தமிழில் மொழியாக்கம் - சில எண்ணங்கள்
ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழியாக்கங்கள் பெருகியிருப்பது நமது சிற்றிதழ் இயக்கம் ஏற்படுத்திய விளைவுகளில் ஒன்று. அதே நேரத்தில் சிற்றிதழ் சூழலில் லத்தீன் அமெரிக்க, ஐரோப்பிய ஆங்கிலப் படைப்புகள் செல்வாக்கு பெற்றிருந்த அளவுக்கு வட அமெரிக்க இலக்கியங்கள் பேசப்படவில்லை, காரணம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான நமது அன்றைய மனச்சாய்வு.
ரஷ்ய மொழியாக்கங்களும் ஏனைய இந்திய மொழிகளிலிருந்தான மொழியாக்கங்களும் சிற்றிதழ் இயக்கத்துக்கு முன்பிருந்தே தொடங்கி அதனூடாகவும் பயணித்தன. காரணம், சுதந்திர இந்தியாவில் நிலவிய சோசலிசத்தின் செல்வாக்கு. (கிரண் தேசாய் தன்னுடைய The Inheritence of Loss நாவலில் இதுகுறித்த ஒரு நல்ல விவரணையை வைத்திருக்கிறார்). அதே போல வங்க மொழியிலிருந்து அதிக மொழியாக்கங்கள் நிகழ்ந்ததற்கான காரணம், காலனிய இந்தியாவின் கலாச்சார மையமாகவும் அதிகார மையமாகவும் கல்கத்தா இருந்தது. அரசியலின் போக்கில் கலையின் செல்வாக்கு தெரிவதற்கு நெடுங்காலமாகிறது; ஆனால் கலை, உடனடியாக அரசியலுக்கு எதிர்வினை செய்கிறது.
பிற இந்திய மொழிகளில் எப்படியென்று தெரியவில்லை, நாம் பிரிட்டனின் காலனியாக இருந்தோம் என்ற காலனிய அரசியல் நினைவு, தமிழ் நவீன இலக்கியத்தில் ஆழமாகப் பதியவில்லை, விடுதலைப் போராட்டத்தின் குவிமையமாக வடக்கு இருந்தது ஒருவேளை இதற்குக் காரணமாக இருக்கலாம்; கோணங்கி கொஞ்சம் துண்டு துணுக்களாக எழுதியிருக்கிறார், காலனிய காலத் தமிழ்ப் பண்பாட்டின் பிரக்ஞையையும் அதன் தீற்றல்களையும் தன் நாவல்களில் வைத்திருப்பவர் அவர்தான், ஆனால் துரதிரஷ்டவசமாக அவர் தேர்ந்து கொண்ட மொழியின் சுருள்வெளிக்குள் அந்தச் சித்திரங்கள் துலக்கம் பெறாமல் போய்விட்டன. தாண்டவராயன் கதை, வெள்ளை யானை போன்ற சில நாவல்களை இந்த வரிசையில் வைக்கலாமென்றாலும் அவற்றில் எந்தளவுக்குத் ”தமிழ்த்தன்மை” இருக்கின்றதென்பது தனியாக விவாதிக்க வேண்டும்.
மனமாகப் பழங்குடிகளான நாம் இன்றைக்கு “இந்திய மேற்கத்தியர்களாக” வாழ்கிறோம். இந்த மேற்கத்தியத் தன்மை கடந்த எண்பதாண்டுகளில் இந்தியத் தன்மையாகவே நிலைபெற்று நம் புறவயமான சமூக நடைமுறைகளும் பழக்க வழக்கங்களும் மேற்கிலிருந்து ஸ்வீகரிக்கப்பட்டவை என்ற பிரக்ஞையும் அழிந்துவிட்டது. இங்கே பின் நவீனத்துவம் வந்து, பழங்குடி எச்சங்களான வட்டார மயமான இந்திய, தமிழ்ச்சமூகங்களில் பலவும் பெருங்கதையாடலுக்கு எதிரானவை என்ற அடையாளத்தைக் கொடுத்ததால் இந்த இரட்டைத்தன்மையைப் பரிசீலிக்க வேண்டிய அவசியமில்லாத சூழல் உருவாகிவிட்டது. ஒருவர் மேற்கத்திய பாணியிலான உடையணிந்து தன் வீட்டின் வாசலில் போடப்பட்டிருக்கும் கோலத்தை மிதிக்காமல் நடந்து காரில் ஏறிச் செல்வது நமக்கு அந்நியமான சித்திரமல்ல.
