குற்றவுணர்வின் கொடுங்கனவு - கிறிஸ்டோபர் நோலனின் ’தி ஒடிஸி’


வீட்டை இழத்தல் என்பது மனித இனத்துக்கு என்றென்றைக்கும் தொடர்கிற ஒரு துயராக இருக்கும் என்பதை உலகின் முதல் மனிதர்கள் புரிந்துகொண்டதால்தான் அது காவியங்களிலும் இதிகாசங்களிலும் தவிர்க்க முடியாத கருப்பொருளாக இருந்திருக்கிறது, அவை வீடு திரும்புதலை ஏதோவொரு வடிவத்தில் பேசியிருக்கின்றன. ராமன், லஷ்மணன் மற்றும் சீதைக்குப் பதினான்கு வருஷங்கள், பாண்டவர்களுக்கும் பாஞ்சாலிக்கும் அஞ்ஞாதவாசம் உள்ளிட்டுப் பதின்மூன்று வருஷங்கள், ஒடிசியஸுக்கு இருபதாண்டுகள்.

வீடு திரும்பும்போது நம்முடைய மனிதர்கள் இன்னும் நமக்கானவர்களாக எஞ்சியிருப்பார்களா என்பது அறுதியாக விடை தெரியாத வாழ்க்கையின் புதிர்களில் ஒன்று. வீடு திரும்புதலில் மகிழ்ச்சிக்கான உறுதியளிப்பைவிட நிம்மதிக்கும் ஆறுதலுக்குமான உறுதியளிப்பு சற்றுக் கூடுதலாகவே இருக்கிறது. ஆனால் எது நம் வீடு? அதை நிலப்பரப்பு தீர்மானிப்பதில்லை, நமக்கான மனிதர்கள் இருக்கும் இடம்தான் நம் வீடு. அப்படியென்றால் நம்முடைய மனிதர்கள் எவர்? யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற லட்சிய நிலையிலிருந்து சற்று விலகி நின்று பேசும்போது, நாம் பிறந்து வளர்ந்து வாழ்க்கையின் முதல் இனிப்புகளையும் கசப்புகளையும் யாருடன் இணைந்து ருசித்தோமோ, ஒரு சத்தியவாக்கைப் போல யாருடன் நமது கடப்பாடு ஆழ வேரூன்றி வளர்கிறதோ அவர்கள்தான் நம் மனிதர்கள், அந்த இடம்தாம் நம் ஊர். சொல்லப்போனால் ஊர் என்பது புறவடிவே அல்ல, அது அகத்திலிருக்கும் உணர்வுக்குவியம்.

கிறிஸ்டோபர் நோலனுடைய ஒடிசி காவியத்தின் மறுவாசிப்பான “தி ஒடிசி” திரைப்படம் முழுமையாக “வீடு திரும்புதலை” பேசும் படமல்ல. அது அதிகமும் போருக்கு எதிரான படம். அகவயமாக ஓப்பன்ஹைமர் படத்தின் தொடர்ச்சி அல்லது இன்னொரு பரிமாணம். ஓப்பன்ஹைமருக்கு அணுகுண்டு, ஒடிசியஸுக்கு டிரோஜன் குதிரை. ஓப்பன்ஹைமர் தன் கண்டுபிடிப்பு ஏற்படுத்திய பேரழிவின் பொருட்டான குற்றவுணர்வாலும் ஒடிசியஸ் தன் யுத்த தந்திரமான “டிரோஜன் குதிரை”யின் மூலம் டிராய் நகரத்திற்கு ஏற்படுத்திய பேரழிவின் குற்றவுணர்வாலும் வதைபடுகிறார்கள்.

நோலனின் வாசிப்பின்படி, டிராய் வீழந்த பிறகு வெற்றியாளர்கள் அனைவரும் வீடு திரும்பிவிட்டார்கள் அல்லது மரித்துவிட்டார்கள், ஆனால் ஒடிசியஸுக்கு தொலைந்து அலையும் விதி நேரிட்டுவிட்டுகிறது. டிராய் நகரத்துக்கு தான் ஏற்படுத்திய பேரழிவின் இரங்கற் காலமாக அந்த இருபதாண்டும் ஒடிசியஸுக்கு மாறிவிடுகிறது. தான் ஏற்படுத்திய இழப்பை தனக்கு ஏற்படும் இழப்பின் வழியே உணர்தல். டிராய் நகருக்குள் ஆகமெனனின் படைகள் நுழைந்து உண்டாக்கும் ரத்தக்களறியை ஒடிசியஸ் அதிகமும் ஒரு பார்வையாளனாகப் பார்க்கும் காட்சிகளில் அவன் அடையும் முகபாவம்தான் ஒரு கொடுங்கனவின் சாட்சியமாக அவனைத் தொடர்கிறது.

