீக்கிரம்
வந்து சாப்புடு” வாசலிலிருந்து நகர்ந்தபோது சொன்னாள். எங்கு போவான் என்று
அவளுக்குத் தெரியும்.
தென்புறச் சாய்ப்பில் நிறுத்தியிருந்த
காருக்குள்ளிருந்து சிகரெட் பாக்கெட்டை எடுத்துக்கொண்டான். வண்டித்தடத்தின்
மறுபுறத்தில் நான்கடி உயரத்துக்கு உயர்த்தி அமைக்கப்பட்டிருந்த கோழிக் கூண்டுகள்
திறந்துகிடக்க கோழிகள் தோப்புக்குள் குஞ்சுகளோடு திரிந்தன.
தோப்பு குளுமையாக இருந்தது. மரங்கள் நோய்
கண்டு காய்ப்புக் குறைந்துவிட்டது. இது தோப்புகள் அழியும் காலம், ஒன்று
பெருகி வதிபடும்போது இயற்கையின் சுத்திகரிப்பு தன்னிச்சையாக நடக்கிறது. உழவு
ஓட்டப்பட்ட வயல்கள் புல் பூண்டுகளின்றி இருக்க வரப்புகளில் மட்டும் பச்சை
படர்ந்திருந்தது. கறுப்பு நிற சொட்டுநீர்க் குழாய்கள் குறுக்கு மறுக்காகக்
கிடந்தன. அம்மாவுக்கு களை ஏறுவது பிடிக்காது, டிராக்டரை வரச்சொல்லி
சுத்தமாக ஓட்டிவிடச் சொல்லிவிடுவாள், மருந்து அடிக்க மாட்டாள்.
கிணற்றில் பச்சைநீர் ஏறுவெயிலுக்குத்
தகதகத்தது. தெற்கு வடக்காக ஓடிய சிறு வாய்க்காலின் பாலத்தைக் கடந்து
இளந்தென்னைளின் வயலுக்குள் போகும்போது வீடு பார்வைக்கு மறைந்துவிட்டது. வயலின்
முடிவில் கிழக்குப்புறச் சரிவிலிருந்த சிறு தடுப்பணையில் நீர் மெல்லிய வெண்ணிறத்
துகிலாக வடிந்து கொண்டிருந்தது. இருகரைகளிலும் நாணல்கள் செழித்திருந்தன. நிழலில்
அமர்ந்தவாறு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டான். லதாவின் ஞாபகத்தில் அனிச்சையான
பெருமூச்சோடு வாசுகி அத்தைக்கு அழைத்தான். மறுமுனையில் குரல் ஒலிப்பதற்கு முன்னரே
கேட்டான்.
“காலைல எத்தனை மணிக்கு வரதுங்க அத்தை?”
“அம்மா குளிக்கறாங்க, சீக்கிரமா போனாத்தான்
டோக்கன் போடமுடியும், ஏழு மணிக்கு வந்துடறியா” லதா கேட்டாள்.
“சரி, ஆறரைக்கு வந்துடறேன். அத்தகிட்ட சொல்லிடு”
லதாவின் ஆமோதிப்பு ஒலியைக் கேட்டுவிட்டு
இணைப்பைத் துண்டித்தான். சிகரெட்டை விசிறிவிட்டு செல்போனில் சேமித்திருந்த லதாவின்
புகைப்படங்களை ஒவ்வொன்றாகப் பார்க்க ஆரம்பித்தான்.
***
பிபிஏ
முடித்தபோது எதிர்காலம் குறித்த திட்டங்கள் எதுவும் இருந்திருக்கவில்லை. தொலைதூரக்
கல்வியில் எம்பிஏ சேர்ந்தான். பொருளாதாரச் சிக்கல்கள் இல்லை. தோப்பு இருக்கிறது,
அம்மா
சேர்த்தும் வைத்திருக்கிறாள். ஒரே மகனை தூரத்துக்கு அனுப்புவதற்கு அவளுக்கு
மனமில்லை. உலகம் தூரத்தில் இருக்கிறது என்பது ஒரு பாவனை, அது நாம் இருக்கும்
இடத்தில்தான் என்ற யோசனையில் அவனும் இருந்துவிட்டான்.
நிதிச்சந்தையில் விற்பனைப் பிரதிநிதியாக கோவை,
திருப்பூர்,
பழனி,
பொள்ளாச்சி
என்று இரண்டு வருஷங்கள் வேலை செய்தான். மாதாந்திர இலக்குகள் கடுமையாக இருக்க
இருசக்கர வாகனத்திலும் பேருந்திலுமாக அலைச்சல் சலிப்பூட்டியது. சம்பள உயர்வுக்கான
வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டனவோ தவிர வேலையின் பளுவையும் களைப்பையும்
போக்குமளவுக்கான சம்பளம் கிடைக்கவில்லை. ஒருகட்டத்தில் அது சலித்துப்போய்
விலகிவிட்டான்.
கார் ஓட்டுவதில் பெரிய ஆர்வம் இருந்தது.
