தேவநாயகி கருத்தரங்கு- இரண்டு உரைகள்
தேவநாயகி நிகழ்வில் ஜெ. மற்றும் அ.வெண்ணிலா ஆகியோருடைய உரைகளைக் கேட்டு, யூடியுப் டிரான்ஸ்க்ரிப்ஷனை வாசித்து எனது புரிதலின் அடிப்படையிலும் நுண்ணறிவுச் செயலியின் உதவியுடனும் இரு உரைகளிலும் உள்ள ஐந்து முக்கியக் கருத்தாக்கங்களை தொகுத்திருக்கிறேன்.
1. தேவரடியார் மரபையும் பரத்தமையையும் ஒன்றாகக் கருதக் கூடாது.
2. கோயில் மையமான தமிழ் சமூகத்தின் உருவாக்கத்தோடு தேவரடியார் மரபும் வளர்ந்தது.
3. காலனிய ஆட்சி தேவரடியார்களைப் பற்றிய புதிய எதிர்மறை பார்வையை உருவாக்கியது.
4. தேவதாசி ஒழிப்பில் சீர்திருத்தவாதப் பார்வைக்கும் தேவரடியார் பெண்களின் சொந்தக் குரலுக்கும் இடையே முரண்பாடு இருந்தது.
5. ஒரு சமூக நிறுவனத்தின் மறைவு, அதனுடன் தொடர்புடைய பண்பாட்டையும் மறைத்துவிடக் கூடாது.
1. பின்- உண்மை காலகட்டத்தில், உண்மை” என்பதும் ஒரு கதையாடல் (நேரேட்டிவ்).
2..தேவதாசி மரபை அதன் வரலாற்றுச் சமூகச் சூழலில் பார்க்க வேண்டும்.
3..தேவதாசிகளைப் பற்றிய எதிர்மறைச் சித்திரம் காலனிய மற்றும் கிறிஸ்தவக் கதையாடல்களால் வலுப்பெற்றது.
4.நவீன இந்தியச் சீர்திருத்தமும் அதே ஒழுக்கக் கண்ணோட்டத்தை வேறு வடிவில் தொடர்ந்தது, தேவதாசி மரபைப் புரிந்துகொள்வதில் விக்டோரிய ஒழுக்கவியல் அல்லது ஐரோப்பியக் கருத்தாக்கங்களின் செல்வாக்கு இருக்கிறது.
5. தேவதாசி மரபின் முடிவு இயல்பான வரலாற்று மாற்றமாக இருந்தாலும், அதனுடன் ஒரு பண்பாட்டு இழப்பும் ஏற்பட்டது; கலை, இசை, நடனம், கல்வி மற்றும் தனித்துவமான பண்பாட்டு செல்வங்கள் இழிவுபடுத்தப்பட்டு அழிந்துவிட்டன.
ஜெ. உரையில் இந்திய மற்றும் தமிழ்ச் சூழலில் உருவாகி நிலைபெற்றிருந்த பழைமைவாத அமைப்பை (அதன் பண்பாட்டுக் கூறுகளோடு) ஒரு நிலைபெற்ற அமைப்பாகச் (static system) சுட்டுவது போல் தெரிகிறது, வெளியிலிருந்து வந்து மோதிய கதையாடல்கள் இந்தப் பழமைவாத அமைப்பின் மீதான வாசிப்பை தங்கள் நலனுக்கேற்ப உருவாக்கின என்று சொல்கின்றார். வந்து மோதியவைகள் கதையாடல் என்றால் இங்கே நிலைபெற்று நீடித்திருந்தவையும் கதையாடல்தான். அது யாரின் நலன் பொருட்டானதாக இருந்தது என்று பேச வேண்டிய தேவையும் இருக்கிறது.
