ஜான்சுந்தரின் மூன்று நூல்கள்

சமீபத்தில் நண்பர் ஜான்சுந்தரின் சிறுகதைத் தொகுப்பான “பறப்பன திரிவன சிரிப்பன”, கட்டுரைத் தொகுப்பான “குறுமக்கள் கொட்டாரம்” , “துடிமேளக்காரன்” கவிதைகள் ஆகிய மூன்று நூல்களை வாசித்தேன். இவற்றின் வழியே ஜானின் படைப்பு மனதின் தனித்தன்மையை உணர்ந்துகொள்ள முடிந்தது. காருண்யமும் தயையும் கொண்ட கண்களின் வழியாக வாழ்க்கையையும் மனிதர்களையும் பார்க்கின்ற அதே தருணத்தில் பகடியும் வேடிக்கையும் மிகுந்த கணங்களை உடைத்துக் காட்டி சிரிப்பையும் புன்னகையையும் சமயங்களில் ‘சுருக்’கையும் கொடுக்கிறார் ஜான். இது அவருடைய எழுத்தின் தனித்தன்மையாக இருக்கிறது.

காருண்ய (compassionate) வகை எழுத்து தமிழுக்குப் புதியதல்ல, இங்கு அது என்றைக்குமே இருக்கிறது. காருண்யம் செயற்கையான விதத்தில் சித்தரிக்கப்படும்போதும் வாழ்க்கையின் ஏனைய உண்மைகளை மறைத்து பாவனையாக மாறுகிறபோதும்தான் அது மிகையென்று திரிந்துவிடுகிறது. ஆனால் ஜான் சித்தரிக்கும் காருண்யத்துக்கும் தயைக்கும் வெகு பக்கத்திலேயே வாழ்வின் கடுமையான வெக்கையும் இருக்கிறது. இந்த அனலே ஜான் முன்வைக்கும் காருண்யத்துக்கு ஒரு அர்த்தப்பூர்வத்தைக் கொடுக்கிறது. இந்த அனலைச் சகித்து வாழ்க்கையைப் பற்றிக்கொள்வதற்கு அவர் பாவனையான நம்பிக்கைகளை முன்வைக்காமல் “உயிர்ப்பு” என்ற மனித சாரத்தை முன்னிறுத்துகிறார்.



“வளரும் குழந்தைகளை அல்லது வளர்ந்தவர்களின் குழந்தைத் தன்மையைக் கவனிப்பதுதான் என் அடிப்படை” என்று தன்னுடைய குறுமக்கள் கொட்டாரம் நூலின் முன்னுரையில் ஜான் சொல்கிறார். அவருடைய சுய அவதானிப்பு துல்லியமானது. நிறைய மனிதர்கள் தோன்றும் சிறுகதைகள் தமிழில் அருகிவிட்ட சூழலில் “பறப்பன திரிவன சிரிப்பன” தொகுப்பில் குழந்தைகளும் வளர்ந்தோரும் செல்லப்பிராணிகளும் நிரம்பியிருக்கிறார்கள். மனித மையமே பிரதானமாகிவிட்ட உலகில் ஜானின் கதைகளில் மனிதர்களுக்கு இணையாக ஜீவராசிகளும் புழங்குகின்றன. தமிழ்ச் சிறுகதைக்குள் அவ்வளவாகப் புழங்கியிராத புதிய காட்சிகளும் இக்கதைகளுக்குள் இருக்கின்றன.

நாயகி, பறப்பன திரிவன சிரிப்பன, பித்தளை நாகம் ஆகிய மூன்று கதைகளும் முக்கியமானவை. இருமுனைப் பிறழ்வைப் பேசும் நேத்ரா கதையையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். இந்தக் கதைகளுக்குள் சாதாரண மனிதர்களின் பொற்கணங்களும் சராங்கமான பகடிகளும் இருக்கின்றன, நாயகி, பறப்பன திரிவன சிரிப்பன ஆகிய இரு கதைகளும் இறுதியில் கவிதையாகவே முடிகின்றன.

ஆற்றொழுக்கான விவரணைகளையும் தன்னளவிலான முழுமையையும் இந்தக் கதைகள் கொண்டிருந்தாலும் கருப்பொருட்களின் வித்தியாசங்களைக் கடந்து ஏறத்தாழ எல்லா கதைகளிலும் கதைசொல்லும் குரலின் தொனி ஒன்று போலவே இருப்பதாகத் தோன்றுகிறது, தொனி வித்தியாசங்களையும் மொழிதலில் கொஞ்சம் இடைவெளிகளையும் கூட்டிக்கொண்டால் ஜானின் புனைவுகள் இன்னும் வலுவான அனுபவங்களை வழங்கும்.


ஜானின் கதைகளுக்குள் கவிதை இருப்பது போல அவருடைய கவிதைகளில் கதைகளும் இருக்கின்றன. கூறுமுறையில் பகடி கொஞ்சம் கூடுதலாக இருக்கிறது. சற்றே பழகிய வெளிச்சம் இருந்தாலும் அபூர்வமான கவிமன வெளிப்பாடுகளோடு துடிமேளக்காரன் கவிதைகள் வாசிப்புச் சுவாரசியத்தைக் கொண்டிருக்கின்றன.


தங்களுடைய அறிதலுக்கும் அறியாமைக்கும் இடையில் குழந்தைகள் நிகழ்த்திக் காட்டும் அற்புதங்களின் களஞ்சியமாக, அவிலா டீச்சரின் அனுபவத் தொகையாக அமைந்து வந்திருக்கும் குறுமக்கள் கொட்டாரம் கட்டுரைத் தொகுப்பை மங்கலத்தன்மை கொண்ட நூலாகச் சொல்லலாம். மற்போர்ச் சருக்கம், மழலையர்க்கரசி, கர்த்தரின் நட்சத்திரம், யோசனையில் பெரியோர், நினைவோடை போன்றவை நன்றாக அமைந்திருக்கின்றன. புன்சிரிப்பையும் சமயங்களில் பெரிய சிரிப்பையும் கொடுக்கிற ’பொடுசுகள்’ இதில் இருக்கிறார்கள். நாம் குழந்தைகளாக இருந்தோம் என்ற நினைவைக் கூட தடயமின்றி இழந்துவிட்ட சூழலில் குழந்தைமையை அணுகுவதையும் கையாள்வதையும் குறித்த இதமான பிரக்ஞையை, நினைவூட்டலை மென்மையோடும் லகுவாகவும் அணுக்கமான பேச்சின் தொனியோடும் இந்தக் குறுஞ்சித்தரிப்புகள் அளிக்கின்றன. குழந்தைகளைப் பற்றிய வளர்ந்தோருக்கான நூலான இந்த நூல் பரவலாக வாசிக்கப்பட வேண்டும். நீங்கள் யாருக்கேனும் இனிமையைப் பரிசளிக்க விரும்பினால் இந்த நூலைப் பரிசளிக்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிறுகதை எழுதுவது எப்படி

பருவத்தின் பேரொளி - The Museum of Innocence

நம்பிக்கையுணர்வின் மீதான சூதாட்டம் - கிறிஸ்டியன் பெட்ஸோல்டு (Christian Petzold) திரைப்படங்கள்