நீயே தேர்ந்தெடுக்கலாம்

ஒரு செவ்வியல் படைப்பு பல காரணங்களுக்காக அவ்வாறு அர்த்தப்பட்டாலும் உலகின் முதல் கேள்விகளுக்கான பதில்களை அது பிரதானமாக விசாரணை செய்திருக்கும். முதல் கேள்விகளுக்கான பதில்கள் சொல்லப்பட்டு அவை பழையனவாகிவிட்டனவென்றும் காலந்தோறும் உருவாகும் புதிய கேள்விகளுக்கான பதில்களை விசாரணை செய்வதே முக்கியமானதென்றும் ஒருவர் வாதிடலாம்தான். ஆனால் உலகின் முதல் கேள்விகளே கடைசிக் கேள்விகளாகவும் இருப்பதற்கான வாய்ப்பு வாழ்க்கையின் நிகழ்தகவில் மறையாமலே இருந்துகொண்டிருக்கிறது. நன்மை-தீமை, துயரம்-மகிழ்ச்சி என்ற இருமைப் புள்ளிகளுக்கிடையில் உலகின் முதல் கேள்விகள் ஓயாத ஊசலாக ஆடிக்கொண்டிருக்கின்றன.

நன்மையின் சோலை அல்லது தீமையின் பாலை, இவற்றில் வாழ்க்கை ஒருவரை எந்த இடத்தில் வைத்திருக்கிறது என்பதைப் பொறுத்து அவர் இக்கேள்விகளுக்கு நம்பிக்கையான பதில்களையோ அவநம்பிக்கையான பதில்களையோ சொல்வார். பாலைவனச் சோலையில் இருப்பவரின் பதில் இன்னொரு விதத்தில் இருக்கக்கூடும். மனித வாழ்க்கையில் நம்பிக்கை, நன்மை போன்ற கருத்தாக்கங்கள் செயற்கையானவை, துயரமும் தீமையுமே நிதர்சனம் என்று அவநம்பிக்கைவாதிகள் சொல்லக்கூடும். நான் இப்படிப் பார்க்க விரும்புகிறேன்: மனித வாழ்க்கையின் அடிப்படையான தளமே நீண்ட இருள்வெளிதான், மனித இருப்பில் துயரமும் தீமையும் இருண்மையும் இயல்பாகவே இருக்கின்றன, அவை கையளிக்கப்பட்டவை. அந்த இருள்வெளியின் மீது நின்றுகொண்டு அரையிருளில் நெய்யும் பட்டுப்பூச்சிகளைப் போல ஒளியையும் நம்பிக்கையையும் நன்மையையும் உருவாக்கிக்கொள்ள முனைகிறோம். மீட்சியின் மீது நம்பிக்கை இருந்தால் அங்கே பிரயத்தனமும் தேவைப்படுகிறது.


மனிதர்கள் பாவம் செய்யக்கூடியவர்கள், இயல்பிலேயே தீமைக்குணம் கொண்டவர்கள், ஆனால் அவர்களால் மனந்திருந்தி மீட்சியை இம்மையிலோ மறுமையிலோ அடையமுடியும் என்பது சமயங்களின் அடிப்படையாக இருக்கிறது. ஆபிரகாமிய சமயங்கள் மனித மீட்சியை இறுதித் தீர்ப்பு நாளில் ஒரு தெய்வீகத்தின் கரங்களால் வழங்கப்படுவதற்கு ஒத்தி வைத்திருக்கையில் கீழைத்தேய மதங்கள் மனித மீட்சியை இந்த வாழ்க்கையிலே வலியுறுத்துவதாகத் தெரிகிறது. தர்க்கத்தைக் கொண்டு இறையியலைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யும் ஒருவர் மறுமையைக் குறித்த அத்தனை நம்பிக்கைகளும் இம்மையைக் குறித்தனவே என்ற புரிதலை எளிதாகவே அடையமுடியும்.