ஜெ.வின் பேச்சில் "நிலைபெற்ற அமைப்பாகத்" தொனித்த இந்தப் பழமைவாத அமைப்பின் கதையாடல் என்னவென்பதை புறவயமான நோக்கில் அ.வெண்ணிலாவின் உரை ஓரளவுக்குப் பூர்த்தி செய்வதாகத் தோன்றுகிறது. ஆனால் பக்தி, கலை என்ற பண்பாட்டு நோக்கில் தேவரடியார் மரபை, அதில் பாலியல் தொழில் நுழைவதற்கு முன்னான காலகட்டத்தை அவர் நேர்மறையாக அணுகுகிறார் என்பது அவருடைய பேச்சிலிருந்து தெரிகிறது.
மேலும், பிரிட்டிஷ் ராணுவத்தாருடைய கண்டோன்மெண்ட்டை ஒட்டிய பகுதிகளில் பாலியல் தொழில் பெருகியது, அதன் காரணமாக பால்வினை நோய்கள் பெருகியது, அதைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் பாலியல் தொழிலாளர்களோடு சேர்ந்து ”மதத்தின் பேரிலான தவறான விஷயங்கள்” என்ற நோக்கில் தேவரடியார்களும் சேர்த்து உள்ளடக்கப்பட்டுப் பிற்பாடு தேவதாசி முறை ஒழிக்கப்படுவதற்கு காரணமாக அமைந்துவிட்டது என்பது அ.வெண்ணிலா உரையின் மையமாக இருக்கிறது.
இந்த இரண்டு உரைகள் அளிக்கும் சுருக்கமான செய்தியாக மேற்சொன்ன ஐந்தாவது கருத்தாக்கங்களை எடுத்துக்கொள்ளலாம். மேலும் பாலியல் நோக்கில் விக்டோரிய ஒழுக்க மரபு வெகு கட்டுப்பாடானது, இந்திய ஒழுக்க மரபு சற்று நெகிழ்வுத்தன்மையானது —— பரத்தமை, திரிபடைந்துவிட்ட தேவரடியார் மரபு ஆகியவை அந்த நெகிழ்வுத்தன்மையின் பகுதியாக இருந்தன. காலனியத்தின் விளைவாக தேவரடியார் மரபில், திரிபடைந்த அந்த மோசமான பகுதி மட்டும் வெட்டியெறியப்படாமல் தேவரடியார் மரபு என்ற முழுமையான அமைப்பே அழிக்கப்பட்டுவிட்டது என்பதை இவ்விரு உரைகளின் சாரமாகக் கருதுகிறேன்.
இரு உரைகளுமே தேவரடியார் மரபின் முடிவை வரலாற்று மாற்றமாக ஏற்கின்றன என்பதையும் குறிப்பிடவேண்டும். மேலும் வெண்ணிலாவின் உரையில், கலாச்சார நோக்கில் தேவரடியார் மரபின் செழுமையான கலையம்சங்கள் அமைப்பின் வேறு அலகுகளால் உள்வாங்கப்பட்டுவிட்டன, பரதம் வேறொரு நிறம் பெற்று நிலைபெற்றுவிட்டது, அந்த அமைப்பின் பகுதியாக இருந்த ஆண் பக்க வாத்தியக்காரர்களும் கருவிகளும் வேறொரு விதமாக, தேவதாசி மரபு ஒழிப்புக்குப் பிந்தைய கோவில் அமைப்பால் ஸ்வீகரிக்கப்பட்டு விட்டனர், அந்தப் பெண்கள் மட்டும் collateral damage ஆக திரும்பவும் பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படும் சூழ்நிலை உருவாகிவிட்டது என்கிறார். அப்படியென்றால் இங்கே எந்தப் பண்பாட்டு இழப்பும் நேரவில்லை, ஒரே துயரமான விஷயம் திரும்பவும் அந்தப் பெண்கள் பாலியல் தொழிலுக்குள் தள்ளப்பட்டதுதான்.