பதினெட்டு வயது பூர்த்தியானவுடனே லைசென்ஸ் எடுக்க வைத்து காரையும் வாங்கி
நிறுத்திவிட்டாள் அம்மா. சாலைகளின் வழியே புதிய காட்சிகளைக் கண்டவாறு வண்டி
ஓட்டுவது மனக்கிளர்ச்சியையும் நிறைவையும் கொடுத்தது. வாடகைக்கு கார் ஓட்டப்போகிறேன்
என்று சொன்னபோது அந்தஸ்த்துக்கு குறைச்சலான வேலை என்று அம்மா ஒத்துக்கொள்ளவில்லை.
சில வருஷங்கள் புழங்கி பிறகு ட்ராவல்ஸாக விஸ்தரிக்கப் போவதாக கூறினான். அரைமனதோடு
ஏற்றுக்கொண்டாள்.
முதலில் ராத்தங்கல் தேவைப்படாத உள்ளூர்
சுற்றுப்புறங்களில்தான் ஓட்டினான். பிறகு அதிகமும் கிழக்கேயும் தெற்கேயும் கோவில்
நகரங்களுக்கு கூப்பிட்டார்கள். மேற்கே கேரளாவுக்குள் பலமுறை போயிருக்கிறான்.
வடக்கே கர்நாடகாவில் ஹம்பிக்கு ஒருமுறை போகவேண்டியிருந்தது. ஒயிட் போர்டு வண்டி,
வெளியூர்
பயணங்களில் வாகனச் சோதனைக்கு நிறுத்தப்பட்டால் சொந்தக்காரப் பையன் என்று கூறும்படி
சொல்லிவிடுவான். பெரும்பாலும் வாடிக்கையாளர்கள் தெரிந்தவர்கள், தெரிந்தவர்களுக்குத்
தெரிந்தவர்கள் என்றே இருந்தார்கள். அப்படித்தான் வாசுகி அத்தைக்கு வண்டியோட்டப்
போனதும்.
ஒன்றுவிட்ட ஒன்று என்று சுற்றி வளைத்து
வாசுகி அத்தை தூரத்துச் சொந்தம்த. அம்மாவைப்போல தனி மனுஷியாகவே நின்று காட்டியவள்.
லதாவுக்கு ஒன்பது வயதானபோது சபலக்காரரான மாமனுக்கு இன்னொரு குடும்பம்
ஏற்பட்டுவிட்டது. அவரிடமிருந்து பிரிந்துவிட்டாலும் அத்தை விவாகரத்து வாங்கிக்கொள்ளவில்லை.
அவளுடைய அம்மா எழுதிவைத்த ஆறு ஏக்கரா
தோப்பும் லதாவின் தந்தையிடமிருந்து எழுதி வாங்கியிருந்த ஆறு ஏக்கரா தோப்புமாக
அத்தையிடம் சொத்தின் பிடிமானம் இருந்தது. லதாவின் தாய்மாமன் வரப்போக இருந்தாலும்
காரியத்துக்கு ஆகாத குடிகாரர். தோப்பைப் பார்த்துக்கொள்ள பொறுப்பான ஆள்க்கார
குடும்பம் கிடைத்தது. அத்தை பொள்ளாச்சியில் வீடு கட்டிக்கொண்டு வாரத்துக்கு
ஓரிருமுறை தோப்புக்குப் போய் நிர்வாகம் பண்ணிக்கொண்டிருந்தாள்.
இவனும் லதாவும் ஒரே கல்லூரியில்தான்
படித்தார்கள். அவள் கம்ப்யூட்டர் சயின்ஸ். லதாவுக்கு அப்படியே வாசுகி அத்தையின்
சாயல், உற்றுப் பார்க்கும்போது அழகு பெருகிக்கொண்டே போகும் பெண். எப்போதும்
வெளிர்நிற ஆடைகளையே உடுத்துவாள். ஆனால் குணத்தில் ஒரு மெல்லிய அழுத்தம் உண்டு,
எதையும்
சட்டென்று வெளிப்படுத்தமாட்டாள். அவனை ஒருமையில்தான் கூப்பிடுவாள். அவ்வப்போது
ஐஸ்கீரிம் சாப்பிட ஒன்றாகப் போவார்கள். ஆண் என்ற அடையாளத்தை உரத்து உணர்ந்த
பருவத்தில் கைக்கெட்டும் அருகாமையில் இருந்த பெண்ணான லதாவின் மீதான ஈர்ப்பின்
சுழல் அவனை அலைக்கழித்தது.
ஆயிரமாயிரம் மனத்தழுவல்கள் கூட்டிவைத்த
நெருப்பின் வெம்மை தாளாமல் காதலை அவளிடம் சொன்னபோது”விளையாடாத ரவி’ என்று
புன்சிரிப்போடு நகர்ந்துவிட்டாள். இரண்டாவது முறை சொன்னபோது சலிப்பாய் உச்சுக்
கொட்டினாள். சகலவிதத்திலும் தான் அவளுக்குப் பொருத்தமானவன், அவள் தன் காதலை
மறுக்கமாட்டாள் என்று நினைத்து ஏமாந்துவிட்டான். பிறகு அவளைப் பார்க்க
நேரிடும்போது ஒரு இறைஞ்சுதல் இவனுடைய கண்களில் படிந்துவிடும். லதாவின் கண்களோ
மூடப்பட்ட கதவைப் போலவே இருந்தன.
