இனி தமிழ் எழுத்தாளர்களுக்கு மாஸ்டர் அந்தஸ்து கிடைக்குமா?
தமிழில் இனியெந்தக் கவிஞருக்கும் எழுத்தாளருக்கும் மேஜர் பொயட், மாஸ்டர் ரைட்டர் போன்ற அந்தஸ்த்து அமையாது என்ற என் கூற்று தனிநபர் திறமை, ஆளுமை ஆகியவற்றின் அடிப்படையிலானது அல்ல. சூழலில் இருப்பதாக நான் கருதும் சில புறவயமான காரணங்களின் அடிப்படையிலானது.
அவை,
1.வாசகருக்கு முன்னிருக்கும் அபரிமிதமான அயற்கவர்ச்சிக் கலைவளம்:
நவீன தமிழ் இலக்கியத்தில் தொடக்கத்திலிருந்தே மொழிபெயர்ப்புச் செயல்பாடும் இணைகோடாக இருக்கிறது. அதாவது, தமிழ்த்தன்மைக்கு வெளியே இருக்கும் அயற்கவர்ச்சிக்கு தமிழ் வாசகர்கள் புதியவர்களல்லர். ஆனால் இன்றைக்கு, இலக்கிய வடிவத்துக்கு அப்பால், பல்வேறு காணொளி ஊடக வடிவங்கள், நெடுந்தொடர்கள் மூலம் ஒருவருக்குக் கிடைக்கும் ”அயற்கவர்ச்சியான புத்தாக்க அனுபவங்கள்” அபரிமிதமானவை. உலகின் அத்தனை indigenous கலாச்சாரங்களின் கலைப் பொக்கிஷ வளத்தை அறிவதற்கும் உணர்வதற்குமான வாய்ப்புகள் முன்னிருக்கின்றன. இந்தச் சூழலில் மரபின் தொடர்ச்சியிலிருந்து அறுபடாத என்னவிதமான புதுமையை (Newness) தமிழ்க்கவிதையும் புனைவும் அளிக்க முடியும்?
2. தீர்ந்துபோன கருப்பொருட்கள் மற்றும் புதிய கருப்பொருட்களின் துலக்கமின்மை:
தமிழ் இலக்கியத்தில் தற்காலச் தமிழ்ச்சமூக வாழ்வியலின் அடிப்படையிலான பிரதானமான புதிய கருப்பொருள்கள் எதுவும் மேலெழுந்து வரவில்லை. எளிமையாகச் சொல்ல வேண்டுமெனில், வட்டார எழுத்து, பெண்ணெழுத்து, வரலாறு மற்றும் தொன்மத்தின் மீதான மீள்விசாரணை, கோட்பாட்டு எழுத்து போன்ற புறவயமான வகைமைகள் தீர்ந்துபோய் இப்போது அவற்றின் எச்சங்களையும் தேய்வழக்கான கருப்பொருட்களையும் எழுதிக் கொண்டிருக்கிறோம்.
3.தத்துவ/சித்தாந்த/கருத்தியல் சார்பின்மை:
நவதாராளவாதத்தின் குழந்தைகளான நம் தலைமுறையினரிடம் பெரிய தத்துவ, சித்தாந்த, கருத்தியல் சார்புகள் இல்லை, படைப்பில் அதனடிப்படையிலான விசாரணைகள் இல்லை. இங்கே எளிய அரசியல் அடையாளங்களைக் குறிப்பிடவில்லை, எழுத்தாளனின் தார்மீக அரசியல் மற்றும் கருத்தியல் நிலைப்பாடுகளைச் சொல்கிறேன். நமது படைப்புகள் அதிகமும் உணர்வுகள் மற்றும் கருத்துக்களின் அகநிலையில் (subjective) சுருங்கி விடுகின்றன, புறநிலைக்கு (Objective) விரிவதில்லை. படைப்பாளி திட்டமிட்ட சட்டகத்துக்குள் எழுத முடியாதுதான், ஆனால் ஒரு நல்ல படைப்பாளிக்கு ஒரு உள்ளுணர்வு உண்டு, அதைப் போஷித்துப் பராமரித்து விரிவாக்கி தத்துவம், கருத்தியல் போன்ற பெரிய சட்டகங்களுடன் இணைத்துக்கொள்வதில் தோல்வியடைகிறோம்.
4. துருவப்படுதல்:
பல்வேறு சிந்தனைப்பள்ளிகள் மற்றும் இலக்கிய மதிப்பீடுகளை ஊடறுத்து எல்லா பரப்புகளிலும் ஏற்பைப் பெறுவது இன்றைய படைப்பாளிக்குச் சாத்தியமில்லை. “ஒரு உரையாடலில் யாருமே கன்வின்ஸ் ஆக மறுக்கிறார்கள், எல்லோருமே அவர்களுடைய நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கிறார்கள்” என்றொரு கூர்மையான அவதானிப்பை சமீபத்தில் நண்பரொருவர் கூறினார். அதுதான் இன்றைய நிலைமை. இலக்கியச் செயல்பாட்டில் ஜனநாயகத்தன்மை வரவேற்கப்பட வேண்டியதே என்றாலும் அவை போலி மதிப்பீடுகளை உருவாக்கி துருவப்படுதலையும் ஏற்படுத்தியிருக்கிறது.
5. படைப்பாளியின் பிம்ப உடைவு:
வாசக வியப்பின் மூலம் உருவாகும் பிம்ப உருவாக்கத்துக்கான சாத்தியமின்றி வாசக சூழலுக்குள் இன்றைக்கு எழுத்தாளர் தன்னை அதிகமும் வெளிப்படுத்திவிடுகிறார். ஆளுமை என்ற இடத்தை அடையமுடியாதவாறு சமூக ஊடக வெளியில் அவருடைய சாமானியத்தன்மை குறுக்கே நிற்கிறது. நிச்சயம் எழுத்தாளருக்கு வாசக சமூகத்துடன் ஆரோக்கியமான தூரமும் இடைவெளியும் தேவைப்படுகிறது. வாசகர்கள்தான் தங்களால் ஈர்க்கப்பட வேண்டும் என்ற உண்மையை எழுத்தாளர்கள் பல சமயங்களில் மறந்துவிடுகிறார்கள்.
மாஸ்டர், மேஜர் என்பதெல்லாம் இங்கே வெறும் குறியீட்டுச் சொற்களே, அவை உண்மையில் படைப்பைத்தான் சுட்டுகின்றன, படைப்புகளின் வழியே ஒருவர் அப்படியான ஏற்பை அடைந்தால் அது இலக்கியத்துக்கு ஆரோக்கியமான விஷயமே.
கருத்துகள்