விக்டோரியன் ஒழுக்க வாதம் வந்து முத்திரை குத்தியதால் மட்டுமல்ல, நவீன மனித சமூகம் அடைய முயன்றுகொண்டிருக்கும் விழுமியங்களின் அடிப்படையிலும் (அதுவொரு பெரும் யுட்டோப்பிய கருதுகோளாக இருந்தாலும்) சட்டம் நீதி நேர்மை ஆகியவை கடந்த ”தார்மீகத்தின்” அடிப்படையிலும் அதன் பண்பாட்டு கலாச்சார இழப்புகள் குறித்த கவலையின்றி தேவதாசி மரபு ஒழிக்கப்படவேண்டியதாக இருந்ததும் அது நிறைவேறியிருப்பதும் நாம் முன்னோக்கி நடந்திருக்கிறோம் என்பதற்கான சான்று.
இந்திய மற்றும் தமிழ்ச் சமூகத்தில் எந்தவொரு சமூக அரசியல் பிரச்சினையும் வெறுமனே சமூக அரசியல் பிரச்சனை மட்டுமல்ல, அவை முதன்மையாக கலாச்சாரப் பிரச்சனைகள் . உதாரணத்துச் சாதி. சாதிக்கு முதலில் ஒரு கலாச்சாரத் தீர்வைக் கண்டடைந்த பிறகுதான் அரசியல் தீர்வை அடையமுடியும், அந்தளவுக்கு இந்தச் சிக்கல்கள் கலாச்சாரத்தில் ஊருடுவியிருக்கின்றன. இன்றைய சமூகத்தின் மானுட நடைமுறைக்கு ஒவ்வாத பழைய கலாச்சாரக் கூறுகளைத் தூக்கி ”மானுடவியல் அருங்காட்சியகத்தில்” வைத்துவிட்டு இன்றைக்கான சிந்தனைகளைத் தேடவேண்டியிருக்கிறது.
அப்படி மானுடவியல் அருங்காட்சியகத்தில் இருக்கவேண்டிய ஒன்றைத் தூக்கி வந்து நாயகி அமைப்பினர் இன்றைய சூழ்நிலையில் இப்படியொரு கருத்தரங்கை நடத்துவதற்கான தேவை என்னவென்று தெரியவில்லை. எழுத்தாளர்கள் என்ற கோணத்தில் இருவருடைய உரைகளை மட்டும் முக்கியப்படுத்தி பார்த்தேன். நிகழ்வின் மற்ற உரைகளை இன்னும் பார்க்கவில்லை. நிகழ்வின் நோக்கம் என்னவென்று ஒருவேளை அவர்கள் நிகழ்வின் தொடக்கத்தில் குறிப்பிட்டிருக்கலாம். எனினும், பெண் என்ற நோக்கில் ஒடுக்குதலுக்கு உள்ளான ஒரு சமூகக் குழுவின் பண்பாட்டு வரலாற்றை ஆராய்வது மற்றும் அவர்களது கலைப் பங்களிப்பை கவனப்படுத்துவது என்பது அவர்களுடைய நோக்கமாக இருந்திருக்கும் என்று யூகிக்கிறேன். மேலும் செடல் என்ற நாவலை எழுதிய எழுத்தாளர் இமையத்தை அழைத்திருந்தால் அவர் வேறொரு கோணத்தை வழங்கியிருக்கக்கூடும்.
தேவரடியார் மரபின் முடிவை இயல்பான சமூக மாற்றமாக எல்லோருமே ஏற்றுக்கொள்கிற அதே நேரத்தில் இந்தக் கணத்தில் அதன் பண்பாட்டுப் பெருமிதங்களை மட்டும் முக்கியப்படுத்திப் பேசுவது, தற்போது இந்திய தேசியத்தில் வலுப்பெற்று வரும் மதம்சார்ந்த ”கலாச்சார அழகியல் மீளுருவாக்கப்” ப்ராஜெக்டின் பகுதியாக மாறிவிடும் ஆபத்து இருப்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
கருத்துகள்