டோரதி (2026)

அரசியல் சரிநிலையோடு அமைந்திருக்கும் படம். திரைக்கதை பிசிறில்லாமல் மையத்தோடு ஒன்றி இறுதிவரை பயணிக்கிறது, முதல் பாதி உக்கிரமாக இருக்கிறது. ஆனால் மெலோடிராமா நாடகம் போன்ற இரண்டாம் பாதி மிகச் சுமார்.

டோரதியின் வருகையும் குறுகிய காலத்துக்கான அவளுடைய இருப்பும் மனங்குலைய வைக்கும் அவளது வெளியேற்றமும் சுப்புவுக்கு தனக்குள் இருக்கும் தன்னை உணர்ந்து வெளிப்படுத்திக் கொள்வதற்கான முதல் திறப்பாக அமைகிறது. சுப்புவின் அம்மா, அக்கா, டோராதி ஆகியோருக்கு நிகழும் விஷயங்கள், அவன் தன்னை உணரும் விதத்துக்கு ஒரு உளவியல் பூர்வமான தர்க்கத்தை வழங்குகின்றன. கதையில் அந்தப் பகுதி நன்றாக அமைந்திருக்கிறது
ஆனால் சுப்புவுக்குள் திறக்கும் பெண்மை கதைக்குள் உணர்வுப்பூர்வமாகக் கனியவில்லை, அது பார்வையாளருக்கு ஆண் வீரியப் பெருமிதம், புருஸ் லீ போன்ற ஆண் மையக் குறியீடுகளின் மூலம் வெளியிலிருந்து தொடர்ச்சியாகத் தூண்டப்படுகிறது. அதாவது கேமிரா என் பக்கத்தில் நின்றுகொண்டு சுப்புவைப் பார்க்கிறது, அது சுப்புவின் பக்கத்தில் நின்றுகொண்டு என்னைப் பார்க்கவில்லை.



கார்த்தியால் சுப்புவைக் கொல்ல முடியாது என்று குழந்தைகூட சொல்லிவிடும். இறுதியில் சுப்புவின் மாற்றத்தைக் கார்த்தி ஏற்றுக்கொள்வான் என்பதும் நமக்குத் தெரிகிறது, இந்த இரண்டு விஷயங்களினூடே ஆழமின்றி நகர்கிறது இரண்டாம் பாதி.

சுப்புவின் மாற்றத்தை ஏற்று அரவணைக்கும் கார்த்தியின் மாற்றம் ஆர்கானிக்காக நிகழாமல் திரும்பவும் காதலுணர்வு என்ற ஒரு புதிய விஷயத்தைக் கொண்டு வெளியிலிருந்து தூண்டப்படுகிறது. மொத்தக் கதையின் அபத்தமான பகுதி இதுதான். ஒரு நல்ல கதை, தமிழ் சினிமாவாக வீழ்ச்சியடையும் இடம். கார்த்திக்கு, சுப்புவின் உடல் இத்தனை காலம் சக பால் உடலாக இருந்தது, நட்புணர்வுதான் இருவருக்குமான ஆதார பிணைப்புணர்ச்சி. இனியான வாழ்க்கையில் இருவருடைய உறவானது காதலாகக் கனிய முடியாத அளவுக்கு அவர்களுடைய உடல்கள் வெகு பழையவை. நண்பர்களாக அவர்கள் ஏற்கெனவே ஆழமான உணர்வுகளை வாழ்ந்துவிட்டார்கள். சுப்பு வேண்டுமானால் புத்துருக் கொண்டிருக்கலாம், ஆனால் கார்த்தியின் உடல் இன்னும் மரபான அதே பழைய உடல்தான், கார்த்தியின் மனதில் ஒரு பிறழ்வின்றி அந்த முத்தம் சாத்தியமேயில்லை, ஆனால் அந்தப் பிறழ்வு கதையில் நிறுவப்படவில்லை. அந்த முத்தம்,

பால் புதுமையினருக்கான ஆதரவு மட்டுமின்றி அவர்களுடைய திருமணத்துக்கான ஏற்பை அளிக்கும் ஒரு குறியீடு, அது இல்லாமல் இந்தப் படத்தில் விவாதமில்லை என்ற அளவில் வேண்டுமானால் ஏற்கலாம். ஆயினும் இந்தக் கதையின் எல்லைக்குள் டோரதிக்கு அது வேறொரு ஆணுடன் நிகழ்ந்திருக்க வேண்டும், கார்த்தியால் ஏன் டோரதியை தன் காதலியாக அல்லாமல் தோழியாக , நண்பியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை? அது இன்னும் மேன்மையான நிலைப்பாடு அல்லவா? ஏன் அந்த உறவு காதலின் சட்டகத்துக்குள் நுழைவதாகக் காட்டவேண்டும்? இது பார்வையாளனைச் சுரண்டும் மலினமான Honey Trap கார்த்திக் சுப்புராஜ்.

இளையராஜாவின் பாடல்களும் பின்னணி இசையிலும் பழைய வாசனை. நம் வாழ்க்கையில் சாத்தியமான உணர்வுச்சங்கள் சிலவற்றின் பின்னணியில் நாம் ஏற்கெனவே How to name it ஐ ஒலிக்க விட்டுவிட்டதால் இங்கே How else to name it அவ்வளவொன்றும் சுவாரசியப்படுத்தவில்லை.

முத்துக்குமார் மற்றும் கீர்த்தி சுரேஷ் நன்றாக நடித்திருந்தார்கள். நாயகர்கள் இருவருடையதும் பெரிய நுட்பங்கள் இல்லாத ஆனால் ஏற்றுக்கொள்ளக்கூடிய நடிப்பு.

தமிழ் சினிமாவின் வழக்கத்திலிருந்து விலகிய ஒரு கதையைக் கொண்டு உரையாடலை உருவாக்கியிருக்கும் கார்த்திக் சுப்புராஜின் முயற்சி முக்கியமானது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிறுகதை எழுதுவது எப்படி

பருவத்தின் பேரொளி - The Museum of Innocence

நம்பிக்கையுணர்வின் மீதான சூதாட்டம் - கிறிஸ்டியன் பெட்ஸோல்டு (Christian Petzold) திரைப்படங்கள்