நமது நூலகங்கள் கள்ளப்பிரதிகளின் கூடாரமாகிவிடக்கூடாது

கோவை பெரியார் அறிவாலயம் நூலகத்துக்குச் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட போலி நூல்கள் கொள்முதல் செய்யப்பட்ட மோசடி விவகாரம் பெரியதொரு சமூக, அரசியல் மற்றும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு குறித்த விவாதமாக தமிழ்ச்சூழலில் மாறியிருக்கிறது. பெரியார் அறிவாலயம் திறந்துவைக்கப்பட்ட மறுநாள் அங்கு சென்று பார்வையிட்ட நண்பர் பாலசுப்ரமணியன் பொன்ராஜ் அகல்விளக்கு பதிப்பகத்தின் போலி நூல்களைப் பற்றி எழுதியிருந்தார். பிறகு எழுத்தாளர் பெருமாள் முருகன் இது குறித்து சிந்தை இதழில் எழுதிய கட்டுரையின் மீது குவிந்த ஒருங்கிணைந்த கவனமும் ஆய்வுமாணவர்களான இஸ்க்ரா, பிரேம்குமார் ஆகியோரது தொடர் செயல்பாடுகளும் இந்த பொதுவெளி உரையாடலுக்குப் பங்களித்திருக்கின்றன.

இந்த மோசடி விவகாரத்தின் மீதான கவனப்படுத்தல் நிகழ்ந்தவுடன் இந்த விவகாரத்திலும் திமுக-தவெக என்ற துருவப்படுத்தல் நிகழுமென்ற எண்ணம் எழுந்தது. அது அவ்வண்ணமே ஆகியிருக்கிறது. கடந்த வெள்ளியன்று (நவம்பர் 6) காலையில் பெருமாள் முருகன் கட்டுரை வெளியாகிறது, சில மணி நேரங்களில் அரசின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களின் அறிக்கைகள் வெளியாகின்றன. நின்று நிதானிப்பதற்குள் இந்தப் பிரச்சனை மொத்தமாகவே அரசியலாகிவிட்டது. இன்னொரு புறம், பதட்டங்கள் ஏதுமற்ற உடல்மொழியோடு அகல்விளக்கு பதிப்பகத்தின் உரிமையாளர் பேட்டியளித்தது வெகுவாக ஆச்சரியமூட்டியது. கடந்த மூன்று நாட்களாக இந்த மோசடி குறித்து கூடுதலான சான்றுகளும் பகுதி பகுதியான உண்மைகளும் வெளியாகி களேபரமான சூழல் நிலவுகிறது. இதோ இப்போதுகூட திருச்சி நூலகத்துக்கு அளித்திருந்த கொள்முதல் ஆணையை அரசு திரும்பப் பெற்றிருப்பதாக தகவல்கள் வருகின்றன, ம்ஹும், இது இணை சேதம் (collateral damage).

இந்த மோசடி பொதுவெளி கவனம் பெற்றது மிக முக்கியமானது. அதற்கு மிக முக்கியமான காரணம் “தருணம்”. தவெக ஆட்சியில் இல்லாமல் திமுக அல்லது அதிமுக ஆட்சி அமைந்திருந்தால் இந்தப் பொருளானது இவ்வளவு பெரிய விவாதத்தை உருவாக்கியிருக்குமா என்பது ஐயமே. தமிழின் முக்கியமான பதிப்பாளர்கள் பலரும் முந்தைய திமுக அரசு கொண்டுவந்திருந்த நூலக நடைமுறை மாற்றங்களை வரவேற்றிருந்ததை நாம் கவனிக்க வேண்டும். நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களை சாணித்தாளில் அச்சடித்து நூலகங்களுக்குக் கொடுப்பது, நூல்களின் பெயர்களையும் எழுத்தாளர் பெயர்களையும் மாற்றிப் போட்டு அச்சடித்துக் கொடுப்பது மாதிரியான காரியங்கள் இங்கே பல ஆண்டுகளாக நடப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது செயற்கை நுண்ணறிவு வந்துவிட்டதால் “உடனடி உள்ளடக்கத்தோடு” நிமிஷ நேர நூடூல்ஸ் உணவு தயாரிப்பது போல புத்தகங்களைத் தயாரித்து நூலகங்களுக்குத் தள்ளிவிடுவதும் மோசடிகளின் வரிசையில் சேர்ந்திருக்கிறது. அதே நேரத்தில் ஆட்சி மாற்றம் நிகழாமல் போயிருந்தால் இது பொதுவெளியை அடையாமல் உள்வட்டச் சிக்கலாகவே தொடர்ந்து நீடித்திருக்கும் என்பது என் யூகம்.

