எழுத்தாளர் தன் சமகாலப் படைப்புகளைப் பேசவேண்டுமா?

புத்தகங்களை நோக்கிய திரைத்துறையினரின் அணுகுமுறை குறித்து சற்றே வேடிக்கையோடு எழுதிய முந்தைய பேஸ்புக் பதிவைத் தொடர்ந்து க.விக்னேஸ்வரன் எழுதிய குறிப்பில் ‘எழுத்தாளர்கள் வாசிக்கிறார்களா, எத்தனை எழுத்தாளர்கள் மற்ற எழுத்தாளர்களின் புத்தகங்கள் குறித்துப் பேசுகிறார்கள்?’ என்ற முக்கியமான கேள்விகளை எழுப்பியிருந்தார். இது அவற்றுக்கான பதில் அல்ல, ஆனால் அந்தக் கேள்விகளினால் எழுந்த யோசனைகள். இலக்கியம் சார்ந்த அரசியல் சரிநிலையோடு பேச வேண்டும் என்பது இங்கே என் நோக்கமாக இல்லை, தனிப்பட்ட மனச்சாய்வுகள், முன்னூகங்கள், சரியானதும் பிழையானதுமான புரிதல்கள் எல்லாம் இணைந்ததாகவே விஷயங்களைச் சொல்கிறேன்.

இலக்கிய வரலாற்று நோக்கில் தமிழ் நவீன இலக்கியத்துக்கு இது மூன்றாவது தலைமுறை. புதுமைப்பித்தன் தொடங்கி மணிக்கொடி, கசடதபற, நடை உள்ளிட்ட நவீனத்துவத்தின் தாக்கத்தில் உருவானது முதல் தலைமுறை. வலுவான சிற்றிதழ் இயக்கம், லத்தீன் அமெரிக்க இலக்கியத் தாக்கம், கோட்பாட்டுத் தாக்கம், இடதுசாரி அரசியல், தலித்தியம், பெண்ணியம் என்று இரு தசாப்தங்களுக்கு மேலே இரண்டாவது தலைமுறை நீடித்தது. உலகமயமாக்கலும் முதலாளித்துவமும் தொழில்நுட்பமும் ஆளுகை செலுத்தும் பின்புலத்தில் சிற்றிதழ் இயக்கம் பலவீனமடைந்து தீவிர இலக்கியத்துக்கும் வெகுஜன இலக்கியத்துக்குமான கோடுகள் அழிந்து சினிமா, காட்சி ஊடகம், சமூக ஊடகங்கள் ஆகியவற்றின் செல்வாக்கு கூடியது இன்றைய மூன்றாவது தலைமுறை.


தரத்தின் அடிப்படையில் அல்லாமல் இயங்குமுறையின் அடிப்படையில் தமிழ் நவீன இலக்கியத்துறையை மூன்றடுக்காகப் பிரிக்கலாம். ஒருவர் தன் சொந்த ஊரில் இருக்கும் இலக்கியக் குழுக்களுடன் இணைந்து இயங்குவது, இலக்கியக் கூட்டங்களுக்குச் செல்வது, வெகுஜன மற்றும் இடைநிலை அச்சிதழ்களிலும் இணைய இதழ்களிலும் சமூக ஊடகங்களிலும் எழுதத்தொடங்குவது போன்றவை புற வட்டத்தில் அடங்கும், அதாவது ஒரு வாசகர் கவிஞராகவோ எழுத்தாளராகவோ மலரும் பருவம். தன் நூலைப் பதிப்பது, சூழலில் தன் பெயரை அடையாளப்படுத்துவது, ’நம்பிக்கையூட்டும் படைப்பாளராக’ மேலெழுவது போன்றவை இரண்டாவது உள்வட்டத்தில் அடங்கும். இலக்கிய அழகியல் அல்லது அரசியல் கூர்மை ஆகியவற்றின் வழியே சமகாலத் தமிழ் நவீன இலக்கியத்தின் பகுதியாக ஒரு படைப்பாளர் மாறுவது மூன்றாவதும் இறுதியானதுமான உள்வட்டம். (அந்த உள்வட்டத்தின் மையத்தில் பீடம் இருக்கிறதா, இல்லையா என்பதை அவரவர் கருத்துக்கே விட்டுவிடுகிறேன்).