நிதிச்சந்தையில் விற்பனைப் பிரதிநிதியாக
இருந்த வருஷங்களில் லதா முதுகலை முடித்து வேலை கிடைத்து சென்னைக்குப்
போய்விட்டாள். விசேஷங்களில் பார்க்கும்போது உருமாற்றம் துலக்கமாகத் தெரிந்தது.
பேச்சிலும் நடத்தையிலும் முதிர்ச்சி. செல்போனில் கேட்ட அவளுடைய ஆங்கிலத்தின்
நளினம் கொடுத்த தாழ்வுணர்ச்சியால் கடைசியாக ஒருமுறை காதலை வற்புறுத்திப்
பார்க்கும் எண்ணத்தை பூரானை செருப்பில் நசுக்குவதுபோல் நசுக்கினான்.
பக்கத்து வீட்டு பாக்கியமக்காவோடும் இன்னும்
சில ஸ்நேகிதிகளோடும் அடிக்கடி கோவில் குளம் என்று போவாள் வாசுகி அத்தை. அவனைத்தான்
வண்டியோட்டக் கூப்பிடுவாள். வேறு பக்கம் வாக்கு கொடுத்துவிடக்கூடாது என்பதற்காக
முன்பே சொல்லி வைத்துவிடுவாள். இவ்வளவு கொடுங்கள் என்று கேட்டதில்லை, ஆனால்
மற்றவர்களைவிட அதிகமாகத்தான் கொடுத்தாள். லதாவைப் பற்றிச் சொல்லும்போதெல்லாம்
‘எங்க லதா, எங்க லதா’ என்பாள்.
வீட்டில் வழுக்கி விழுந்துவிட்டவள்
இவனுக்குத்தான் போன் செய்தாள். நல்லவேளையாக அன்றைக்கு பக்கத்தில்தான் இருந்தான்.
போகும்போது பாக்கியமக்கா இருந்தாள். முழுவேகத்தில் சுழலும் மின்விசிறிக்கும்
அடங்காத வியர்வையோடு வலியில் உஸ் உஸ் என்று பெருமூச்செறிந்தாள். ஆம்புலன்ஸை
வரவழைத்தான். கோயமுத்தூருக்கே போய்விடலாம் என்றாள் அத்தை.
ஆஸ்பத்திரியில் முதலுதவிகள் செய்து அட்மிஷன்
போட்டு அறைக்குப் போகும்வரை அங்குமிங்கும் அலைய வேண்டியிருந்தது. லதாவின்
தாய்மாமனும் உறவினர்களும் வந்துவிட்டார்கள். பாக்கியமக்கா லதாவுக்குத் தகவல்
சொல்லிவிட்டாள். எட்டரைக்கு விமானத்தில் வந்துவிடுவாள். அவள் வந்தபிறகுதான் என்ன
மாதிரியான் ப்ளேட் வைப்பது என்பதை முடிவு செய்யவேண்டும். பேண்டேஜ் போடப்பட்ட
காலோடு சோர்வோடு கிடந்தாள் அத்தை. பார்வையாளர் நேரம் முடிந்துவிட்டது என்று
எல்லோரையும் கிளம்பச் சொன்னாள் நர்ஸ். பாக்கியமக்கா மட்டும் துணைக்குத்
தங்கிக்கொண்டாள்.
அடுத்த மூன்று நாட்களுக்கு திருச்செந்தூர், கன்னியாகுமரி பயணம் இருந்தது. வேறு டிரைவரை இணைத்துவிட முயற்சி செய்தும் ஒருவரும் அமையவில்லை. தயக்கத்தோடு அத்தையிடம் சொன்னான். லதா வருகிற வரைக்கும் இருக்கச் சொன்னாள். விமான நிலையத்தின் வாயிலில் காத்திருக்கையில் நிதானமாகப் பதற்றங்கள் இல்லாமல் நடந்து வந்தவளைப் பார்த்தபோது இருவருக்கும் இடையிலான் தூரம் இரு கோள்களுக்கு இடையிலான தூரம்போல் தொலைவானது என்று நினைத்தான்.
திரும்பவும் நான்காவது நாள்தான் போக
முடிந்தது. அத்தையைப் பார்க்க அம்மாவும் வந்தாள். அறுவை சிகிச்சை முடிந்து அத்தை
தைரியமாகிவிட்டாள். மருத்துவமனை இருப்பு அளிக்கும் சோர்வு படிந்த முகத்தோடு லதா
இருந்தாள். பார்வையாளர் நேரம் முடியும்வரை இருந்துவிட்டுத் திரும்பினார்கள்.
