வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல்
பரவலாகச் சிலாகிக்கப்பட்டதாலும் எழுத்து மற்றும் கலையைக் குறித்த படம் என்று ஓரிரு நண்பர்கள் பரிந்துரைத்ததாலும் மாலிவுட் டைம்ஸ் திரைப்படத்தைப் பார்த்தேன். நன்றாகவே இருந்தது. தோல்வியைக் குறித்தும் இருண்மையைக் குறித்தும் கண்ணீரும் கம்பலையுமாக இல்லாமல் நகைச்சுவையுடன் எடுத்திருக்கிறார்கள்.
வினீத் மாதவன் மற்றும் சச்சின் வைக்கம் டேவிட், ஹரிஷ் பஷிர் ஆகிய மூன்று பாத்திரங்களில் நடித்தவர்களைத் தவிர மற்றவர்களிடம் ஒரு மேடை நாடக தன்மை இருக்கிறது. ஹரிஷ் பஷிர் பாத்திரத்தின் தோற்றத்தில் அந்தப் பணக்காரத் தன்மை இல்லாவிட்டாலும் வினீத் ஸ்ரீனிவாசன் தன் நடிப்பினால் சரிக்கட்டியிருக்கிறார்.
வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அங்கமாகத் தோல்வியை ஏற்றுக்கொண்டால் திரும்புதலுக்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால் தோல்வி வலிமிகுந்த விஷயம்தான். தோல்வியைப் புரிந்துகொள்வதில், சம்பந்தப்பட்டவர் எப்படி எடுத்துக்கொள்கிறார், சமூகம் எப்படிப் பார்க்கிறது என்று இரு பரிமாணங்கள் இருக்கின்றன. வெற்றியாளர்கள் சமூகத்தால் விரும்பப்படுகிறார்கள், மாற்றமே இல்லாத எளிய பொன்விதி அது. வெற்றியாளர்களுக்கு வெற்றியே முதலீடு. மாறாக தோல்வியிலிருந்து மீண்டெழுந்து திரும்ப விரும்பும் ஒருவருக்கு திரும்புதலுக்கான போராட்டம் மடங்குகளில் அதிகரித்துவிடுகிறது, அவருக்கு சாதாரண விஷயங்கள்கூட பாதகமானவையாக மாறிவிடுகின்றன.
இந்தத் திரைப்படத்தை மூன்று கோணங்களில் பேசலாம்.
1. நம்முடைய விதி யாருடைய கைகளில் இருக்கிறது?
நம்முடைய கையில்தான் இருக்கிறது என்பது கதையின் நாயகனான வினீத் மாதவனின் ஆழ்ந்த நம்பிக்கை. ஆனால் அது அப்படியில்லை, நம்முடைய விதி மற்றவர்களின் கைகளிலும் அல்லது தற்செயல்களின் பிடியிலும் சேர்ந்தே இருக்கிறது என்று வாழ்க்கைத் திரும்பத் திரும்ப அவனிடம் சொல்கிறது. வினீத்திடம் இருப்பது, தன் கலையில் மேதையாக விரும்புகிறவனின் கர்வமா அல்லது சூழலுடன் தன்னைப் பொருத்திக்கொள்ள முடியாத இயல்பா என்று கேள்விக்கான விடை இரண்டும் கலந்ததாகவே இருக்கிறது. ஆனால் அவன் தன் கலையில் உண்மையிலேயே மேதையா? அவன் எழுதி இயக்கும் இரண்டு கதைகளின் சாயலோடு வேறு படங்கள் அவன் படங்களுக்கு முன்பே வெளியாகும்போது அதை அதீதமான தற்செயல் என்பதோடு “மேதையாக விரும்புகிற உன் சிந்தனையில் அவ்வளவு தனித்துவம் இல்லையே தம்பீ ” என்றும் சொல்ல வேண்டியிருக்கிறது.
2. படைப்பாளியின் பார்வையிலும் பார்வையாளர்/ரசிகர் பார்வையிலும் வெற்றி என்பது என்ன?