தி ஒடிசியில் நோலன் பிரமாதமான எழுத்தாளராக வெளிப்படும் தருணங்கள் நிறைய உண்டு. ஒருவேளை மூலப்பிரதி கொடுத்த உணர்வெழுச்சியாக இருக்கலாம். எழுத்தாகவும் குறியீட்டு பிரதியாகவும் பிரமாதமாக அமைந்து வந்திருக்கும் தி ஒடிசி, திரைப்பிரதியாய் ஒரு முழுமையான உணர்வெழுச்சியை தர முடியவில்லை. திரைப்படத்தில் யாருடனுடம் நம்மை அடையாளப்படுத்திக் கொள்ள முடியாத வகையில் எவருடைய துயரமும் மகிழ்ச்சியும் ஆழமாக வெளிப்படவில்லை.

வீடு திரும்புகிற ஒடிசியஸ் ஒரு நாயகன் அல்ல, அவன் தொலைந்து, நைந்துபோன நினைவுகளோடும் குற்றவுணர்வோடும் அல்லாடுகிற ஒரு சாதாரணன். திரைப்பிரதிக்குள் ஒடிசியஸுக்கு நிகழ்கிற எதுவும் நம் தோலில் உறைப்பதில்லை. பாலிஃபெமஸ் மற்றும் லேஸ்ட்ரிகோனியர்களுடனான மோதல் காட்சிகள் திரைக்கதைக்கு எந்த வலுவையும் கூட்டவில்லை. ஆனால் வசியக்காரியான செர்ஸ் உடனான அவனுடைய சந்திப்பு வலுவான அரசியல் உரையாடலாக அமைந்திருக்கிறது, அதே போல் போரில் கொல்லப்பட்டு முறையான இறுதிச்சடங்கு செய்யப்படாத இறந்த படைவீரர்களால் ஒடிசியஸும் அவனுடைய அணியினரும் துரத்தப்படுவது நல்ல காட்சிகளில் ஒன்று. ஏழாண்டு காலம் வசியக்காரியான கேலிப்ஸோவின் பிடியில் இருக்கிறான் ஒடிசியஸ். அடிப்படையில் அந்த உறவு ஒடிஸியஸின் மீதான கேலிப்ஸோவின் மோகமே. ஆனால் அதில் காமத்தைத் தவிர்த்துவிட்டு ஒடிஸியஸ் மீதான அவளுடைய ஒரு தலைக் காதல் என்பது போல் நோலன் சித்தரித்திருக்கிறார். வசீகரமான அழகியை இந்தப் பாத்திரத்துக்குத் தேர்ந்த நோலன் ஒரு முத்தக் காட்சி கூட வைத்திராதது சற்று வருத்தமான விஷயம்தான்.

அதிபுனைவையும் தொல்வரலாற்றுக் காலக் கதைகளையும் மிகுந்த தரத்துடன் சொல்லிவிட்ட திரைப்படங்களையும் நெடுந்தொடர்களையும் நாம் நிறையப் பார்த்துவிட்டதால் பல காட்சிகளில் ஒரு பழகிய தன்மையை உணர்கிறோம். ஒரு சங்க காலத் தலைவியான பெனலோப்பிடம் ஏதேனாவின் சிற்றுருவ முத்திரையைக் ஒடிசியஸ் காட்டும் சங்கமக் காட்சியில் நமக்குள் பொங்கி வழிய எத்தனிக்கும் காதலுணர்வு, “ரொம்ப வயசாயிடுச்சே?” (அவர்கள் இருவருக்கும்) என்ற முணுமுணுப்புடன் திரும்பவும் உள்ளே தணிந்துவிடுகிறது.

“…பிறகு அவர்கள் என்றென்றைக்கும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்” என்று கதையை முடிக்காதது நோலனின் புத்திசாலித்தனம். ஒடிசியஸின் முதல் பயணம் குற்றத்தை நோக்கியதாகவும் இரண்டாவது பயணம் பிராயச்சித்தத்தை நோக்கியதாகவும் இருக்கிறது. ஒருவகையான வானப்பிரஸ்தம்.

கலையனுபவமிக்க அபாரமான திரைப்படம் என்று சொல்ல முடியாவிட்டாலும் போர் ஏற்படுத்தும் மானுடத் துயரம் குறித்த விசாரணையைக் குற்றவுணர்வின் மூலம் நிகழ்த்திப் பார்க்கும் நோலனின் சிந்தனைத் தொடர்சி என்ற வகையில் முற்றிலும் நிராகரிக்க முடியாத ஒரு பெறுமதியைக் கொண்டிருக்கிறது தி ஒடிசி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நம்பிக்கையுணர்வின் மீதான சூதாட்டம் - கிறிஸ்டியன் பெட்ஸோல்டு (Christian Petzold) திரைப்படங்கள்

சிறுகதை எழுதுவது எப்படி

பருவத்தின் பேரொளி - The Museum of Innocence