காலனிய மொழி என்ற அடையாளத்தைக் கடந்து உலக மொழியாகிவிட்ட ஆங்கிலம் தொண்ணூறுகளின் தகவல் தொழில் நுட்பப் புரட்சிக்குப் பிறகு நம் இணைமொழியாகவே ஆகிவிட்டது. உலகில் வேறெந்தச் சமூகத்தையும்விட இந்திய சமூகம் ஆங்கிலத்தை அரவணைத்ததற்கு அதன் பன்மொழிச் சூழலும் காரணம். இங்கே ஆங்கிலம் தொடக்கத்தில் பிராமணர்களின் கைகளில் இருந்தது. அவர்கள் எல்லாவற்றிலும் Early Birds. சிறிய குழுவாக இருந்துகொண்டு பெரிய மக்கட்திரளைக் கட்டுப்படுத்துவதில் ஆங்கிலேயர்களுக்கும் அவர்களுக்கும் சில ஒப்புமைகள் இருந்திருக்கக்கூடும்.
The Inheritence of Loss நாவலின் இன்னொரு இடத்தில் கிரண் தேசாய், வங்காளிகள், மலையாளிகள், தமிழர்கள் ஆகியோர் ஓப்பிட்டளவில் அறிவாளிகள் என்கிறார் (அவர் சொல்லும் காரணத்தை நீங்கள் நாவலில் வாசித்துக்கொள்ளலாம்). தமிழர்கள் அறிவாளிகள் அல்ல என்று சொல்லும் தமிழர்களும் இருப்பார்கள். எது எப்படியானாலும் தமிழகத்தில் ஆங்கிலம் பரவலானதற்கு காமராஜரின் கல்விக்கொள்கையைத் தொடர்ந்து, இந்தி எதிர்ப்பு பெரிய அழுத்தமான காரணத்தைக் கொடுக்கிறது. அது எண்பதுகளின் பிற்பகுதியிலிருந்து பிராமணரல்லாத சமூகங்களில் பரவலாகிறது, ஆங்கில மோகம் என்ற கூக்குரல்கள் உரத்து ஒலிக்குமளவுக்குக் கான்வென்டுகளும் சுயநிதிக் கல்லூரிகளும் பெருகுகின்றன. அவற்றின் விளைவாக நம்முடைய பட்லர் ஆங்கிலத்தைக் கொண்டே ஒரு வாழ்கையை மாற்றியமைத்துக் கொள்ள முடியுமென்ற சூழலில் தொண்ணூறுகளில் உருவாகிறது.
ஆகவே ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழியாக்கங்கள் பெருகியதென்பது பிராமணரல்லாத சமூகங்களில் கல்வி பரவலானது, தொண்ணூறுகளின் தகவல் தொழில்நுட்பப் புரட்சி கொண்டு வந்த மாற்றங்கள் போன்றவற்றின் மறைமுகமான அரசியல் கலாச்சார விளைவாகவும் கூறலாம். கூடவே அந்தச் செயல்பாட்டுக்கு ஒரு அடிப்படையை வழங்கிய சிற்றிதழ் இயக்கமும் இங்கே இருந்தது. இரண்டும் இணைந்தே மொழியாக்கங்கள் அதிகரிப்பதற்கும் அவற்றைக் கறாராக மதிப்பீடு செய்வதற்குமான சூழலை அமைத்துக்கொடுத்திருக்கின்றன.
கருத்துகள்