எழுத்தாளர் சமூக ஊடகங்களிலிருந்து வெளியேற வேண்டுமா?
ரசமட்டம் இணைய இதழில் ராணி திலக் எழுதிய “கவிஞன் – தரகன் – விற்பனைப் பிரதிநிதி” என்ற கட்டுரை இருக்கிறது. பதிவின் தேதி இல்லாததால் புதிய கட்டுரையா, பழையதா என்று தெரியவில்லை. நண்பர் இயற்கை சுரேஷ் அதைக் குறித்து நான் எழுதலாம் என்று சொன்னார்.
ராணி திலக் என் மரியாதைக்குரியவர், அவருடைய கவிதைகள் மீது பெரிய வசீகரம் உண்டு, குறிப்பாக கட்டிறுக்கமான மொழியைக் கொண்ட நாகதிசை தொகுப்பின் கவிதைகள் பிடித்தமானவை. புது எழுத்து சிற்றிதழின் வழியாகவும் ஸ்ரீநேசன் - கண்டாரத்தித்தன் - ராணி திலக் மூவருடைய கவிதைகளின் வழியாகவும் தமிழ்க் கவிதைக்குள் உத்தரமண்டல நிலவெளி துலங்கி வந்தது. மூவரையும் மீள்வாசிப்பு செய்யும்போது இப்போதைக்குப் புகையுருவில் இருக்கும் அந்தக் கவியுரு இன்னும் துலங்கி சொற்களாகத் திரளக்கூடும்.
சிற்றிதழ் இயக்கத்தின் வழியாகவே நான் இலக்கியத்தை அறிந்துகொண்டேன், அந்த அடையாளம் என்றைக்கும் உவப்பான விஷயமே. அதே சமயத்தில் இரு தசாப்தங்களுக்கு மேல் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றியதால் இயல்பாகவே தொழில்நுட்ப ஆதரவு மனநிலையும் உண்டு. ராணிதிலக்கின் நிலைப்பாடு டிஜிட்டல் வடிவத்துக்கு எதிரானதாக அல்லாமல் அதைப் படைப்பாளிகள் பயன்படுத்தும் விதம் குறித்தான விமர்சனமாகவே பார்க்கலாம். ராணி திலக் இந்தக் கட்டுரையில் சொல்லியுள்ள கருத்துக்களை ஒரு பார்வையில் ஏற்க வேண்டியிருந்தாலும் அவர் ”காலத்தைக்” கருத்தில் கொள்ளவில்லை என்று தோன்றுகிறது.
ராணி திலக்கின் பார்வை சிற்றிதழ் இயக்க நம்பிக்கைகளின் அடிப்படையிலான பார்வை, நாஸ்டாலஜியா தன்மையுடையது, படைப்புச் செயல்பாட்டை உன்னதமான அகவய அனுபவமாகக் கருதக்கூடிய பியூரிட்டன் பார்வை, கலைஞனின் தனிமையை வலியுறுத்தக்கூடியது. இந்தக் கட்டுரையில் அவருடைய கருத்துக்கள் பலவற்றில் எனக்கும் பிடிப்புண்டு. ஆனால் காலத்துக்கு தகவமைவது என்ற அடிப்படையில் “கலைக்கு ஒரு பெறுமதி உண்டு, ஆனால் புனிதம் கிடையாது” என்பதே என்னுடைய இன்றைய நிலைப்பாடு.
சிற்றிதழ் இயக்கத்தின் ஆன்மாவே அதன் இறுக்கமான மதிப்பீடுகள்தான், வெகுஜனக் கலைக்கும் சாரமிழத்தலுக்கும் நீர்த்துப் போவதற்கும் எதிரான நிலைப்பாடுகள் தான் சிற்றிதழ் இயக்கத்தை வரையறுக்கின்றன. அந்த மதிப்பீடுகளின் அடிப்படையில், டிஜிட்டல் ஊடகங்களில் படைப்பாளிகளின் இயங்குமுறையானது தன் படைப்பை விற்பனை செய்கிறவராகவும் அங்கீகாரத்துக்கும் விளம்பரத்துக்கும் விருதுக்கும் அலைகிறவராகவும் மாற்றி படைப்பூக்கத்தைச் சிதைத்துவிடுகிறது என்பது ராணி திலக்கின் வாதமாக இருக்கிறது.
சிற்றிதழ் உலகத்தில் எப்போதுமே சில விஷயங்களில் ஒவ்வாமை உண்டு, இதைக் குற்றச்சாட்டாக அல்லாமல் அவதானிப்பாகவே சொல்கிறேன், ஆயினும் அந்த ஒவ்வாமைகள்தான் அதனை இயக்கும் உந்துவிசைகள். கார்ப்பரேட் தன்மை, மீடியாத் தன்மை போன்ற சொற்கள் புழக்கத்தில் இருந்ததுண்டு. இன்றைய தேதியில், சிற்றிதழ் இயக்கத்தின் அங்கமாக இருந்தவர்களையும் உள்ளிட்டு பெரும்பாலான தமிழ் இலக்கிய உலகத்தினர் பேஸ்புக் போன்ற சமூக ஊடகத்தின் பகுதியாகத்தான் இருக்கிறார்கள். ராணி திலக் முன்வைக்கும் சமூக ஊடக ஒவ்வாமை ஒரு மெல்லிய குரலாக ஒலிக்குமளவுக்குத்தான் இன்றைய சூழல் இருக்கிறது.
