மொழியாக்கமும் செயற்கை நுண்ணறிவும்

ஆங்கிலத்தில் elephant in the room என்று சொல்வார்கள், உடனடியான ஒரு பிரச்சனையை ஒருவரும் பேசாமல் தவிர்த்துக்கொண்டிருப்பது. தமிழ் மொழியாக்கத்தில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அப்படியான விஷயமாக மாறியிருக்கிறது. இங்கே “இலக்கிய மொழியாக்கம்” என்பதின் அடிப்படையில் எனது தொடக்கநிலை எண்ணங்களைப் பகிர்ந்திருக்கிறேன். கீழே மூலமொழி என்று குறிப்பிட்டிருப்பது பிரதானமாக ஆங்கிலம்.

1) ஒரு இலக்கியப் படைப்பை மொழியாக்கம் செய்யும்போது அடிப்படையான நோக்கங்கள் என்ன? மூலப்படைப்பின் புனைவுரு, அர்த்தம், தொனி ஆகியவற்றை இழந்துவிடாமல் இலக்குமொழியில் கொண்டுவருவது, மூலமொழியின் பிரத்யேகத் தன்மைகளை இலக்குமொழியில் தட்டையாக மாற்றிவிடாமல் ஒரு சமரசப் புள்ளியைக் கண்டடைவது, மூலத்தை இடறாமலும் சிதைக்காமலும் இலக்குமொழியின் வாக்கிய அமைப்பு மற்றும் பொருளமைப்பைப் (syntax and semantics) பின்பற்றி வாசிப்பின்பத்தைக் கூட்டுவது என்பனவற்றைக் கூறலாம். மொழிபெயர்ப்பாளரின் கொள்கைகளுக்கேற்ப இவை கூடக்குறைய இருக்கலாம். இலக்குமொழியின் வாசகருக்குப் பழக்கமில்லாத உலகிலிருந்தும் மொழியிலிருந்தும் வரும் படைப்பை அவர் வாசிக்கும்போது வாசகருக்கு “ஒரு மானசீக உலகத்தை” அந்த மொழியாக்கத்தால் உருவாக்கித் தர முடிந்தால் அது ஓரளவுக்கு நல்ல மொழியாக்கம்.

2) மொழியாக்கம் நூறு சதவீதம் துல்லியமாக இருக்கமுடியாது. மூலப் படைப்பின் ஆசிரியரே அதை இலக்குமொழியில் திரும்ப எழுதினால் ஒழிய மொழியாக்கத்தின் மேம்படுத்தல்கள் முடிவுறாதவை. சர்வ நிச்சயமாக பிழைகளுக்கும் இழப்புகளுக்கும் வாய்ப்புகள் இருக்கும் என்ற கவனத்தோடு தொடர் மீளாய்வுகள் அவசியம். மொழிபெயர்ப்பாளருக்கு எதையும் கேள்விக்குட்படுத்தாமல் ஏற்றுக்கொள்ளும் மனநிலை (taken for granted) கூடாது. மொழியாக்கத்தில் “அறியாமல்” நேர்ந்துவிட்ட பிழைகளை ஒப்புக்கொண்டு மறுபதிப்பு சாத்தியமாகும்போது திருத்தலாம், பிழைகளை நியாயப்படுத்துவதற்குத் தத்துவார்த்த விளக்கங்கள் கொடுக்க வேண்டியதில்லை.

3) அனுபவமுள்ள மொழிபெயர்ப்பாளராக இருந்தாலும் நிச்சயம் எடிட்டர் தேவை. இன்னொருவர் வாசிப்பின்றி மொழியாக்கம் அச்சாகக்கூடாது. துரதிருஷ்டவசமாக நம் சூழலில் அப்படியான எடிட்டர்களுக்கான வாய்ப்புகள் குறைவு. பதிப்பகங்கள் பங்களிப்பு இங்கே முக்கியம்.

4) மொழிபெயர்ப்பாளருக்கு மூலமொழியிலும் அதன் இலக்கியங்களிலும் கட்டாயம் வாசிப்புப் பயிற்சி வேண்டும், பெரும் புலமை இருந்தால் அது கூடுதல் சிறப்பு. மொழிபெயர்ப்பாளரின் தாய்மொழியாக இலக்குமொழி இருந்தாலும் அதிலும் இலக்கியப் பயிற்சி அவசியம். கருவில் திருவல்ல, பயிற்சியே முக்கியம்.

5) ஒரு மொழிபெயர்ப்பாளரின் ஈகோ என்னவாக இருக்கிறது என்பது முக்கியமானது. தனி மனதின் கலைவெளிப்பாடு என்ற விதத்தில் நேரடிப் படைப்பாளிக்கு ”கலைஞர்” என்ற அந்தஸ்து தன்னியல்பாகவே அமையும். மொழியாக்கப் பணி கலைத்தன்மை கொண்டதெனினும் அது முழுமையாகவும் கலைச் செயல்பாடல்ல, அதற்கு நிச்சயம் புனைவு மனமும் கலைப் பிரக்ஞையும் தேவையென்றாலும் அடிப்படையில் அது மூலப்படைப்பின் எல்லைகளுக்கும் விதிகளுக்கும் உட்பட்ட ஒரு பணியே (task). மீறலை அனுமதிக்காத ஒரு காரியம் கலையாகாது. ஒரு பணி என்ற விதத்தில் மொழியாக்கத்தைச் சிறப்பாகச் செய்வதற்கு உதவும் கருவிகளைப் பயன்படுத்துவதில் எனக்குத் தயக்கமில்லை.