வைக்கம் டேவிட், சச்சின் வைக்கம் டேவிட், அர்ஜுன் தாஸ் எல்லோரும் வெற்றியை வெகுமக்கள் உளவியலிலிருந்து அவர்களுடைய ஏற்பிலிருந்து அணுகுகிறார்கள். ஆனால் வினீத், கலையின் வெற்றியை அதன் முழுமையிலிருந்து அணுகுகிறான். ஒருவர் தன் கலையில் மேதமை அடைவதற்கு அதில் அறுபதாயிரம் மணிநேரங்களைச் செலவிட வேண்டும் என்று சொல்லும் வினீத் இரண்டாந்தரமான படைப்பைப் படைப்பதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு அல்லது அதிலிருந்து மேம்படுவதற்கான வாய்ப்பு கலைஞனுக்கு எப்போதுமே இருக்கிறது என்றுதான் நம்புகிறான். நண்பன் சுஜித்தின் திரைக்கதையை இரண்டாந்தரமுடையது என்று விமர்சித்தவன் அவனுக்கு பட வாய்ப்பு கிடைக்கையில் கேட்கும் முதல் கேள்வியே திரைக்கதையைச் செம்மைப்படுத்திவிட்டாயா என்பதுதான். ஆனால் சுஜித் வினீத்தைப் போலில்லாமல் வெகுமக்களின் உளவியலைப் புரிந்துகொண்ட மற்றவர்களின் வரிசையில் சேர்ந்துவிடுகின்றான்.
மாலிவுட் டைம்ஸ், படைப்பில் “இரண்டாந்தரம்” என்பதை படைப்பாளின் கோணத்திலிருந்து அணுகுகிறது என்பதைவிட பார்வையாளர்/ரசிகர் மீதான விமர்சனமாகவே அதிகமும் வைக்கிறது. வெற்றிதான் கலையின் தரத்தை தீர்மானிக்கும் அளவு என்றால் அங்கு இரண்டாந்தரமானவைதான் பெரிதும் கொண்டாடப்படும். மாறாக வினீத் கொடுக்க விரும்புவது ஒரு உண்மையான, முழுமையான கலை அனுபவம், “…க்காலி, உனக்கு ஒண்ணும் தெரியாது, நா சொல்றதக் கேளு” என்கிற ஒருவிதமான “மெட்டா ஆர்டிஸ்ட்” மனோபாவம். இரண்டாந்தர ரசனையுடைய பார்வையாளர்களுக்காக சமரசம் செய்துகொள்ளாத தன்மை.
படத்தில் mediocrity is new greatness என்பது போன்ற ஒரு வசனம் வருகிறது. ஆனால் அது சூழலில் எப்போதுமே இருக்கிறது. அதன் வரையறை ஆளுக்கும் நேரத்துக்கும் ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும். கலையில் பூரணமும் வெற்றிக்கான சமரசமும் இரண்டுமே தம்மளவில் சாதக பாதகங்களைக் கொண்டிருக்கின்றன. இதில் படைப்பாளி மற்றும் பார்வையாளர் தேர்வு எதுவாக இருந்தாலும் கலையைப் படைப்பதிலும் அனுபவித்தலிலும் மேம்பட்ட நிலையை நோக்கிய தொடர் பயிற்சி இருவருக்குமே முக்கியம்.
3. வெற்றிக்கு மேதமை மட்டும் போதுமா அல்லது மேதைக்கு வெற்றி அவசியமா?
வெற்றிக்கு மேதமை மட்டும் போதாது என்றுதான் படம் சொல்கிறது. நீ மேதையாக இருக்கலாம், ஆனால் அதே நேரத்தில் உன்னுடைய அமைப்புக்குள் பொருந்திப் போகிறவனாகவும் எளிய சமரசங்களுக்குத் தயாராகவும் இருக்க வேண்டும், தொடர்ந்து நீடிப்பதற்கு, வெற்றி மட்டும் போதாது, பொருந்திப் போவது சார்ந்த பிரச்சனைகள் இல்லாதவராக இருப்பதும் முக்கியம், அதிலும் சினிமா போன்ற கூட்டுக்கலையில் அது மிக அடிப்படையான விதி. அதே வேளையில், தனிநபர் கலை மற்றும் அது சார்ந்த செயல்பாட்டில் கூடுதலான கிறுக்குத்தனத்துக்கான சுதந்திரம் இருக்கிறது. இன்னும் துலக்கமாகச் சொல்வதென்றால் ஒருவருக்கு வெற்றி தேவையா தேவையில்லையா என்பது அவர் சமூகத்துடன் எந்த அளவுக்குப் பொருந்திப் போகிறார் என்பதடன் தொடர்புடையது. வெற்றி என்பது சமூகத்தின் அளவுகோல், வெற்றியைப் பொருட்படுத்தாத அல்லது அதற்கு வழக்கத்திலிருந்து விலகிய வரையறையை வைத்திருக்கிற ஒருவருடைய அளவுகோல்கள் வேறாகத்தான் இருக்கும்.


கருத்துகள்