படைப்பாளி தன் மெளனத்தை இழந்துவிடுவது, சுய தணிக்கை இன்மை, செயற்கையான பரபரப்பு, அவசரம் என்று அவர் குறிப்பிடும் பல விஷயங்கள் முக்கியமானவைதான். அதே நேரத்தில் இன்றைய டிஜிட்டல் ஊடகங்களின் இயல்பைப் புரிந்துகொள்ள வேண்டும், இவை உடனடித் தன்மை கூடிய தனிநபர் ஊடகங்கள், ஒரு விஷயத்தை பதிவதில் மட்டுறுத்தல் கிடையாது, கருத்தோ எண்ணமோ பூர்த்தியடையதற்கும் விரிவடைதற்கும் தேவையான மற்றமைக்கான வெளியும் காலமும் டிஜிட்டல் ஊடகங்களில் குறைவாக இருப்பதால் இயல்பாகவே தன்முனைப்பாக மாறிவிடுகிறது. பிறருடைய எதிர்வினைகள் நமது கருத்துக்களை மாற்றியமைப்பதற்கு அனுமதிக்காமல் பல சமயங்களில் நமது கருத்தை தற்காப்பதில் இறங்கிவிடுகிறோம்.
இந்தப் புதிய யுகத்தில் டிஜிட்டல் ஊடகங்கள் கோரும் புதிய நடத்தைகளை (etiquette) முந்தைய மதிப்பீடுகளைக் கொண்டு மதிப்பிட்டால் அது பெரும்பாலும் தவறாகவே தெரியும். இருபதாண்டுகளுக்கு முன்பு தமிழ் இலக்கியமும் சிற்றிதழ் இயக்கமும் அமைப்பளவில் வெகு சிறியது. அந்த சிறிய அமைப்புக்குள் மதிப்பீடுகளைப் பேசுவதும் முன்னிறுத்துவதும் எளிதாக இருந்தது. ஆனால் இன்றைக்கு டிஜிட்டல் ஊடகங்களின் வழியே இலக்கிய வெளி விரிவடைந்துவிட்டது. ஊடகங்களின் தன்மைக்கேற்ப புதிய நடத்தை வழக்கங்கள் உருவாகியிருக்கின்றன. ஒரு தொழில்நுட்பம் அதன் நோக்கத்தில் எத்தனிக்கப்படாத திசைகளையும் திறந்துவிடுகிறது.
டிஜிட்டல் ஊடகங்களை மூலதனமாக மட்டும் பயன்படுத்த வேண்டும், சந்தையாகப் பயன்படுத்தக்கூடாதென்றும் இன்றைக்கு படைப்பாளி தரகராகவும் விற்பனைப் பிரதிநிதியாகவும் மாறிவிட்டதாகவும் சொல்கிறார் ராணி திலக். படைப்பாளிகள் விற்பனைப் பிரதிநிதிகளாக மாறிவிட்டார்கள் என்று உறுதியாகச் சொல்லமுடியவில்லை, ஆனால் ஊடக வடிவம் திறந்துவிட்ட கட்டற்ற சுதந்திரத்தைக் கொண்டு தங்களை ”வழங்கிக்கொள்கிறார்கள்” என்பது நிதர்சனம். எந்தவொரு தனிநபருக்கும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளுதல் என்பது உளவியல் பூர்வமான விழைவே. முன்பு அமைந்திராத வடிவங்களும் வாய்ப்புகளும் இப்போது அமைந்திருக்கின்றன.
டிஜிட்டல் ஊடகங்களில் படைப்பாளிகளின் நடத்தைகள் குறித்த விமர்சனங்கள் பலவற்றை ராணி திலக் வைத்திருக்கிறார். அவற்றில் உண்மை இருக்கலாம். ஆனால் இது எல்லாச் சூழலிலும் இருப்பதுதானே? சிற்றிதழ் இயக்கத்தில் தன்னை முன்னிலைப் படுத்தாமை, கறாரான இலக்கிய மதிப்பீடுகள் போன்ற நேர்மறையான விஷயங்கள் இருந்திருக்கலாம், அதே நேரத்தில் படைப்பியக்கத்தின் மற்ற அலகுகளில் கீழ்மையான விஷயங்களே இருந்ததில்லையா? எத்தனையோ கதைகள் உண்டுதானே?
சுயத்தை அழிக்கக்கூடிய சமூக ஊடகங்களிலிருந்து வெளியேறினால்தான் நம்மையும் சமூகத்தையும் உன்னிப்பாக கவனிக்க முடியும் என்கிறார் ராணி திலக். இதிலொரு முரண் இருக்கிறது, இன்றைக்கு சமூகத்தைக் கவனிப்பது என்பது சமூக ஊடகத்தைக் கவனிப்பதையும் சேர்த்ததுதான். மற்றபடி ஒரு படைப்புக்கான ஆழத்தை அடைய படைப்பாளிக்கு மெளனமும் தனிமையும் தேவையென்று அவர் சொல்வதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இலக்கியம் பயணிக்கும் வடிவத்தில் நிகழ்கிற மாற்றத்தையும் நாம் முழுக்கப் புறக்கணிக்க முடியாது.
ஒற்றைப்படையாகப் பேசுவதைவிட விரிந்த விவாதத்தைக் கோரும் ராணி திலக்கின் இந்தக் கட்டுரை வைக்கும் குற்றச்சாட்டுகள் இலக்கியத்தின் மீதான கரிசனையினால் எழுந்தவையாகவே கருதுகிறேன்.
கருத்துகள்