குழு மனப்பான்மை என்கிறோம். ஆனால் தமிழ் நவீன இலக்கியம் குழுக்களின் வழியாகத்தான் வளர்ந்தது. எல்லா துறைகளிலும் இருக்கும் சிறிய சிந்தனைக் குழுக்கள்தான் அந்தத் துறையை முன்னகர்த்துகின்றன. உதாரணத்துக்கு என்னுடைய அரசியல், சினிமா குறித்த கருத்துக்களை விட துறை சார்ந்த வல்லுநன் என்ற முறையில் இலக்கியக் கருத்துக்கே கூடுதல் பெறுமதியுண்டு. உள்ளிருந்து விரியும் நீர் வட்டத்தைப் போல கருத்துக்களும் செயல்களும் சிறிய சிந்தனைக் குழுக்களிலிருந்து விரிவதே சமூக இயங்கிலின் அடிப்படை, ஒன்றுக்கொன்று முரண்பட்டு அவை வளர்கின்றன.

தமிழில் எழுத்தாளரின் இடம் வெகு சிறியது அல்லது இல்லவே இல்லை. இன்றைய சமூக அரசியல் வாழ்க்கைச் சூழலில் அவர் எந்தச் செல்வாக்கையும் செலுத்துவதில்லை. ஆயுட்காலம் முழுவதும் சோர்வின்றி செயல்பட்டால் அவரால், எறும்புகளின் வரிசையில் கண்ணுக்குத் தெரியாத ஒரு தானியத்தைத் தூக்கிச் செல்லும் ஒற்றை எறும்பின் அளவில் சமூக அசைவியக்கத்துக்கு ஏதேனும் பங்களிக்க முடியும், இதுவுமே சற்று கற்பனாவாதமான கருத்துதான். எழுத்துக்குப் பயனே இல்லை என்று முழுக்க இருண்மையாகவும் நினைக்கவில்லை, ஆனால் அது பெரும்பாலும் தூலமாகவும் பொருண்மையாகவும் கண்ணுக்குத் தெரிவதில்லை, எங்கோ சில மனிதர்களின் மனநிலைகளுக்கு எழுத்து ஆதுரமாய் இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் எழுத வேண்டியிருக்கிறது.

இதுவே இன்றைய தமிழ் எழுத்தாளரின் இயங்குதளம். ஏற்பு அல்லது அங்கீகாரத்தின் அடிப்படையில் கசப்போ புகார்களோ இல்லாத எழுத்தாளர்கள் வெகு குறைவு அல்லது ஒரே ஒருவர் மட்டும்தான் இருக்கிறார். நான் என்னையே எடுத்துக்கொள்கிறேன், இருநூறுக்குப் பக்கமாகக் கவிதைகள் எழுதியிருக்கிறேன், அவற்றில் இருபது கவிதைகள் உலகத்தரமானவை. இருபத்தைந்து சிறுகதைகள் எழுதியிருக்கிறேன், அவற்றில் ஆறு கதைகளை தமிழின் மிகச்சிறப்பான சிறுகதை மரபில் வைப்பேன், இரண்டு நாவல்கள் எழுதியிருக்கிறேன், அதில் ஒன்று தமிழின் இளம் செவ்வியல் நாவல் அந்தஸ்த்தை அடைந்திருக்கிறது. ஆனால் விமர்சகர்களோ என் சமகாலத்தவரோ வாசகர்களோ என் எழுத்தைக் குறித்த சுய மதிப்பீட்டை ஒப்புக்கொள்வார்களா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது, “இல்லை, நீ இரண்டாந்தர எழுத்தாளன்தான்” என்று கூடச் சொல்லலாம். சூழலில் என் எழுத்தைப் பற்றி என்ன மதிப்பீடு இருக்கிறது என்பது எனக்கு உண்மையிலேயே முழுமையாகத் தெரியாது. சமயங்களில் மேலே சொன்னது போலச் சொல்லி சூழலைச் சீண்ட வேண்டியிருக்கிறது.