வாடகைக்கு ஓரிரு அழைப்புகள் வந்தாலும் ஏற்றுக்கொள்ளவில்லை.
பாக்கியமக்கா மருத்துவமனைக்கு
வரவிருப்பதாகவும் மறுநாள் காலை அழைத்துக்கொண்டு வரும்படியும் அத்தை போன் செய்தாள்.
டிஸ்சார்ஜ்க்கு நான்கைந்து நாட்கள் ஆகும் என்பதால் லதாவை மாற்றிவிடுவதற்குப்
போகிறாள் பாக்கியமக்கா. இவர்கள் அறைக்குப் போனபோது அத்தையிடம் லதா மறுத்துக்கொண்டு
இருந்தாள்.
”நாலு நாளா இங்கேயே கெடந்து பொகைஞ்சு கெடக்கறா,
இன்னும்
ரெண்டு மூணு நாளாகும், வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுத்துட்டு வான்னா
முடியாதுங்கறா” அத்தை பொதுவாகச் சொன்னாள். தான் கவனித்துகொள்வேன் என்கிற
நம்பிக்கையில்லையா என்று பாக்கியமக்கா அதட்டியபிறகு கிளம்பினாள். லதாவை வீட்டில்
விட்டுவிட்டு நாளை மறுநாள் அழைத்துவரும்படி சொன்னாள் அத்தை.
திரும்பும்போது
அலுவலகத்திலிருந்து யாரோ செல்போனில் அழைக்க லேப்டாப்பை திறந்து பேச
ஆரம்பித்துவிட்டாள். பாடலின் சத்தத்தை மட்டுப்படுத்தினான். தனியாகப் பேசுவதற்கு
அபூர்வமாக கிடைத்திருக்கும் வாய்ப்பு முழுமையாகத் திரளவில்லையே என்று தவிப்பாக
இருந்தது. கிணத்துக்கடவு மேம்பாலம் தாண்டும்போதுதான் அழைப்பு முடிந்து லேப்டாப்பை
மூடிவைத்தாள்.
“என்ன பண்ணிட்டு இருக்கே ரவி?” வண்டியோட்டும் விஷயம் தெரியாததுபோல் கேட்கிறாள்.
“டிராவல்ஸ் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்”
“ஏதாவது பெருசாச் செய்யலாமே?”
இவன் பதில் சொல்லாததால் அவளும் மெளனமாக
செல்போனை நோண்டிக்கொண்டு வந்தாள். தனக்கும் அவளுக்குமான இடைத்தூரம் முடிவில்லாமல்
பெருகுவதாகத் தோன்றியது. வீட்டுக்கு அருகாமையில் வந்தபோது தெருமுனைக் கடையில் பால்,
தயிர்,
காய்கறிகள்
என்று வாங்கிக்கொண்டாள். போர்டிகோவில் நின்றிருந்த அவனுடைய யுனிகார்னைப்
பார்த்தவாறே சொன்னாள்.
”இரு, டீ போடறேன், குடிச்சுட்டுப் போகலாம்”
வரவேற்பறையில் செல்போனைப்
பார்த்துக்கொண்டிருக்கையில் உடைமாற்றி முடியைக் உயரக் கொண்டையாக முடிந்துகொண்டு
இளஞ்சிவப்பில் வெள்ளைப்பூக்கள் போட்ட நைட்டியில் சமையலறைக்குப் போகும் காட்சியின்
கீற்றைக் கண்டவுடன் கசப்பும் தாபமும் ஒருசேர எழுந்தன. கண்கள் தொடுதிரையை வெறித்திருக்க
அவள் டீயோடு திரும்பும்வரை எண்ணங்கள் எங்கெங்கோ அலைந்தன.
எதிரில் அமர்ந்திருப்பவளின் தோற்றம் அலையாக
உள்ளே பரவியது. சோர்வு படிந்த முகத்தில் துலங்கும் அழகு, இதுபோல் அவள் எப்போதும்
எதிரில் இருக்கவேண்டும் என்பதுதானே அவனின் ஆசை? தசையெடுத்த அகலொளியாய்
சுடரும் இவள் இப்பிறப்பில் என்றைக்குமே தனக்கில்லையா? கண்களில் நீர் கோர்த்து
கட்டுப்படுத்த முடியாமல் கன்னங்களில் கோடாய் வழிய டம்ளரை வைத்துவிட்டு கண்களைத்
துடைத்துக்கொண்டான். உற்றுப்பார்த்தவள் சோபாவின் விளிம்புக்கு நகர்ந்து ஆறுதலாய்
கைகளைப் பற்றினாள். உயிரின் மொத்த விழைவும் உதடுகளில் குவிய அவள் முகம்நோக்கி தணிகையில்
இடையில் சுட்டுவிரலை வைத்தவாறு மெல்லிய குரலில் சொன்னாள்.
“ரவி, கூட ஒர்க் பண்ற ஒருத்தரோட நா ரிலேஷன்ஷிப்ல
இருக்கறேன், அம்மாகிட்ட சொல்லணும்”
புகைமூட்டம் கலைவதுபோல் நம்பிக்கைகளும்
உணர்வுகளும் அழிய சட்டென்று பின்னால் தள்ளி நகர்ந்துகொண்டான்.