சிந்தை கட்டுரையை எழுதிய பெருமாள் முருகன் மண்டல நூலகங்களுக்கான நூல்களைத் தேர்வு செய்யும் குழுவில் இருந்தார் என்பதை அன்றைய பிற்பகல் தொலைக்காட்சி செய்திகளின் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது, அவர் பங்கு பெற்றது கோவை நூலகத்துக்கு மட்டுமா அல்லது ஏனைய நூலகங்களுக்குமான குழுவிலுமா என்று தெரியவில்லை. இது போன்ற பிரச்சனைக்குரிய பொருளைக் குறித்து எழுதும்போது பல்வேறுவிதமான கோணங்களிலும் விவாதம் எழுமென்பதால் இதுபோன்ற சிறிய தகவல்களையும் கட்டுரையோடு சேர்த்துக் கொடுப்பது “நலன் முரண்பாடு (Conflict of interest)” என்ற நோக்கில் வாசகர்களுக்கு நேரிடும் சிறு துணுக்குறலைத் தவிர்ப்பதற்கு உதவும்.

தமிழ்ச் சமூகத்தின் சிக்கல்கள் பலவற்றில் தலையானது நம்முடைய இரட்டை நிலைப்பாடு அல்லது போலித்தனம். உதாரணத்துக்குப் புத்தகத்தைக் கும்பிடுவோம், ஆனால் ஒரு சிறிய வாசிப்புச் சமூகமாகவே எஞ்சியிருப்பதில் நமக்கு எந்தக் குற்றவுணர்வும் இருப்பதில்லை. இவ்விதமான பின்புலத்தில் இந்த மோசடிக்கு திமுக என்ற கட்சியை மட்டும் குறைசொல்வது “உழுகிற மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்கிற காரியம்”. ஒரு அரசியல் கட்சியாக அவர்களின் மீது விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் நாம் வைக்கலாம். ஆனால் அவர்கள் நிச்சயமாக ஊழல் செய்வதற்காக இந்த நூலகங்களைக் கட்டவில்லை. அறிவுத்தரப்பினரோடு ஒரு மேம்போக்கான அளவிலேனும் உரையாடக் கூடிய ஒரே அரசியல் தரப்பாக அவர்கள்தான் கடந்த காலத்தில் இருந்திருக்கிறார்கள். இன்றைக்கு இந்த நூலகங்களின் பயன்பாடுகள் எந்த விதத்தில் இருந்தாலும் இந்த நூலகங்களுக்கு “வரலாற்றுச் சின்னங்கள்” என்ற முக்கியத்துவத்தை நான் அளிப்பேன், அறிவை முன்னிலைப்படுத்தும் எத்தனிப்பு இந்த சமூகத்தில் இருக்கிறது என்பதற்கான பெளதீகமான சாட்சியங்கள் இவை. ஒரு நூலகம் யாரால் எதன் பொருட்டுக் கட்டப்பட்டிருந்தாலும் “தமிழர்களின் மொழியிலேயே” சொல்வதென்றால் அது கோவில்தான். ஆகவே புத்தகக் கொள்முதலில் நிகழ்ந்திருக்கும் மோசடியை ஏற்கெனவே இங்கிருக்கும் “அரசு எந்திரத்தில் அல்லது நூலகத்துறையில் ஊழல்” என்ற பிரச்சனையின் பகுதியாகக் கருதி அதற்கான தீர்வுகளைக் காணவேண்டும்.

அரசாங்கமும் அறிவுசார் சமூகமும் இணை சக்திகளாகவே தொடர்ந்து நீடிக்க முடியாது, இரண்டுக்கும் இடையிலான இணக்கமும் பிணக்கும் பிரச்சனைகளின் அடிப்படையிலானதாக அமைவதே சரியான முறைமையாக இருக்கும். காரணம் வெகு எளிமையானது. அரசு என்பது அதிகாரப் பரிபாலனத்தில் இருக்கும் நிர்வாக மற்றும் கண்காணிப்பு அமைப்பு, மாறாக அறிவுசார் சமூகம் குறைந்தபட்சம் கொள்கையளவிலேனும் அதிகாரத்துக்கும் கண்காணிப்புக்கும் எதிர்ப்புறத்தில் இருக்கவேண்டிய தரப்பு. ஆனால் ஒரு வினோதமாக தற்போதைய அரசுடன் உரையாடும் செல்வாக்கு பெற்றிருக்கும் ஒரு அறிவுசார் சமூகத் தரப்பு, கடந்த ஆறாண்டுகளாக திமுக சார்பு தரப்பாகவே நீடிக்கிறது. அவர்களில் பலரும் நூல்கள் தேர்வுக்குழுவில் இடம் பெற்றிருந்தது இந்தச் சிக்கலின் சிடுக்குகளை அதிகரிக்கிறது. இப்போது அறிவுசார் சமூகத்தின் எந்தத் தரப்பு அரசுடன் இந்தப் பிரச்சனை குறித்து உரையாடப் போகிறதென்று தெரியவில்லை. இந்த மொத்த விவகாரத்திலும் பபாசியின் நிலைப்பாடும் பங்களிப்பும் தெளிவாக இல்லை.