பல சமயங்களில் எழுத்தாளர் பெறும் எதிர்வினைகள் மிகக் குறைவாக இருக்கின்றன, கள்ள மெளனம் என்ற வார்த்தை முன்பு அதிகமாகப் பயன்படுத்தப்படும், இப்போது அது அதிகம் கண்ணில் தென்படுவதில்லை. ஏற்பு அல்லது அங்கீகாரம் என்ற நோக்கில் தமிழின் பெரும்பாலான எழுத்தாளர்கள் தங்களை உதிரி என்று நினைத்துக் கொள்கிறார்கள், அங்கீகாரம் குறித்த எதிர்பார்ப்பை உதிர்த்துவிட்டுத்தான் வேலை செய்யவேண்டியிருக்கிறது என்பது என் இன்றைய நிலைப்பாடு. இசையின் “உனக்கு நீயே” கவிதையைப் போலத்தான் இலக்கியத்தில் இயங்க வேண்டியிருக்கிறது.

இலக்கியம் குழுவாக வளர்வதுதான் நல்லது என்று தோன்றுகிறது. பாபு இருந்தவரை தக்கை நண்பர்களின் பகுதியாக என்னை உணர்ந்திருக்கிறேன், ஆனால் அது பாபுவின் தனிப்பட்ட குணநலன்களால் தன்னியல்பாகத் திரண்ட, மகிழ்ச்சியான, மற்ற குழுவிலிருந்தும் வந்து கலந்துகொள்ள முடிகிற ஜனநாயகமான குழு. இலக்கியத்தின் கல்லூரிக்காலம் போல அது அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. அவனது மறைவுக்குப் பிறகு நான் எந்தக் குழுவிலும் இல்லை. நான்கைந்து நண்பர்கள் இருக்கிறார்கள், அவ்வப்போது ஓரிருவரோடு பேசுவதுண்டு, அவ்வளவுதான். என் வாட்ஸ்ஏப் பாழடைந்த கிணற்றின் நிசப்தத்தைக் கொண்டது. எது எப்படியாயினும் இங்கே நான் என்னை உதிரியாக நினைத்துக்கொள்வதில்லை.

தொடக்கத்திலிருந்தே விமர்சனம் அல்லது மதிப்புரைகள் எனக்கு ஆர்வமானவையாக இருந்திருக்கின்றன. கிட்டத்தட்ட இருபது சமகால எழுத்தாளர்களின் சிறுகதைகளைக் குறித்துக் கட்டுரைகளை எழுதியிருக்கிறேன், தமிழிலும் ஆங்கிலத்திலும் அவ்வப்போது வாசிக்கும் நாவல்களைக் குறித்து குறிப்புகள் எழுதுகிறேன். ஆனால் என் படைப்புகளைக் குறித்து ஓரிருவரைத் தவிர என் சமகாலத்தவர்கள் யாரும் பெரிதாக எழுதியதில்லை. இங்கே விவாத வசதிக்காகச் சொல்கிறேனே தவிர அதை நான் குறையாக நினைக்கவில்லை. நான் எழுத்தாளன் என்ற ஸ்தானத்திலிருந்தோ பதிலுக்கு என் படைப்புகளுக்கு மற்றவர்கள் எழுதவேண்டும் என்ற எண்ணத்திலோ அந்தக் கட்டுரைகளை எழுதவில்லை. விமர்சகன், வாசகன் அல்லது வாசித்தவற்றை எழுதித் தொகுத்துக்கொள்வது என்பதின் அடிப்படையில் நூல்களைக் குறித்து எழுதுகிறேன்.