“ஸாரி ரவி”
“ஏன்? எத்தனை வருஷமா காத்திருக்கேன், ஏன் என்னப்
பிடிக்கல?”
“பிடிக்கலைன்னு இல்ல”
“அப்றம்?”
“உன்னப் பிடிக்கும், ஆனா நீ இங்கிருந்து எங்க
போகப் போறே ரவி? வாழ்க்கை முழுசும் இங்கேயே கிடக்க எனக்குப் பிடிக்கல,
வாழ்க்கைல
நிறைய தூரம், உலகத்தோட மறுமுனை வரைக்கும் போகணும். நீ பொள்ளாச்சியத்
தாண்டவே பிரியப்படுல”
செல்போனையும் பைக் சாவியையும்
எடுத்துக்கொண்டு எழுந்தான்.
“நாளான்னிக்கு காலைல ஹாஸ்பிட்டல் போகணும்.
வந்துடறியா?”
ஆமோதிப்பாய் தலையசைத்துவிட்டு கண்களில்
மீண்டும் திரளும் நீரை மறைப்பதற்காக வேகமாக போர்டிகோவுக்கு நடந்தான்.
***
திருமணமாகி
மூன்றாவது வருஷத்தின் தொடக்கத்தில் ஆறுமாத கர்ப்பிணியாய் வேலையிலிருந்து நீண்ட
விடுப்பு எடுத்துக்கொண்டு லதா திரும்பி வந்தாள். இடைப்பட்ட காலத்தில் அவள் ஊருக்கு
வரும் தருணங்களில் சந்திக்க வாய்க்கும் தருணங்களைத் தவிர்த்தபடியே தன் மனதுடன்
சமரசத்துக்கு வந்துவிட்டிருந்தான். காதல் வடிந்துவிட்டது என்பதைவிட இறுகிச்
சிறுத்து உள்ளொடுங்கிவிட்டது.
லதாவின் திருமணத்தைப் பொறுத்தவரை அவளுடைய
ப்ரியம்போலவே அத்தை விட்டுவிட்டாள். லதாவைத் தனக்குத் திருமணம் செய்துவைக்கும்
யோசனை அத்தைக்கு எப்போதேனும் வந்திருக்குமா என்று நினைப்பதுண்டு. ஆனால் அப்படியான
எண்ணம் இருந்திருக்கவில்லை என்பதை திருமண காரியங்களுக்கு ஒத்தாசையாக இருக்கும்படி
அழைத்தபோது புரிந்துகொண்டான்.
பிடிக்கவில்லைதான், இருந்தாலும் மறுக்க
முடியவில்லை. லதாவின் கணவன் இனியனை முதல் பார்வையிலேயே பிடிக்கவில்லை. பேச்சும்
உடல்மொழியும் எரிச்சலூட்டின. இவனை எப்படி அவளுக்குப் பிடித்தது? சரி,
புத்திசாலி,
தன்னை உலகம்
முழுக்கத் தன்னை அழைத்துச் செல்லும் ஒருவனைத்தான் பிடித்திருப்பாள். ஜோடியாக
அவர்களைப் பார்க்கப் பிடிக்காமல் வரவேற்பு மற்றும் முகூர்த்த நேரங்களில் தன்னை
முழுமையாக வெளி வேலைகளில் வைத்துக்கொண்டான்.
இரண்டு வருஷங்கள் கழித்து திரும்பவும் ஒரு
சுழல். கோயமுத்தூர் ஆஸ்பத்திரிக்கு லதாவை பரிசோதனைகளுக்கு கூட்டிபோய்வர அத்தை
கூப்பிட்டாள். பிடிக்காத சூழ்நிலைகளிலிருந்து விலகிவிடமுடியாமல் அதற்குள்ளேயே
வதிபடும் நிர்ப்பந்தம் தனக்கு ஏன் நேர்கிறது என்று குழம்பியவனால் வழக்கம்போல்
அத்தையிடம் மறுத்துச் சொல்ல முடியவில்லை. மேடிட்ட வயிற்றோடிருந்த லதாவைக் கண்டபோது
உள்ளே எழுந்த இழப்புணர்வை மறைக்க பிரயத்தனப்பட வேண்டியிருந்தது. ஆனால் லதாவின்
கண்களின் அவளுடைய எந்த வாழ்க்கைச் சிக்கலும் தெரியவில்லை.