இந்த மோசடி இப்போது அரசின் கவனத்திலிருக்கிறது. உண்மைத்தன்மை மற்றும் சட்ட விதிகளின் படி இந்த மோசடியில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் சிவில் அல்லது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு முன்னெடுத்துச் செல்லப்படவேண்டும், இந்த மோசடி அளித்துள்ள படிப்பினைகளின் வழியே தற்போது இருக்கும் நூலக நடைமுறைகளில் சீர்திருத்தமும் வெளிப்படைத்தன்மையும் கொண்டுவரப்படவேண்டும் என்பதே ஊரகப் பொது நூலகங்களின் வழியே ஒளிபெற்ற ஒரு வாசகனாக என் வேண்டுகோள். தொழில்நுட்பம் பெருகியிருக்கும் இன்றைய சூழலில் உலகளாவிய நூலக வலைப்பின்னலோடு இயைந்த அங்கீகரிக்கப்பட்ட செயல் முறைமையை (Process) உருவாக்குவது அவ்வளவு சவாலான காரியமல்ல.

இந்த மோசடி குறித்த வெளிப்படையான அரசுத் தரப்பு விசாரணையை தொடர்கிற அதே நேரத்தில் நூலகத்துறையுடன் ரகசியக் காப்பு ஒப்பந்தம் (non disclosure agreement) ஏதும் இல்லாத பட்சத்தில் இந்த நூலகங்களுக்கான தேர்வுக்குழுவில் இடம்பெற்றிருந்த 130 சொச்சம் பேரும் தாங்கள் பரிந்துரைத்த புத்தகங்களின் பட்டியலைப் பொதுவெளியில் வெளியிடலாம்.

இதனோடு ஒட்டி செயற்கை நுண்ணறிவு குறித்து: நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஆக்கம்சார் செயற்கை நுண்ணறிவு (Generative AI) நம்முடைய வாழ்க்கையைப் பாதிக்கத்தான் போகிறது. சாதக பாதக நோக்கில் செயற்கை நுண்ணறிவின் விளைவுகள் இன்னும் தெளிவாக உருப்பெற்று எழவில்லையென்றாலும் மனிதக் கண்காணிப்புடன் கூடிய “ஆக்கம்சார் செயற்கை நுண்ணறிவின்” பயன்பாட்டை நாம் “கற்பு சார்ந்த” விஷயமாகக் கருதாமல் அறிவு இன்னும் ஜனநாயகப்படுவதற்கான களமாகக் காணவேண்டும். எழுத்து, காட்சி ஊடகக் களங்களில் செயற்கை நுண்ணறிவால் எப்போதும் “மெய்யானது போலத்” தோற்றமளிக்கும் நகல் பிரதிகளை மட்டும்தான் உருவாக்க முடியும், அது வளர வளர மனித இயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டவற்றைத் தனித்து இனங்காட்டும் நுட்பத்தையும் தன்னகத்தே சேர்த்தே உருவாக்கும் என்பது என் யூகம். இந்தச் சூழ்நிலையில் மனிதர்களின் செயல்களில் இருக்கும் “கலைத்தன்மையே” மனித இயற்கை நுண்ணறிவின் சாட்சியமாக இனி இருக்கப் போகிறது. மேலும் செயற்கை நுண்ணறிவின் மூலமான ”அக்னிப் பரீட்சைக்கு” கலை உள்ளாவதைத் தடுக்கவும் இயலாது. இந்த மோசடியைப் பொறுத்தவரையில் பதிப்புத்துறையில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் என்பது குறித்த நிகழாய்வுக்கு (case study) “தவறுகளை விரைவாகக் கண்டறிதல் (fail fast)” என்ற கோணத்தில் அகல் விளக்கு பதிப்பகம் செய்திருக்கும் மோசடி உதவிகரமானதாக அமைந்திருக்கிறது.

நமது நூலகங்களில் நூலாம்படை படிந்திருக்கலாம், ஆனால் அவை ஒருபோதும் கள்ளபிரதிகளின் கூடாரமாக மாற்றப்பட்டுவிடக்கூடாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிறுகதை எழுதுவது எப்படி

பருவத்தின் பேரொளி - The Museum of Innocence

நம்பிக்கையுணர்வின் மீதான சூதாட்டம் - கிறிஸ்டியன் பெட்ஸோல்டு (Christian Petzold) திரைப்படங்கள்