”உண்மை” என்பது முடிவுறாமல் தள்ளிப் போடப்படுவது

தான் எழுதிய “திருப்பியடித்த வரலாறு” என்ற தஞ்சை மண்ணில் மார்க்சிய போராட்ட வரலாற்றை விவரிக்கும் நூல் வெளியீட்டு விழாவில், பெரியார் குறித்து ச.தமிழ்ச்செல்வன் பேசிய காணொளியில் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கும் அந்த குறிப்பிட்ட துணுக்கைப் பார்த்தேன். அவர் அதில் பெரியாரை, கம்யூனிஸ்ட் இயக்கங்களின் கோணத்தில், கீழ்வெண்மணி படுகொலையின் சூழமைவில் (context) விமர்சித்திருக்கிறார். விமர்சனத்தில் என்ன இருக்கிறது? பூமியில் சகலமும் விமர்சனத்துக்கு உட்பட்டதே, சொல்லப்போனால், தொந்தரவூட்டும் விமர்சனங்களில்தான் உண்மை கூடுதலாக இருக்கிறது.


காய்தல் உவத்தல் இன்றிப் பெரியாரை அணுகுவதற்கு அரசியல் நோக்கு, சமூக நோக்கு என்ற இரு பகுப்புகள் அவசியமாகத் தேவைப்படுகின்றன. சுயமரியாதை, சமூகநீதி, சாதிக்கு எதிரான போராட்டம் போன்ற சமூக நோக்கில் தீரமிக்கவராக (Stalwart) இருந்திருக்கையில் அரசியல் நோக்கில் பெரியார் நடைமுறை சார்ந்தவராகவும் சமரசங்களுக்கு உட்பட்டவராகவும் இருந்திருப்பதாகத் தெரிகிறது. பெரியாரினுடைய அரசியல் என்பது தத்துவம் - களம் என்ற இரண்டின் இணைவு என்பதைவிட அதிகமும் களம் சார்ந்ததாகச் சொல்லலாம். அதே நேரத்தில் கடந்த பல தசாப்தங்களில் பெரியார் ஒரு தத்துவமாகக் கட்டமைக்கப்பட்டுவிட்டதால், அந்தத் தத்துவத்தின் மீது மாறாப் பற்று கொண்டவர்களுக்கு அவரின் மீதான விமர்சனங்கள் கோபமூட்டுகின்றன.

ச.தமிழ்ச்செல்வனின் விமர்சனத்தை பெரியாரின் சமூகப் பங்களிப்பின் மீதான விமர்சனம் என்பதை விட ஈ.வே.ராமசாமி அவர்களின் அரசியல் நிலைப்பாட்டின் மீதான விமர்சனமாக எடுத்துக்கொள்வதே பொருத்தமானது. கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு அடிப்படையிலேயே பெரியாரின் மீது இந்த விமர்சனம் உண்டு என்பதுதான் என் புரிதல். சமகால இந்தியச் சூழலில் பிற்போக்கான அரசியல் தத்துவங்களுக்கு எதிராக பெரியார் இன்னும் பொருத்தப்பாடு உடையவராக இருப்பதாலும் வலதுசாரிகளுக்கு எதிரான அணிசேர்தலில் கடந்த பத்தாண்டுகளில் தமிழக இடதுசாரிகள் திமுகவுடன் இணைந்து பயணித்ததாலும் இதுபோன்ற விஷயங்கள் உரத்துப் பேசப்படவில்லை. கடந்த காலத்தில் இதைப் பேச வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தால் இந்தக் கருத்தை இதே வார்த்தைகளில்தமிழ்ச்செல்வன் சொல்லியிருப்பாரா என்று தெரியவில்லை.

நாம் பல நேரங்களில் விஷயங்களைக் சூழமைவோடு(context) பொருத்திப் பார்ப்பதில்லை. சூழமைவுக்கு உள்ளே உண்மையானதாகத் தெரியும் ஒரு விஷயம் சூழமைவுக்கு வெளியே தவறானதாகவும் பொய்யானதாகவும் உள்நோக்கம் கொண்டதாகவும் தோற்றமளிக்கும். இன்றைய தேதியில் இந்த முரண் நம் வாழ்க்கையின் அனைத்து அங்கங்களிலும் ஊடுருவியிருக்கிறது. முழுமையான உண்மையை யாராலும் பிரதிநிதித்துவப்படுத்த முடியாத வகையில் உண்மையின் இன்னொரு பகுதியில் நாம் சமரசம் செய்துகொண்டவர்களாகவே இருப்போம்.

கட்டுடைப்பு, பின்னமைப்பியல் மற்றும் மொழியியல் நோக்கில் தெரிதாவின் மையக்கருத்தான, “உண்மை என்பது ஒருபோதும் முழுமையாகக் கைகொள்ள முடியாதது, அதை விளக்க முயலும் ஒவ்வொரு தருணத்திலும் அதன் அர்த்தம் இன்னும் தள்ளிப்போடப்படுகிறது (Truth is endlessly postponed)” என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக பெரியார் குறித்த ச.தமிழ்ச்செல்வனின் பேச்சையும் அது பேசப்பட்ட நேரம் ஆகியவற்றைச் சொல்லலாம். இந்தச் சூழலில் இப்படித் தொனித்த உண்மை இன்னொரு சூழலில் வேறுவிதமாகத் தொனிக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நம்பிக்கையுணர்வின் மீதான சூதாட்டம் - கிறிஸ்டியன் பெட்ஸோல்டு (Christian Petzold) திரைப்படங்கள்

சிறுகதை எழுதுவது எப்படி

பருவத்தின் பேரொளி - The Museum of Innocence