“என்ன புரிஞ்சுக்கிட்டு என்ன ஸ்நேகிதம்
ஆனாங்களோ? இரண்டே வருஷத்துல அதுவும் வயித்துல இப்படிச்
சுமந்துகிட்டு டைவர்ஸ்னு சொல்றா. அவம் பேச்சு ரொம்பத் தப்பா இருக்குதுன்னு மட்டும்
சொல்றாளோ தவிர மத்தத சொல்ல மாட்டங்கறா. கல்யாணத்துக்கு முன்னால இதெல்லாம்
கண்ணுக்குத் தெரீயறதில்ல. இது வயத்துல நின்னப்பின்னாடிதான் ஒரே சண்டையாமா. எம்
பொழப்புதான் இப்படி ஆயிடுச்சின்னா, இவளும் அதே வரத்த வாங்கிட்டு வந்துருப்பா போலிருக்குது,
வகுத்துல
இருக்கறதுக்காகவது ரெண்டு பேரும் பொறுத்துப் போலாமுல்ல? ஆண்டவந்தான் நல்ல வழியா
காட்டோணும்” மருத்துவமனையில் காத்திருக்கும் பகுதியில் லதா சிறுநடைக்கு
நகர்ந்தபோது அத்தை சொன்னாள்.
லதா தன் வழக்கத்தின்படியே இருந்தாள். கணவனோடு
பிரச்சனை என்பதை அறிந்து உறவுகள் கொடுக்கும் அழுத்தத்தை எள்ளளவும்
பொருட்படுத்தாதவளாக இருந்தாள். அத்தைதான் பாவம், அவனிடமும்
பாக்கியமக்காவிடமும் மாறி மாறி புலம்புவாள். ஒருவரும் அருகில் இல்லாதபோது
பாக்கியமக்கா குரலைத் தணித்துக்கொண்டு சொன்னாள். “அந்த இனியன், பெரிய
சந்தேகம் புடிச்சவனாமா, வார்த்தையிலேயே கொன்னு கொதறிட்டாம் போல இருக்குது,
பொம்பள
அடியும் ஒதையும் வாங்கிட்டுக் கெடந்ததெல்லா அந்தக் காலம். இப்ப அப்டி நடக்குமா?”
மனம் முழுக்க ஈருயிர்க்காரியான லதாவே
இருந்தாள். பிள்ளைப்பேறு முடிவதற்குள் அவள் கணவனோடு சமாதானமாகவேண்டும் என்ற
நினைப்பு எழுந்தபோது மனதின் வினோதக் கோலங்கள் ஆச்சரியமூட்டியன. ஆஸ்பத்திரியில்
அவனை அவளுடைய கணவனாக கருதி சொல்லப்பட்ட பேச்சுக்குப் பதறி எங்கே லதா வருத்தமடைவளோ
என்று நிமிர்ந்தபோது அது அவனுடைய தவறில்லை என்பதுபோல் சிறிதாகப் புன்னகை செய்ய
கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது.
லதாவுக்கு இனியனுடன்
சண்டை, ஆனால் இனியனின் குடும்பத்தினர் எதுவும் பேசாமலிருந்தது வினோதமாக இருந்தது.
தன்னுடைய ஆற்றாமையை வாசுகி அத்தையிடம் கோடி காட்டியபோது அவள் குமுறினாள். “அவம்
புடிவாதத்துக்குத்தான் அன்னிக்கு கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டு இருக்குது அந்தக்
கூட்டம், கல்யாணத்தப்பவே எல்லாம் பட்டும் படாமத்தான், தாங்க பெரிய சமீன்னு
நெனைப்பு”
***
பின்னிரவு
இரண்டு மணிக்கு கிளம்பிவரச் சொல்லி வாசுகி அத்தை அவசரமாக அழைத்தாள். குறித்திருந்த
தேதிக்கு பத்து நாட்கள் இருந்தாலும் லதாவுக்கு வலி வந்துவிட்டது. மாலையில் இருந்து
இருமலோடும் காய்ச்சலோடும் படுத்திருந்த அம்மாவுக்குப் பாங்கு சொல்லிவிட்டு பத்து
நிமிஷத்தில் போய்விட்டான். பாக்கியமக்காவும் உடனிருக்க வாசலில் தவிப்போடு
காத்திருந்தார்கள்.
ஓரிரு லாரிகளைத் தவிர சாலையில் வாகனப்
போக்குவரத்து அடங்கியிருந்தது. அன்றைக்குத்தான் அவன் அதிகபட்ச வேகத்தில்
காரோட்டினான் மேடுகள், குழிகள், பாலங்கள், வேகத்தடைகள் எல்லாம் ஆழ்மனதில் பதிந்தவை.
வேகத்தோடு கவனமும் இருந்தது. அத்தையும் பாக்கியமக்காவும் லதாவுக்குத் தைரியம்
சொல்லிக்கொண்டிருந்தார்கள். சட்டென்று ஒரு கணத்தில்
லதா உடைந்து அழத் தொடங்கினாள். அவளுக்குத் தைரியமூட்டும் வார்த்தைகளைச் சொல்லத்
தோன்றினாலும் கவனத்தை சாலையில் வைத்துக்கொண்டான்.
நேராக எமெர்ஜென்சி பிரிவுக்கு போனான்.
பாக்கியமக்கா இறங்கி கைகொடுக்க லதா இறங்கச் சிரமப்பட்டாள். பணியாளர்கள்
ஸ்ட்ரெச்சரை இழுத்து வந்தார்கள். பாக்கியமக்காவைத் ஒதுங்கச் சொல்லிவிட்டு அவளுக்கு
வாகாக கையைக் கொடுத்து இறக்கிவிட்டபோது நிற்க முடியாமல் அவன் மீது சாய்ந்துகொண்டாள்.