ஆனால் விக்னேஸ்வரன் சொல்வதில் ஒரு உண்மை இருப்பதாகவே தோன்றுகிறது. முதலில் சமகால எழுத்தாளர்கள் வாசிக்கிறார்களா என்ற சீண்டலான கேள்விக்குள் நான் செல்ல விரும்பவில்லை. இரண்டாவது கருத்தைப் பொறுத்தவரை, சமகாலத் தமிழில் ஒன்றுமே இல்லை என்ற நிலைப்பாட்டோடு தனக்கு விருப்பமான வேறு விஷயங்களை ஒரு எழுத்தாளர் வாசித்துக்கொண்டிருக்கலாம், எதையேனும் ஒன்றை வாசித்துக்கொண்டிருக்கும் வரையில் அதில் நாம் கருத்துச் சொல்வதற்கு ஏதுமில்லை. ஆனால் சமகாலத்தில் எழுதும் ஒருவரின் படைப்புகளை அறிந்து வைத்திருப்பது விரும்பத்தக்கது, ஆரோக்கியமானது என்றே நினைக்கிறேன். துரதிரஷ்டவசமாக பலருக்கும் சக எழுத்தாளனுடைய படைப்புலகின் மையம் என்னவென்று தெரியாது, புத்தகங்களின் தலைப்புகள் கூட ஞாபகம் இருக்காது என்பதுதான் கசப்பான உண்மை. நான் என் சமகாலத்துப் படைப்பாளர்களின் படைப்புகளை முழுக்க வாசிக்க முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் அவர்களுடைய நூல்கள் என்ன, படைப்புலகின் மையம் என்னவென்பதை, அப்படைப்புகள் குறித்து எழுதப்பட்ட மதிப்புரைகளின் மூலம் அறிந்துகொள்ள முயற்சி செய்வேன், அதே நேரத்தில் இந்தக் குற்றச்சாட்டை என்னை நோக்கிக் வைத்துகொள்வதிலும் எனக்குப் பிரச்சனையில்லை.

இன்னொரு பரிமாணம் இருக்கிறது, இலக்கியத்துறை திட்டவட்டமான நடத்தை நெறிமுறைகளையும் விதிகளையும் கொண்ட புறவயமான, தொழில் முறையிலான துறை அல்ல, அது அகவயமானது. இது தவறு, இது சரியில்லை என்பதை விட இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்வதே பல சமயங்களில் பொருத்தமாக இருக்கிறது. இன்றைய தனிவாழ்க்கை மற்றும் பொருளாதாரச் சூழலில் எழுத்தாளன் மற்ற எழுத்தாளரைக் குறித்துப் பேசவேண்டும் என்பது முற்றிலும் தனிப்பட்ட தேர்வுகளால் ஆனது, அது அவரது தன்முனைப்பையும் துறையில் எப்படிச் செயல்பட வேண்டும் என்ற அவரது விருப்பத்தையும் அடிப்படையாகக் கொண்டது, பேசவில்லை என்று குற்றஞ்சாட்ட முடியாது.

இவற்றைக் கடந்தும் சிலர் எழுதுகிறார்கள். தமிழ்ச்சூழல் வெகு சிறியது என்பதால் எழுத்தாளரே தசாவதார வேஷங்கள் போட வேண்டியிருக்கிறது. எனவே தங்களுடைய சிந்தனைப் பள்ளிக்கு இயைந்து வருகிற, தாங்கள் உணரும் குழுவின் பகுதியாக இருக்கக்கூடிய இணக்கமான படைப்புகளைக் குறித்து எழுதத்தான் செய்கிறார்கள். பிறகு எழுத்தாளருக்குப் புலமைக் காய்ச்சல் இருக்கிறது, ஈகோ இருக்கிறது. புத்தகக் காட்சியில் நான் என் முன்னோடியைக் கண்டுகொள்ளாமல் செல்கிறேன், எனக்குப் பின்னால் எழுத வந்தவர் என்னைக் கண்டுகொள்ளாமல் செல்கிறார். ஆகவே தமிழில் ஒரு எழுத்தாளர் சக எழுத்தாளர்களைப் பற்றி மனப்பூர்வமாக விதந்து எழுதுவது முழுக்கச் சாத்தியமில்லை. பேஸ்புக்கில் ஒரு விருப்பக்குறி அழுத்தப்படுவதிலும் தவிர்க்கப்படுவதிலும் பல்வேறு யோசனைகளும் தேர்வுகளும் விருப்பு வெறுப்புகளும் இருக்கும் சூழல் இது.