ஒருவர் இந்த உலகத்தில் தீமையைத் தேர்ந்தெடுப்பதற்கும் தீயவராக இருப்பதற்குமான சுதந்திரத் தேர்வாற்றல் (free will) இருக்கிறதா என்ற கேள்வி ஆழமானது. “இல்லை” என்பதே இன்றைய சமூக மற்றும் சமய நிறுவனங்ளின் பதில். மற்றமை (Other) இல்லையென்றால் நன்மை, தீமை என்ற கருத்தாக்கங்களுக்கும் இடமில்லை, ஆனால் இன்றைய மனித வாழ்க்கையோ தீமை என்பது குற்றமாக அர்த்தப்படும் ஒரு கூட்டு நிறுவனம். ஒருவரது “சுதந்திரத் தேர்வாற்றல்” பிறருடைய நலனுக்குத் தகவமைந்து இருக்கவேண்டிய அவசியம் இல்லையென்றாலும் ஊறானதாக இருக்கக்கூடாது. தீமையை உண்டாக்குகிற ஒருவர் குற்றவுணர்ச்சிக்கு ஆளாகாமல் இருக்கலாம், ஆனால் அவருடைய குற்றத்தின் பொருட்டு சமூகத்தின் கூட்டுமனமாக குற்றவுணர்வையும் இரங்கலையும் நாம் உணர்கிறோம். பூசி மெழுகாமல் கூறினால் மற்றமைகளுடனான பரப்பில் இன்றைய மனிதனுக்கு சுதந்திரத் தேர்வாற்றல் கிடையவே கிடையாது.

விவிலியத் தத்துவார்த்தப் பின்புலத்தில் உலகின் முதல் கேள்விகள் பலவற்றை ஜான் ஸ்டெயின்பெக் தன்னுடைய “ஈஸ்ட் ஆஃப் ஈடன்” நாவலில் விசாரணை (inquisition) செய்திருக்கிறார். நாவலாக வாசித்திருக்கவில்லையென்றாலும் நெட்ஃப்ளிக்ஸ் வலையோட்டத்தில் ஏழு அத்தியாயங்கள் கொண்ட தொடராக வெளியாகியுள்ள இதன் திரைவடிவம் சிறப்பான அனுபவத்தையும் நிறையக் கேள்விகளையும் வழங்கியது.

வாழ்க்கையில் முன்விதிக்கப்பட்ட எந்தக் காரணிகளின் ஆளுகைக்கும் செல்வாக்குக்கும் உட்படாமல் “நன்மையையோ தீமையையோ தேர்ந்தெடுப்பதில் மனிதனுக்கு சுதந்திரத் தேர்வாற்றல் உண்டு” (thou mayest) என்ற வாதத்தை, வேறொரு விதமான விவிலிய வாசிப்பின் அடிப்படையில் முன்வைக்கும் ஸ்டெயின்பெக்கின் தத்துவார்த்த விசாரணை, தஸ்தாவெஸ்கி மற்றும் டால்ஸ்டாய் இருவருடைய விசாரணைகளும் ஒன்றுகலந்தாற் போலிருக்கிறது. ஆனால் ஒரே முக்கிய வேறுபாடு அவர்கள் இருவரும் தீமையை நன்மை வெல்வதை முன்வைத்தார்கள், ஆனால் ஸ்டெயின்பெக் அந்தத் தேர்வை மனிதத் தன்னுணர்விடம் கையளிப்பதாகத் தோன்றுகிறது. மனிதர்களுடைய சுதந்திரத் தேர்வாற்றல் எல்லைக்குட்பட்டதாக அல்லது இல்லவே இல்லாத நவீன காலத்தில் இந்த நிலைப்பாட்டுக்கு தத்துவார்த்தப் பெறுமதி உண்டென்றாலும் நடைமுறைப் பெறுமதி என்னவென்பது இன்னும் ஆழமான கேள்வி.

பட்டினத்தார் கருத்தை ஏற்றுக்கொள்கிறவனாக இருந்தால் “பெண்ணாகி வந்ததொரு மாயப்பிசாசம்” என்று கேத்தி ஆம்ஸைச் சொல்லியிருப்பேன், ஆனால் அப்படியில்லாததால் சுதந்திரத் தேர்வாற்றலின் மூலம் தீமையைத் தன்னுரிமையாக தேர்ந்துகொண்ட ஒருத்தி என்றே அவளைச் சொல்வேன். கேத்தியாக நடித்திருக்கும் ஃப்ளோரன்ஸ் பியூவின் (Florence Pugh) நடிப்பு அபாரமானது.

புறவயத்தில் குடும்ப நாடகீயமாகவும் அகவயத்தில் தத்துவார்த்த நாடகீயமாகவும் அமைந்திருக்கும் இந்தக் கதையை நாவலாகவும் வாசிக்கும் உந்துதலை குறுந்தொடர் ஏற்படுத்தியிருக்கிறது.

East of Eden - Netflix
2026 ‧ Thriller ‧ 1 season

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிறுகதை எழுதுவது எப்படி

பருவத்தின் பேரொளி - The Museum of Innocence

நம்பிக்கையுணர்வின் மீதான சூதாட்டம் - கிறிஸ்டியன் பெட்ஸோல்டு (Christian Petzold) திரைப்படங்கள்