லதாவால் உந்தியேறி ஸ்ட்ரெச்சரில் படுக்க முடியாது என்று தெரிந்துவிட்டது. தூக்கிப்
படுக்க வைக்கும்படி அத்தை அவனிடம் சொல்லவும் அவளைத் தூக்கி நர்ஸ் சொல்லிய வாக்கில்
அதிராமல் படுக்க வைத்தான். லதா கண்களை மூடிக் கிடந்தாள்.
அவர்கள் லிப்டில் மறைந்தபிறகுதான் கைகள்
ஈரமாக இருப்பதைக் கவனித்தான். லதாவின் உடையிலிருந்த ஈரம். பெருமூச்சோடு காரைப்
பார்க்கிங்கில் போட்டுவிட்டு மேலே போனான். அத்தை சொன்னாள். “உள்ள கூட்டிட்டுப்
போயிருக்கறாங்க, பாக்கியமக்கா பணங் கட்டப் போயிருக்கறா”
வராண்டாவின் முனையில் கண்ணாடி ஜன்னலின் வழியே
வெளியே உயரத்தில் இருந்த அதிகாலை இருளையும் கீழே ஒளிர்ந்த மின்விளக்குகளையும்
பார்த்துக்கொண்டு நெடுநேரம் நின்றிருந்தவன் திரும்பியபோது டாக்டரும் நர்ஸும்
வெளியே வந்தார்கள். வாசுகி அத்தையும் பாக்கியமக்காவும் முன்னால் ஓடினார்கள். குரல்
கேட்கும் தொலைவில் நின்றான் இவன்.
“பெண் குழந்தை, டைம் 4.15, சுகப்பிரசவம்,
பாப்பா மூணு
கிலோ இருக்கு, ஆரோக்கியமா இருக்கு, கொஞ்ச நேரத்துல
காட்டுவாங்க..” வாசுகி அத்தையின் கைகள் உயர்ந்து மருத்துவரைக் கும்பிட அவர்
பாந்தமான ஏற்போடு உள்ளே போய்விட்டார். வாசுகி அத்தை அழுதாள். ஒரு கண்ணில்
சந்தோஷத்தின் நீரும் இன்னொரு கண்ணில் துயரத்தின் நீரும் வழிவதாகத் தோன்றியது.
கொஞ்சநேரம் கழிந்து நர்ஸ் குழந்தையை எடுத்துவந்து நீட்ட அத்தை ஏந்திக்கொண்டாள்.
ரோஜாப்பூ நிறத்தில் லதாவின் சாயலில் இருந்தாள் குட்டிப்பாப்பா.
“இவுங்க அம்மாவை எப்பப் பாக்கலாம்”
சொல்கிறேன் என்கிற பாவனையில் வாசுகி
அத்தையிடம் தலையசைத்துவிட்டு குழந்தையோடு உள்ளே போனாள் நர்ஸ். ஐந்து நிமிஷத்தில்
திரும்பியவள் கீழே மருந்துக்கடையில் வாங்கிவரச்சொல்லி அச்சடிக்கப்பட்ட ஒரு தாளை
நீட்டினாள். அதை வாங்கிய அத்தை கற்றையான பணத்தோடு சேர்த்து இவனிடம் நீட்டினாள்.
லிப்டில் கீழே இறங்கியபோது இதையெல்லாம் தான் ஏன் செய்யவேண்டியிருக்கிறது என்ற
கேள்வி எழுந்தது. தன் வாழ்க்கையின் உட்சபட்ச மகிழ்ச்சியை அனுபவிக்கவேண்டிய இனியனை
எது அதிலிருந்து தள்ளி வைத்திருக்கிறது?
அந்த அதிகாலை நேரத்திலும் இரண்டு மூன்று பேர்
காத்திருக்க வாங்கிக்கொண்டு திரும்புவதற்கு இருபது நிமிஷத்துக்கு மேலாகிவிட்டது.
அவன் போனபோது அத்தையும் பாக்கியமக்காவும் உள்ளிருந்து வந்தார்கள்.
“நர்ஸ், சட்டுனு வந்து
கூப்பிட்டுட்டா, லதாகூட உன்னக் கேட்டா” லேசான குற்றவுணர்வோடு சொன்னபோது
லதா அறைக்கு வந்தபிறகு பார்த்துக்கொண்டால் போச்சு என்று சமாதானப்படுத்தினான்.
அத்தை போனில் ஒவ்வொருவருக்காக தகவல் சொல்லும்போது லதாவின் தாய்மாமன்
வந்துவிட்டார். அறைக்கு வருவதற்கு பதினொரு மணிக்கு மேலாகும் என்றாள்
பாக்கியம்மக்கா. காய்ச்சல் அதிகமாகிவிட்டது என்று அம்மா அழைத்திருந்தாள்.