6) மொழியாக்கத்தில் செயற்கை நுண்ணறிவின் இப்போதைய சாத்தியம் என்ன? அது குறைந்தபட்சம், ஒரே அளவுகோலில் ஒப்பிடுதல் (apple to apple comparison) என்பதின் அடிப்படையில் முழுக்கவும் சரி அல்லது முழுக்கவும் பிழை என்று சொல்லிவிடமுடியாத ஒரு கரட்டு வடிவத்தைக் கொடுக்கிறது. புனைவு வடிவங்களோடு ஒப்பிடுகையில் கட்டுரை வடிவங்களில் அதன் மொழிபெயர்ப்பு கூடுதலான துல்லியத்தோடு இருக்கிறது. காரணம், கட்டுரை மொழியின் நேர்கோட்டுத் தன்மை மற்றும் தகவல்களின் (facts) வெளிப்படைத் தன்மை. ஆனால் இலக்கிய மொழியாக்கத்தில், மூல ஆசிரியரின் தனித்த மொழிநடை, மறைகுறிப்புகள் (allusion), உருவகங்கள் (allegory), வரிகளுக்கிடையில் வாசிக்கவேண்டியவை போன்ற இலக்கிய அம்சங்களை முழுமையாகக் கண்டறிந்து இலக்குமொழியின் சீர்மையான வாக்கிய, பொருளமைப்புக்கேற்ற (syntax and semantics) மொழியாக்கத்தை இன்றைய தேதியில் செயற்கை நுண்ணறிவால் கொடுக்க முடிவதில்லை.

7) பொதுவான வகையிலேயே செயற்கை நுண்ணறிவுடனான தொடர்ச்சியான உரையாடல்களும் உள்ளீடுகளும் (prompt) அதன் திறனை மேம்படுத்தவே செய்கின்றன. நீங்கள் ஏற்கெனவே அளித்துள்ள தரவுகள், உள்ளீடுகள், தகவல்களைக் கோர்த்து அதற்கென்று ஒரு தர்க்கம்/நினைவு/மூளை/விழிப்புணர்வைக் கட்டமைத்துக்கொள்கிறது. இதனடிப்படையில் செயற்கை நுண்ணறிவு சரியான பதில்களாக இல்லாவிட்டாலும் சாத்தியமான பதில்களை வரிசைப்படுத்தி வழங்கிவிடுகிறது, இப்போது நீங்கள் இயற்கை நுண்ணறிவைக் கொண்டு சரியானதைத் தேர்ந்துகொள்ளலாம். மொழியாக்கத்தைப் பொறுத்தவரை சிக்கலான வாக்கிய அமைப்புகளை விளங்கிக்கொள்வது, அறியாத சூழமைவைப் (context) புரிந்துகொள்வது, மரபுத்தொடர்களின் உண்மையான பொருளை தெரிந்துகொள்வது போன்றவற்றில் இது நிச்சயம் உதவுகிறது. மனித அகராதி என்றுகூட சொல்லலாம்.

8. மொழியாக்கத்துக்கு செயற்கை நுண்ணறிவு உட்பட எவற்றைப் பயன்படுத்தினாலும் இறுதிப் பொறுப்பு (Onus) மொழிபெயர்ப்பாளர்தான். கருவிகளை எந்தளவுக்குப் பயன்படுத்த வேண்டும் என்பது அவருடைய தனிப்பட்ட வரம்புக்குட்பட்டது. நான் ஏற்கெனவே குறிப்பிட்டிருப்பது போல செயற்கை நுண்ணறிவால் “நகல் கலையைத்தான்” உருவாக்க முடியும். இலக்கிய மொழியாக்கத்தைப் பொறுத்தவரை மொழிபெயர்ப்பாளரின் கலைத்தன்மை அல்லது செயற்கை நுண்ணறிவின் தடயம், எது அதிகம் இருக்கிறதென்பதை பக்கத்தை விரித்தவுடன் வாசகர் சொல்லிவிடுவார் என்பதால் இதில் விவாதிப்பதற்கு அதிகம் ஏதுமில்லை.

9. இந்த மொத்தப் பேச்சிலும் உள்ளே உறைந்திருக்கும் அந்த ஒற்றைக் கேள்வி: மொழிபெயர்ப்பாளர் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பை வெளிப்படையாக குறிப்பிட வேண்டுமா? இன்றைய தேதியில் அப்படி அளித்துவிடுமளவுக்கு செயற்கை நுண்ணறிவால் இலக்கிய அழகியலுக்குப் பங்களிப்புச் செய்ய முடிவதில்லை. இருப்பினும், ஒரு தனிச் செயலாளரைப் போல் மொழியாக்கத்தில் அதன் உதவி முக்கியமானது. செயற்கை நுண்ணறிவின் நம்பகத்தன்மை கூடி இலக்கிய அழகியலில் அது முதிர்ச்சியடையும் காலகட்டத்தில் அதற்கான அங்கீகாரத்தை கொடுத்துத்தான் ஆகவேண்டும்.

பின்குறிப்பு:

இந்தக் கட்டுரையை நான் சேட் ஜிபிடியில் உள்ளீடு செய்து அதன் கருத்துக்களைக் கேட்டேன். அதன் பதில்கள் என் கருத்துக்களோடு ஒட்டியும் வெட்டியும் சுவாரசியமாக இருந்தன. ’நகல் கலை’ என்று சொன்னதுக்கு கோபித்துக்கொண்டது. அதற்கு விழிப்புணர்வு உண்டு என்று சொல்வது முழுக்கவும் சரியல்ல என்று விழிப்புணர்வோடு சொன்னது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிறுகதை எழுதுவது எப்படி

பருவத்தின் பேரொளி - The Museum of Innocence

நம்பிக்கையுணர்வின் மீதான சூதாட்டம் - கிறிஸ்டியன் பெட்ஸோல்டு (Christian Petzold) திரைப்படங்கள்