எழுத்தாளரே விமர்சகராகவும் இருந்து சமகாலத்தவர்களின் படைப்புகளை விமர்சனப்பூர்வமாக அணுகுவது பல சமயங்களில் சம்பந்தப்பட்டவரைக் காயப்படுத்திவிடுகிறது. இலக்கிய விமர்சனத்தினால் கண்ணுக்குத் தெரியாத காயத்தை ஏற்படுத்தியிருப்பது பத்துப் பதினைந்து வருஷங்கள் கழித்துத்தான் நமக்கே தெரிய வருகிறது. எவ்வளவுக்கு எவ்வளவு சாத்தியமோ அந்த அளவுக்குப் பணிவான மொழியில், ஆனால் சமரசமற்ற முறையில் விமர்சனத்தை முன் வைக்க வேண்டும் என்ற மாதிரியான ஒரு நல்ல கருத்தை ஒருமுறை பா.வெங்கடேசன் சொன்னார். ஆமாம் உண்மைதான்.

ஆகவே எழுத்தாளர்களைக் குறித்துப் பேச வேண்டியது, தமிழ் இலக்கிய விமர்சகர்களும் வாசகர்களும்தான். கன்னட மொழியைப் பொறுத்தவரை ஆங்கிலத்திலும் எழுதக்கூடிய நல்ல கலாச்சார விமர்சகர்கள் இருப்பதாகவும் அவர்கள் தங்கள் விமர்சனத்தின் வழியே பல படைப்புகளை மேலெடுத்து வருகிறார்கள் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். தமிழில் குழுச் சார்புகள் இல்லாமல் இலக்கிய அழகியலை மட்டும் பிரதானப்படுத்தி எழுதும் கலாச்சார இலக்கிய விமர்சகர்கள் இன்றைக்கு யாரும் இருக்கிறார்களா என்று குழப்பமாக இருக்கிறது.

சூழல் கூட்டமாகவும் ஜெகஜோதியாகவும் இருக்கிறது, ஆனால் புத்தக விற்பனையில் அது வெளிப்படவில்லை என்றும் விக்னேஸ்வரன் சொல்லியிருந்தார், முன்புக்கு இப்போது புத்தகங்களின் விற்பனை பரவாயில்லை என்று நினைக்கிறேன், நிறுவனங்களாகச் செயல்படுகிறவர்களை விடவும் தனித்தனியாகவும் வாசிப்புக் குழுக்கள் வைத்துச் செயல்படுகிறவர்களின் வழியாகவும் புத்தகங்கள் ஓரளவுக்குச் சென்று சேர்கின்றன. மேலும் ஒருவர் தொடர்ச்சியாக வாசிக்காமல் இலக்கியச் சூழலுக்குள் தண்ணீ கேன் போட வந்தவரைப் போல் சுற்றிக்கொண்டிருந்தாலும் பரவாயில்லைதான், ஒரு பாரிலோ தியேட்டரிலோ நேரத்தைச் செலவழிப்பதைவிட இது அர்த்தமுள்ளது.

சுருக்கமாக சொல்வதென்றால் பிற சமகாலப் படைப்புகளைப் பற்றிப் பேசி அவற்றை வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பது என்பது எழுத்தாளர்களின் தனிப்பட்ட நிலைப்பாட்டைப் பொறுத்தது (செய்தால் நல்லது, பாராட்டுக்குரியது), கூடவே நமக்கு இன்னும் நிறைய இலக்கிய, கலாச்சார விமர்சகர்களும் (cultural critic) கலைநிபுணர்களும்(connoisseur) தேவைப்படுகிறார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிறுகதை எழுதுவது எப்படி

பருவத்தின் பேரொளி - The Museum of Innocence

நம்பிக்கையுணர்வின் மீதான சூதாட்டம் - கிறிஸ்டியன் பெட்ஸோல்டு (Christian Petzold) திரைப்படங்கள்