உடனடியாகக் கிளம்பிவிட்டான்.
தோட்டத்துக்குத் வந்தபோது இரவின் மிச்சம்
கலையாமல் வீடு இருப்பதைக் கண்டவுடனே புரிந்துவிட்டது. அம்மா காய்ச்சலில் அனத்திக்
கொண்டிருந்தாள். டாக்டர் மகேஷின் கிளினிக்குக் கூட்டிப்போய் ஊசிபோட்டு மருந்து
வாங்கி வந்தார்கள். அம்மாவால் நிற்கக்கூட முடியவில்லை. சோர்வோடு கிடந்தாள். மதியம்
கஞ்சி வைத்துக்கொடுக்க சில மிடறுகள் குடித்தாள். மறுநாள் காயச்சல் தணிந்தாலும்
அசதியில் கிடந்தவள் பொழுது விழும் நேரத்தில்தான் தேறி எழுந்து அமர்ந்திருந்தாள்.
மூன்றாவது நாள் ஆஸ்பத்திரிக்குப் போனபோது
வாசுகி அத்தை மட்டும் லதாவோடும் குழந்தையோடும் இருந்தாள். அழகாக உறங்கும்
குட்டிப்பாப்பாவைக் கண்டபோது உள்ளே ஒரு நிம்மதி. லதாவின் கண்களில் முன்பிருந்த
திரை மறைந்துவிட்டிருப்பதாய் தோன்றியது. அப்போது அறைக்கதவை வேகமாகத் தள்ளிக்கொண்டு
இனியன் நுழைந்தான்.
லதாவையும் குழந்தையையும் மாறி மாறி
வெறித்தவன் தொட்டிலை நோக்கி நகர்ந்தான். லதாவின் கண்களில் வெறுப்பு தெரிந்தது.
இவன் எழுந்து வெளியே வந்துவிட்டான். பின்னாலேயே வாசுகி அத்தையும் வந்துவிட்டாள்.
லதாவும் இனியனும் வாக்குவாதம் செய்யும் கோபக்குரல்களைத் தொடர்ந்து பாப்பா
சிணுங்கினாள். சிவந்த முகத்தோடு வெளியே வந்த இனியன் இருவரையும் வெறித்துவிட்டு
நகர்ந்தான். ’மாப்ளே’ என்று கூப்பிட்டவாறு அத்தை பின்னாலேயே ஓடினாலும் அவன்
நிற்கவில்லை.
வாசுகி அத்தை கதவைத் திறந்துகொண்டு போன ஒரு
நொடி இடைவெளியில், மறுபுறம் திரும்பி அமர்ந்து லதா குட்டிப்பாப்பாவுக்கு
பால் கொடுத்துக்கொண்டிருப்பது தெரிந்தது. வராண்டாவின் முனைக்குப் போய் கொஞ்சநேரம்
சாலைக்காட்சிகளைப் வெறித்திருந்துவிட்டு திரும்பியபோது அத்தையும் லதாவும் மெல்லிய
குரலில் சீறிக்கொண்டிருந்தார்கள்.
“எப்படியோ தொலைஞ்சு போ, பட்டாத்தான் புத்தி
வரும், நீயாவது அவளுக்குச் சொல்லு ரவி, வந்த புருஷங்கிட்டயும் சண்ட போட்டு தொரத்தறது
மரியாதையா? எனக்கு மனசே சரியில்ல, கீழே கோவிலுக்குப்
போய்ட்டு வாரேன்” அத்தை போய்விட்டாள்.
உறங்கும் குழந்தையைப் பார்த்தவாறு யோசனையில்
இருந்தவளிடம் சொன்னான். “அத்த சொல்றதும் சரிதானே? இன்னும் காலம் எவ்வளவோ
இருக்கு இல்ல?, எல்லா சிக்கலையும் பாப்பா சரி செஞ்சுடுவா”
லதா உற்றுப்பார்க்க பார்வையை
விலக்கிக்கொண்டான். பக்கத்தில் வருமாறு கட்டிலின் விளிம்பைத் தொட்டுக்காட்டி சைகை
செய்தாள். அமர மறுத்து அருகில் நின்றவனின் கைகளைப் பிடித்தவாறு “தேங்கஸ்” என்றாள்.
தலையசைப்போடு கையை விலக்க யத்தனிக்கையில் இறுக்கிப் பிடித்துத் தூக்கி புறங்கையில்
முத்தமிட்டவள் அதே இறுகிய பிடியொடு அவனைத் தன் முகம் நோக்கி இழுத்தாள்.
இருவருக்குமான இடைத்தூரம், இரு
உதடுகளுக்கு இடையிலான தூரம்போல் வெகு பக்கமானதாகவும் இரு கோள்களுக்கு இடையிலான
தூரம்போல் நீண்டதாகவும் ஒரே நேரத்தில் இருவிதமாக அவனுக்குத் தோன்றியது. .
நன்றி:
கல்குதிரை 43 - பனிக்கால இதழ் - ஜூலை-டிசம்பர் 2026
கருத்துகள்